சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் கால் அகற்றும் நிலையில் உயிருக்குப் போராடிய 9-ம் வகுப்பு மாணவி, தன் உயிரைக் காப்பாற்ற தமிழக அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்தது அனைவரையும் கலங்க வைத்தது. இப்போது, அரசு சார்பில் அவருக்கு உதவி கிடைத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பனங்காட்டுத்தெரு அம்மன் நகரில் வசிப்பவர் கனிமொழி. இவரின் கணவர் முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரின் மகள் அபிநயா, சீர்காழியிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
அபிநயாவுக்கு, கால்களில் எஸ்.இ.எல். என்ற அரிய வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் தீவிரமானால் இவரது இரண்டு கால்களையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்க, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயாவுக்கு மருத்துவச்செலவு செய்ய முடியாமல் அவரின் அம்மா போராடி வந்தார்.
அபிநயாவின் அம்மா கனிமொழி, ``எத்தனையோ குடும்பங்களைக் காப்பாற்றும் தமிழக முதல்வர், என் மகள் கால்களை இழக்காமல் காப்பாற்றி தரணும்" எனக்கண்ணீர் மல்க கூறினார்.

அபிநயா பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடனடியாக அபிநயாவை சென்னைக்கு வரவழைத்து ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார். அங்கு மாணவி அபிநயாவுக்கு முதற்கட்ட சிகிச்சையளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அபிநயா. தற்போது அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைபெற்று வரும் அபிநயாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு சிறந்தமுறையில் சிகிச்சையளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.