மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மெள்ளக் கொல்லும் மென்பானம் !கே.யுவராஜன் படங்கள் : பிள்ளை

மாயா டீச்சருடன் கடை வீதிக்கு வந்திருந்த சுட்டிகள், அந்தக் கடையில் பழச்சாறு குடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.

“180 ரூபாய் ஆகிருச்சு. நான் சொன்னபடி கூல்டிரிங்ஸ் வாங்கியிருந்தா, 100 ரூபாய்க்குள்ளே முடிஞ்சிருக்கும்” என்றாள் ஷாலினி.

“பணத்தை மிச்சப்படுத்த, உடம்பைக் கெடுத்துக்க முடியாது ஷாலினி” என்றார் டீச்சர்.

“கூல்டிரிங்ஸ் அவ்வளவு ஆபத்தானதாக இருந்தால், எப்படி கோடிக்கணக்கில் விற்குது? உலகம் முழுக்க குடிக்கிறாங்களே” என்றான் அருண்.

“நிறையப் பேர் பயன்படுத்துறதாலே, அது சரியானதாக இருக்கணும்னு கட்டாயம் இல்லை அருண். சாஃப்ட் டிரிங்க்ஸ் எனப்படும் மென்பானங்களில் என்னவெல்லாம் சேர்க்கப்படுது, அதன் தன்மைகள் என்ன என்று பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும்” என்ற டீச்சர், ஒரு குளிர்பான பாட்டிலை வாங்கினார்.

அவர்கள் மாயா டீச்சர் வீட்டுக்கு வந்தார்கள். மந்திரக் கம்பளத்தை எடுத்துவந்த டீச்சர், “இந்தக் குளிர்பானத்துக்குள்ளே போய், அதில் என்னவெல்லாம் இருக்குனு பார்க்கலாம்” என்றார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

“இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா, ஸ்விம்மிங் சூட் கொண்டுவந்திருப்பேனே” என்று சிரித்தான் கதிர்.

மந்திரக் கம்பளம் அவர்களைக் குட்டி உருவங்களாக மாற்றி, குளிர்பானத்துக்குள் இறக்கியது. சின்னச் சின்னக் குமிழ்களுக்கு நடுவில் மிதந்தவாறு சென்றார்கள்.

“இந்தக் குமிழ்கள் எப்படி உருவாகுது டீச்சர்?” என்று கேட்டாள் கயல்.

“இதுதான் எல்லா மென்பானங்களுக்கும் அடிப்படையான கார்பனேட்டட் நீர் (Carbonated water) என்கிற சோடா வாட்டர். அதாவது, கார்பன்-டை-ஆக்ஸைடு சிதைவதால் உருவாகும் வாயு. இங்கிலாந்தில் லீட்ஸ் நகருக்கு அருகில் வசித்தவர், ஜோசப் பிரிஸ்ட்லே (Joseph Priestley). பார்லியைப் புளிக்கவெச்சு உணவுப் பொருள்களைத் தயாரிப்பது அந்தப் பகுதியில் பிரபலம். காய்ச்சிய பார்லியைப் பெரிய பெரிய பீப்பாய்களில் வெச்சிருப்பாங்க. அதிலிருந்து வெளிப்படும் கரியமில வாயு, பீப்பாயின் மூடியில் நீராவி போல தங்கியிருக்கும். ஜோசப், அதைக் குடுவையில் பிடிச்சு அதோடு தண்ணீரைச் சேர்த்தார். 1767-ல் அவர் உருவாக்கியதுதான் சோடா” என்றார் டீச்சர்.

“பன்னீர் சோடா, கலர் சோடா என க்ரீன் கலர் கண்ணாடி பாட்டிலில் கிராமங்களில் விற்பதைப் பார்த்திருக்கேன். எங்க தாத்தா அதை விரும்பிக் குடிப்பார்” என்றாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

“அது, இயற்கையான கலவையாக இருந்த வரையில், சுவையோடு நல்ல பானமாகவும் இருந்துச்சு. ஆனால், பெரிய அளவில் வணிக உணவாக மாறிய பிறகு அதன் குணமும் மாறிப்போச்சு. இப்போ, கிடைக்கிற குளிர்பானங்களில் இருப்பது சர்க்கரை, காஃபின் மற்றும் பல்வேறு ரசாயனங்கள்தான்.  சுவையில் வித்தியாசம் காட்ட, உடம்பைப் பாதிக்கும் பல்வேறு ரசாயனங்களை அளவுக்கு அதிகமாகச் சேர்க்கிறாங்க.
சாதாரணமாக, 300 மில்லி குளிர்பானத்தில் 10 டீஸ்பூன் சர்க்கரை இருக்கும். அந்த அளவுக்கு சர்க்கரை ஒரு குளிர்பானம் மூலம் நம்ம உடம்புக்குள்ளே போகும்போது, அடுத்த 20-வது நிமிடத்தில், நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்.

அதே நேரம், குளிர்பானத்தில் இருக்கும் காஃபின், ரத்தத்தின் அழுத்தத்தை அதிகமாக்கும். அதற்கு ஏற்ற மாதிரி உடல் உறுப்புகள் வேகமாகச் செயல்படும். அதனால்தான், குளிர்பானம் குடிச்சதும் விளம்பரங்களில் காண்பிக்கிற மாதிரி உற்சாகம் ஏற்படுது. ஆனால், கொஞ்ச நேரத்தில் இந்தச் சர்க்கரையும் காஃபினும் குறைஞ்சு, பழைய நிலைக்கு வந்துடும். இதனால், உடம்பு சோர்வாகி, மறுபடியும் குளிர்பானம் குடிக்கத் தோணும்” என்றார் டீச்சர்.

“டீச்சர், இந்த மாதிரி பானங்களில் நம்ம பல் ஒன்றைப் போட்டுவெச்சா, கொஞ்ச நாளில் அது கரைஞ்சுடும்னு கேள்விப்பட்டிருக்கேன். அது உண்மையா?” என்று கேட்டான் அருண்.

“ஆமாம் அருண், ஒவ்வொரு குளிர்பானத்திலும் தனித்தன்மையான இனிப்புச் சுவைக்காக செயற்கையான ரசாயனங்களைச் சேர்ப்பாங்க. குளிர்பானம் தயாரான நாளில் இருந்து கடைக்குப் போய், ஒருவர் வாங்கிக் குடிக்கிற வரை அந்தச் சுவை மாறாமல் இருக்கணும். அதுக்காக, சிட்ரிக் அமிலம், மற்றும் போஸ்போரிக் அமிலம் (Phosphoric Acid) போன்றவற்றை சேர்க்கிறாங்க. அரிக்கும் தன்மைகொண்ட இந்த அமிலங்கள், நம் பற்களில் இருக்கும் எனாமலை அரித்துவிடும்.

தொடர்ந்து குடித்தால், பற்களைப் பாதிப்பதோடு, எலும்பிலும் கால்சியக் குறைபாட்டை ஏற்படுத்தும். இப்படி அரிக்கப்பட்டவை, சிறுநீரகக் குழாயில் சேரும். இதனால், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும்” என்றார் டீச்சர்.

குளிர்பானத்தில் இருக்கும் வேறு சில ரசாயனக் கலவையை மந்திரக் கம்பளம் அவர்களுக்குக் காட்டியது.

“இப்போ, நீங்க பார்த்தது பென்ஸாயிக் அமிலம் (Benzoic Acid) என்கிற ஓர் அமிலம். இது எல்லா வகை பானங்களிலும் இருக்கு. பாட்டிலிலும் டின்னிலும் அடைக்கப்பட்ட பானம் கெட்டுப்போகாமல் இருக்க, இந்த அமிலத்தைச் சேர்க்கிறாங்க. இது, மனித உடம்பில், இத்தனை மில்லிகிராம்தான் இருக்க வேண்டும் என்று ஓர் அளவு இருக்கு. அதைத் தாண்டும்போது, ஆஸ்துமாவை உருவாக்கும். குளிர்பானத்தைத் தொடர்ந்து குடிக்கிறவங்களுக்கு, இந்த பென்ஸாயிக் அமிலம் அதிகமாகிவிடும்” என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

“மேங்கோ, ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய குளிர்பானங்களைக் குடிச்சாலும் பிரச்னைதானா?” என்று கேட்டாள் கயல்.

“உண்மையில், பழத்தின் சதவிகிதம் அதில் ரொம்ப ரொம்பக் குறைவு அருண். மாம்பழம் போலவோ, ஆரஞ்சு போலவோ நறுமணம் மற்றும் நிறம்கொண்ட ரசாயனங்கள்தான் அதிகம் சேர்க்கப்படுகின்றன. அந்த நிறம் மாறிவிடாமல் இருக்க, சல்ஃபர்- டை- ஆக்ஸைடு சேர்க்கப்படுகிறது. செந்நிறமான பானத்துக்கு ஓர் அமிலம், மஞ்சள் நிறத்துக்கு ஓர் அமிலம் என எல்லாமே ரசாயனங்கள்தான். ‘சுத்தமான மென்பானம்’ என்று சொல்லி விற்கப்படும் ‘ப்யூர் கோலா’, ‘டயட் கோலா’ போன்றவையும் ரசாயனக் கலவையே.இது, அதிக விலை கொடுத்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளும் செயல்தான். தூக்கமின்மை, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், நரம்பு மண்டலம் பாதிப்பு எனப் பல்வேறு பாதிப்புகளை மென்பானங்களில் இருக்கும் ரசாயனங்கள் உருவாக்கும்” என்றார் டீச்சர்.

“இவ்வளவு பாதிப்பு உள்ள குளிர்பானங்களை விற்பதற்குத் தடை செய்யலாமே” என்றான் கதிர்.

“குளிர்பானங்களை முற்றிலும் தடை போட முடியாது கதிர். ஏன்னா, அது மக்களால் பயன்படுத்தப்படும் உணவுப் பொருள். அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, அமிலங்கள் போன்றவை மனித உடம்புக்குத் தேவைப்படும் விஷயங்கள். எந்தெந்த அமிலங்கள் எந்த அளவுக்கு இருக்கலாம் என்று கட்டுப்பாடுதான் போட முடியும். குளிர்பானம் தயாரிப்பவர்கள், ‘நாங்க அப்படித்தான் சரியான அளவில் சேர்க்கிறோம்’ எனச் சொல்லி, அனுமதி வாங்குறாங்க. ஆனால், வணிகப் போட்டியைச் சமாளிக்க, அளவை அதிகமாக்கிடுறாங்க. இதை, அரசு தீவிரமாகக் கண்காணிச்சு, அளவு மீறும்போது நடவடிக்கை எடுக்கணும்.

சில நாடுகளில் இதைக் கடுமையாகக் கடைப்பிடிக்கிறாங்க. சில வகைக் குளிர்பானங்களுக்குத் தடை இருக்கு. ஆனால், சில நாடுகளில் அரசு, அந்த அளவுக்கு தீவிரமாக இருப்பது இல்லை. அதுக்கு, அரசியல், பணம் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கு. துரதிர்ஷ்டவசமா நம் நாடும் அந்த லிஸ்ட்டில் இருக்கு. அதனால், இந்த வகைக் குளிர்பானங்களைக் குடிக்கக் கூடாது என ஒவ்வொரு தனி மனிதரும் முடிவு எடுக்கணும். இயற்கையில் கிடைக்கும் பழரசங்கள், இளநீர், மோர் குடிப்பதே நல்லது” என்றார் டீச்சர்.

“நல்லாப் புரிஞ்சது டீச்சர். இதுக்கு மேலே இந்த இடத்தில்கூட இருக்க வேண்டாம். வாங்க போகலாம்” என்றாள் ஷாலினி.