Published:Updated:

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை அவசியமா?

கேட்கும் திறன்

காதின் உள்புறத்தில் ரோமத் திசுக்கள் இருக்கும். ஒலியைக் கேட்கும்போது அவற்றில் அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வானது நடுக்காதில் எக்கோ போன்று உணரச் செய்யும்.

Published:Updated:

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை அவசியமா?

காதின் உள்புறத்தில் ரோமத் திசுக்கள் இருக்கும். ஒலியைக் கேட்கும்போது அவற்றில் அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வானது நடுக்காதில் எக்கோ போன்று உணரச் செய்யும்.

கேட்கும் திறன்

Doctor Vikatan: எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றன. பிரசவம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்கிறாள் என் தோழி. என் குழந்தைக்கு அப்படி எந்த டெஸ்ட்டும் செய்யவில்லை. ஆரோக்கியமாகப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த டெஸ்ட் அவசியமா? இது குழந்தைக்கு வலியை ஏற்படுத்தாதா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.

எஸ். ஸ்ரீநிவாஸ்
எஸ். ஸ்ரீநிவாஸ்

பிறக்கும் குழந்தைகள் அனைவருக்குமே கேட்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன், குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குள் இந்த டெஸ்ட் செய்யப்பட வேண்டும். ரிஸ்க் பிரிவில் உள்ள குழந்தைகள் என்றில்லாமல், பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த டெஸ்ட் அவசியம்.

`ஓஏஈ' (Otoacoustic Emissions (OAE) எனப்படும் இந்தப் பரிசோதனையில், குழந்தையின் காதின் உள்புறமான காக்ளியா எனும் பகுதி சரியாக இயங்குகிறதா என்று கண்டறியப்படும். காதின் உள்புறத்தில் ரோமத் திசுக்கள் இருக்கும். ஒலியைக் கேட்கும்போது அவற்றில் அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வானது நடுக்காதில் எக்கோ போன்று உணரச் செய்யும். அதைத்தான் `ஓஏஈ' டெஸ்ட் அளவிடும். அதை வைத்து குழந்தைக்குக் கேட்கும் திறன் நார்மலாக உள்ளதா அல்லது அதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது உறுதிசெய்யப்படும்.

பிறந்த குழந்தைக்குப் பரிசோதனை என்றதும், இதைப் பெரிதாக நினைத்து பயப்படத் தேவையில்லை. இயர்போன் போன்ற கருவியைக் குழந்தையின் காதில் வைத்துச் செய்யப்படுகிற மிக எளிமையான பரிசோதனை இது. இந்தப் பரிசோதனையைச் செய்யும்போது குழந்தை அமைதியாக இருக்க வேண்டும் என்பதால் அதற்கு முன் குழந்தைக்குப் பால் ஊட்டிவிட வேண்டும். இந்த டெஸ்ட் வலியில்லாதது. இதில் `பாஸ்' அல்லது `ரெஃபர்' என ரிசல்ட் வரும். `ரெஃபர்' என்று வந்தால் அதே டெஸ்ட்டை 6 வாரங்கள் கழித்து மீண்டும் செய்ய வேண்டியிருக்கும்.

குழந்தை
குழந்தை
Pixabay

இரண்டாவது முறை டெஸ்ட்டின் ரிசல்ட்டைப் பொறுத்து, தேவைப்பட்டால் குழந்தைக்கு `பிரெயின்ஸ்டெம் இவோக்டு ரெஸ்பான்ஸ் ஆடியோமெட்ரி (Brainstem Evoked Response Audiometry (BERA) என்ற இன்னொரு டெஸ்ட் பரிந்துரைக்கப்படும். பிறந்த உடனேயே செய்யப்படுகிற இந்த டெஸ்ட்டால், ஒருவேளை குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் சீக்கிரமே சிகிச்சையைத் தொடங்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.