Published:Updated:

இந்த நோய்க்குத் தீர்வில்லை... கருணைக்கொலை வரை சென்ற பெற்றோர்... பாவேந்தனுக்கு நாம் எப்படி உதவலாம்?

பாவேந்தன்

பாவேந்தனின் குறைபாட்டுக்குத் தீர்வே இல்லை என்று தெரிந்துவிட்ட நிலையில், மகன் அனுபவிக்கும் வேதனைகளைப் பொறுக்காத பெற்றோர் கனத்த மனத்துடன், தீவிர பரிசீலனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர்.

இந்த நோய்க்குத் தீர்வில்லை... கருணைக்கொலை வரை சென்ற பெற்றோர்... பாவேந்தனுக்கு நாம் எப்படி உதவலாம்?

பாவேந்தனின் குறைபாட்டுக்குத் தீர்வே இல்லை என்று தெரிந்துவிட்ட நிலையில், மகன் அனுபவிக்கும் வேதனைகளைப் பொறுக்காத பெற்றோர் கனத்த மனத்துடன், தீவிர பரிசீலனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர்.

Published:Updated:
பாவேந்தன்

கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ளது திம்மசமுத்திரம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த திருமேனி - சசிகலா தம்பதிக்குப் பாவனா, சக்தி என இரண்டு மகள்களும், பாவேந்தன் என ஒரு மகனும் இருக்கிறார்கள். திருமேனி தையற்கலைஞர்; சிறிது காலம் வெளிநாட்டிலும் வேலை பார்த்திருக்கிறார். தொழிலில் கெட்டிக்காரரான திருமேனி, சிறுகச் சிறுகச் சேமித்து ஒரு வீட்டைக் கட்டியுள்ளார். குடும்பத்தை ஓரளவு மேலே கொண்டுவந்து விட்டோம் என்ற நிம்மதியில், குழந்தைகளின் படிப்பு சார்ந்து தன்னுடைய கவனத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்த நிலையில்தான் திருமேனியின் குடும்பம் மிக மோசமான பிரச்னைகளை எதிர்கொள்ள ஆரம்பித்தது.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்தபடியாக பாவேந்தன் பிறந்தான். முதல் இரண்டு குழந்தைகளும் எந்தப் பிரச்னையும் இன்றி ஆரோக்கியமாக வளர்ந்துவர, பாவேந்தன் பிறந்த முதல் நாளிலிருந்தே உடலில் பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிஸ்சார்ஜ் ஆகிவந்த மறுநாள் பாவேந்தனுக்குக் கையெல்லாம் உதறல் எடுத்திருக்கிறது. பால்கூட குடிக்காமல் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறான். கண் விழிக்கும்போதெல்லாம் நடுக்கம் வந்துகொண்டே இருந்திருக்கிறது. பயந்துபோன பெற்றோர், பிரசவம் பார்த்த ஆஸ்பத்திரிக்கேத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

பாவேந்தன்
பாவேந்தன்
“உங்க மகனுக்கு வலிப்பு வருது, ஏதாவது ஒரு சில்ட்ரன்ஸ் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க. எதுவா இருந்தாலும், ஆறு மணி நேரத்துக்குள்ள சிகிச்சை கொடுக்க ஆரம்பிக்கணும். இல்லாட்டி பெரிய பிரச்னை ஆகிடும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

மனதை இழக்காத திருமேனியும் சசிகலாவும் மகனை மீட்கத் தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டனர். இப்படியான தொடர் பரிசோதனைகளின் விளைவாக Hypoxic Ischemic Encephalopathy (HIE) என்ற குறைபாட்டால் பாவேந்தன் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது கண்டறியப்பட்டது. இது குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாத ஒரு நிலை என்ற செய்தி இடியாய் வந்து இறங்கியது.

குழந்தைப் பிறப்பின்போது, குழந்தையின் மூளைக்குப் போதுமான அளவு ரத்தமும் ஆக்ஸிஜன் ஓட்டமும் இல்லாமல் இருப்பது Hypoxic Ischemic Encephalopathy (HIE) நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தையின் மூளை செல்களுக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் போதிய அளவுக்குச் செல்லாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளால் உட்காரவோ, நிற்கவோ முடியாது. ஒரு நாளில் பலமுறை வலிப்பு ஏற்படும்; எப்போதும் ஏற்படும் என்று துல்லியமாகத் தெரியாது. தூக்கமும் விழிப்பும் சீராக இருக்காது. பேச்சு வராது. பசி, அழுகை, கோபம் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாது. மூளை முடங்கியிருப்பதால், அதிலிருந்து எந்தச் செய்தியும் சரியாக உடலின் மற்ற உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. அதனால் மற்றவர்களைப் போல் இயல்பாக உடல் உறுப்புகளை இயக்க முடியாது. எனவே எல்லா செயல்பாடுகளுக்கும் 100 சதவீதம் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கவேண்டும். மருத்துவ உலகம் Persistent Vegetative State (PVS) என்று இதற்குப் பெயரிட்டுள்ளது. தற்போது 12 வயதாகும் பாவேந்தன் இந்த எல்லா பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளான்.

“கட்டுப்படுத்த முடியாத 10, 20 வலிப்புகள் ஒரு நாள்ல பாவேந்தனுக்கு ஏற்படுது. அதிகபட்சமா ஒருநாளைக்கு 150 வலிப்பு வரை பாவேந்தனுக்கு ஏற்பட்டிருக்கு. இதுக்கு மருந்துகள் கொடுத்தாலும், கட்டுப்படுத்துதே தவிர தடுக்க மாட்டேங்கிது,” என்று வேதனை மேலிடப் பேசுகிறார் அவனின் தந்தை.

பாவேந்தன் வளர வளர பிரச்னைகள் தீவிரமடையத் தொடங்கின. உடல் மட்டும் வளரும் நிலையில், முழுமையான கவனமும், பராமரிப்பும் பாவேந்தனுக்குத் தேவை என்பதால், நாள் முழுக்க பெற்றோர் இருவரும் அவனுடனேயே இருக்கும் சூழல் உருவானது. நாளாக நாளாகப் பராமரிப்புக்கான செலவுகள் திருமேனியால் சமாளிக்க முடியாத நிலையை எட்டின. இத்தனை ஆண்டுகள் சம்பாதித்த பணம், கட்டி முடித்த வீடு, கையிலிருந்த நகை என அனைத்தும் பாவேந்தனின் பராமரிப்புக்காகச் செலவுக்காக கரைந்தது. தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலையில், அதுவும் நொடித்துப் போனது. வீட்டில் மகனின் பார்வையிலேயே இருந்து ஒன்றிரண்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் திருமேனி.

பாவேந்தனின் குறைபாட்டுக்குத் தீர்வே இல்லை என்று தெரிந்துவிட்ட நிலையில், மகன் அனுபவிக்கும் வேதனைகளைப் பொறுக்காத பெற்றோர் கனத்த மனத்துடன், தீவிர பரிசீலனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர். கருணைக் கொலை!
சசிகலா, பாவேந்தன், திருமேனி
சசிகலா, பாவேந்தன், திருமேனி

சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இறுதிவரை மாண்புடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21 உறுதி செய்கிறது. ஆகவே மாண்புடன் இறப்பதற்கான உரிமையையும் இது வழங்குகிறது என்று கூறியிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் மகனின் வேதனையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கருணைக் கொலை செய்ய அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமேனி - சசிகலா தம்பதியினர் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் இதை ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழு மருத்துவர் குழு ஒன்றை நியமித்து, பாவேந்தனின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கக் கேட்டுக்கொண்டது. அந்த மருத்துவர் குழு, பாவேந்தனின் நிலையை முழுமையாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட சில நேரங்களில் பாவேந்தன் கண் சிமிட்டல் போன்ற குறைந்தபட்ச எதிர்வினைகளைப் புரிகிறான் என்று அறிக்கை சமர்ப்பித்தது. அதனால் கருணைக்கொலை செய்வதற்கான வாய்ப்பை நிராகரித்தது.

இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனிருதா மெடிக்கல் ஆர்கனைசேஷன் (AMOL), பாவேந்தனுக்குச் சிகிச்சையளிக்கத் தாமாக முன்வந்தது. ஓராண்டுக் காலம் நீடித்த இந்த மருத்துவப் பராமரிப்பு, பாவேந்தன் முன்பிருந்த நிலைக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையில், பாவேந்தனை வீட்டுக்கு அழைத்துவந்தனர். இரண்டு பெண் குழந்தைகளின் கல்வி, பாவேந்தனைப் பராமரிப்பதற்கான செலவால் ஏற்பட்ட கடன், அடமானத்தில் விழுந்த வீடு எனத் திருமேனியும் சசிகலாவும் கடுமையான உடல், மனச் சோர்வில் வீழ்ந்தனர்.

“பாவேந்தனைப் பாத்துக்க ஒரு மாசத்துக்கு குறைஞ்சபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகுது. ஆஸ்பத்திரிக்கு கார்லதான் கூட்டிட்டு போக முடியும்ங்கிறதால, மருத்துவச் செலவுகளவிட வாகனத்துக்கான செலவு தாங்க முடியாத அளவுக்கு இருக்கு. தொழில் நொடிஞ்சு போன நிலைல, பிள்ளைங்க படிப்புக்கும் சரியாக செலவு பண்ண முடியல. கருணைக் கொலைக்கான வழக்குல எங்களுக்கு உதவுற வக்கீல் கவிதாதான் பொருளாதார ரீதியாவும் எங்களுக்கு உதவிட்டு இருக்காங்க. ஒரு வருஷம் எங்க மகனுக்கு மருத்துவம் பாத்த அமோல் மருத்துவமனைக்கும் நன்றி சொல்லனும்” என்று வேதனையும் நன்றியும் கலந்துப் பேசுகிறார் திருமேனி.

கருணைக் கொலைக்கான வாய்ப்பில்லாமல் போன நிலையில், இதுபோன்ற முற்றிலும் மீள வழியில்லாத குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றில் பாவேந்தனை ஒப்படைக்க விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, திருமேனியும் சசிகலாவும் அதை விரும்பவில்லை. மேலும், கருணைக் கொலைக்கான முன்னெடுப்பு திருமேனியில் குடும்ப, நட்பு வட்டத்தில் கடுமையான வசைகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது; இதனால் தொடர் அவதூறுகளுக்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றனர்.

பாவேந்தன்
பாவேந்தன்

“எங்க நெலம தெரியாம, எல்லாரும் எங்கள ரொம்ப அசிங்கப்படுத்துறாங்க... என்னாலயோ, என் பிள்ளைங்கனாலயே வெளிய போக முடியல... ரொம்ப வேதனையா இருக்கு” என்று கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலைக்குச் சென்றுவிட்ட திருமேனியைத் தேற்றுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

தன்னுடைய குழந்தையின் மீட்புக்காக அரசிடம் சென்ற திருமேனி, தன் துயரங்களின் விளைவாக இறுதி வேண்டுகோள் ஒன்றை அரசிடம் முன்வைக்கிறார்: “பாவேந்தன் மாதிரி எத்தனையோ குழந்தைங்க தமிழ்நாட்ல இருக்காங்க... இந்த மாதிரி கஷ்டப்படுற குழந்தைகளுக்குக் கருணைக் கொலைன்றது கடைசி தேர்வுதான். ஆனா, இந்தக் குழந்தைங்களால, பொருளாதார ரீதியா பின்னடைவுல இருக்கிற எங்களைப் போன்ற பெற்றோர் அன்றாடம் அனுபவிக்கிற வேதனை சொல்லி மாளாதது. ஆக, பாவேந்தன் மாதிரியான எல்லா குழந்தைங்களோட தொடர் பராமரிப்புக்கும் அரசு உதவி செய்யணும்னு கேட்டுக்குறேன்!”

பாவேந்தனின் துயர் துடைக்க உதவுவோம்!

Note: பாவேந்தனின் பராமரிப்பு மற்றும் மருத்துவத் தேவைக்காக, அவரின் பெற்றோர் பிறரின் உதவியை எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக உதவ முன்வரும் வாசகர்கள், 'help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். இவர் குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism