மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - ஆபிரகாம் லிங்கன்

சுட்டி நாயகன் - ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் எனும் அந்தச் சிறுவன், அமெரிக்க பெர்ரி கவுண்டியில் (மாகாணம்) பிறந்தான். லிங்கன் என்பவரின் இரண்டாவது மகன். அந்த நான்கு வயதில், அம்மா நான்சி செல்லும் பண்ணை வேலைகளுக்குக் கூடவே செல்வான். அப்போதைய அமெரிக்கா, அடிமை முறையை ஆதரிப்பதாக இருந்தது.

ஒரு பண்ணை உரிமையாளர், தனது ஆடு, மாடுகள் கூட்டத்துடன் கறுப்பு அடிமைகளையும் சொத்தாக வைத்திருக்கலாம். உரிமையாளர் என்பவர் எப்போதும் வெள்ளைக்காரர். அடிமையாக இருந்தவர்கள் கறுப்பு இனத்தவர்கள். வெள்ளையரா கறுப்பரா எனத் தெரியாத, நான்சி போன்ற கலப்பின ஆட்களும் பண்ணையில் வேலை செய்வார்கள்.

ஆபிரகாம், இந்த நிறப் பாகுபாட்டை வெறுத்தான். அதை வெளிப்படையாகப் பேசுவான். தனது உணவை, கறுப்பு அடிமைகளோடு பகிர்ந்து சாப்பிடுவான். அதனால், அவனும் அவனது தாய் நான்சியும் பண்ணையிலிருந்து விரட்டப்பட்டார்கள்.

சுட்டி நாயகன் - ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் ஒன்பது வயதாக இருக்கும்போது, அம்மா விஷக் காய்ச்சலில் இறந்துவிட்டார். கறுப்பருக்கும் வெள்ளையருக்கும் பிறந்த கறுப்பினத்தவர் என்பதால், மருத்துவர்கள் வைத்தியம் பார்க்க மறுத்தனர். ஊரில் இருந்த ஒரே ஒரு வெள்ளைக்கார டாக்டரிடம், அம்மாவின் உயிரைக் காப்பாற்ற தந்தை கெஞ்சியதை அவனது மனம்  ஆழமாக உள்வாங்கிக்கொண்டது.

ரயில் பாதையில், இரும்புக் கம்பி கட்டும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டபோது, ஆபிரகாமுக்கு 10 வயதுதான். கடுமையாக அவன் உழைக்கவேண்டியிருந்தது. உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தன் தந்தையிடம் கொடுத்துவிடுவான்.

ஒரு நாள், ரயில் கம்பிவேலி கட்டும்போது, ஒரு வீட்டில் நீர் அருந்தச் சென்று, ஒரு முதியவரைச் சந்தித்தான். அவர், புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார். அவனுக்குத் தண்ணீர் கொடுத்தார். ஆபிரகாம், வேலைக்கு நடுவில் தினமும் அவரைத் தேடிப் போகத் தொடங்கினான். அவருக்குப் பணிவிடைகள் செய்து, அவரிடம் எழுதப் படிக்கக் கற்றான். கரிக்கட்டை, மரப் பலகை என எதிலும் எழுதுவான். நிலம்கூட அவனுக்கு நோட்டுப் புத்தகம் ஆனது.

சுட்டி நாயகன் - ஆபிரகாம் லிங்கன்

அந்த நாட்களில் அப்பாவிடம் முழுப் பணத்தையும் கொடுத்துவிடுவதால், தான் படிக்கப் புத்தகம் வாங்க முடியாமல் ஆபிரகாம் திணறினான். வாசிக்க வேண்டும் எனும் விருப்பம் அவன் மனதில் வெறியாக உருவெடுத்தது. மல்யுத்தம் செய்வதென்று முடிவெடுத்தான். அவனது உடல், கட்டுக்கோப்பாக இருந்தது. ஊரில் பலரை வென்றான். ‘தி கிளாரி கிளப் பாய்ஸ்’ எனும் குழுவின் முரட்டுத் தலைவரை, மல்யுத்தத்தில் தோற்கடித்து, அந்தப் பணத்தில் ஒரு புத்தகம் வாங்கினான். அது, பெஞ்சமின் ஃபிராங்க்ளினின் சுயசரிதை. அற்புதமான புத்தகம். அதோடு, மல்யுத்தம் செய்வதை நிறுத்தினான்.

புத்தக வாசிப்பைத் தனது வாழ்வின் பெரிய குறிக்கோளாக்கினான். ‘ஈசாப் கதைகள்,’ ஜான் பன்யானின் ‘தி பில்க்ரிம்ஸ் புரோக்ரஸ்,’  டேனியல் டெஃபோவின் ‘ராபின்சன் குரூசோ’ எனப் பல புத்தகங்களைத் தனது 12 வயதில் வாசித்தான். தேவாலயம் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தான்.  தனது 14-வது வயதில், ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜெப நிகழ்வின்போது திடீரென்று, ‘அன்பார்ந்தவர்களே...’ என்று சப்தமாக, ஒரு மேடைப் பேச்சை நிகழ்த்தினான்.

‘அனைவரும் சகோதரர்களாக வாழ்வோம்’ என்று அவன் முழங்கியபோது, அங்கே கூடி இருந்தவர்கள் அசந்துபோனார்கள். அன்று தொடங்கியதுதான்... ஆபிரகாம், தொடர் பேச்சாளனாகவும் தேர்ந்த படைப்பாளியாகவும் உயர்ந்தான்.

அமெரிக்காவின் 13-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனாக உயர்ந்தார். கறுப்பர் அடிமை முறையை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை இயற்றிய அவர், ஒரு சுட்டி நாயகனே!