Published:Updated:

குழந்தைகளை அதிகம் மிரட்டினால் `அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' ஆபத்து! அலெர்ட்

குழந்தை
குழந்தை ( Photo by Sharon McCutcheon from Pexels )

இன்றைய உலகம் பொருளாதாரத்தை முன்வைத்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. பணம் ஒன்றையே பெரிதாக முன்வைப்பதால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் பெற்றோர், குழந்தையிடையேயான உறவுகூட தாமரை இலைத் தண்ணீராகிவிட்டது.

ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக்கொள்வதுகூட அரிதாகிவிட்டது. அப்படியே பார்த்துக் கொண்டாலும் `ஓவனில் சாண்ட்விச் இருக்கு', `ரிப்போர்ட் கார்டுல சைன் போட்டுட்டேன்', `ஃப்ரிட்ஜுல ஜூஸ் வெச்சிருக்கேன்' என்பதுபோன்ற ரன்னிங் கம்யூனிகேஷன்கள்தான் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே மனதளவில் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குழந்தை
குழந்தை

குழந்தைகள், பெற்றோரிடையே மனரீதியாக ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வது எப்படி? பெற்றோர் தங்கள் குழந்தைகளை எவ்வாறு அரவணைப்பது? மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

குழந்தை
குழந்தை

"பொதுவாகவே குழந்தைகள் வளர வளர தங்களைச் சுற்றியுள்ள சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள். நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். அதனால், பெற்றோர் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், எரிச்சல், கோபத்தைக் குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும். அதைப் புரிந்துகொள்ளும்போது குழந்தைகள் பெற்றோருக்கு உதவ முன்வருவார்கள். மாறாக அவர்களுக்குப் புரியவைக்காவிட்டால் அவர்களிடமிருந்து வரும் எதிர்வினைகள் வேறுவிதமாக இருக்கும்.

உதாரணமாக பயம், கோபம், சோகம், படபடப்பு போன்றவை வெளிப்படும்.

* பயம் – பெற்றோருக்கு ஏற்படும் மனபாதிப்புகள் தங்களை எந்த வகையிலாவது பாதித்துவிடுமோ என்ற பயம் குழந்தைகளிடம் ஏற்படலாம்.

* கோபம் - எதற்கெடுத்தாலும் பெற்றோர் கோபமடைந்தால், பதிலுக்குக் குழந்தைகளும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

* குற்றவுணர்வு – தன்னால்தான் தொந்தரவு ஏற்படுகிறது என்று எண்ணி தன்னைத்தானே குற்றவாளியாகக் கருதும் குழந்தைகளும் உண்டு.

பயம்
பயம்

* சோகம் – குழந்தைகளுக்குப் பெற்றோர்தான் உலகம் என்பதால், அவர்கள்மீது அதீத அன்பு வைத்திருப்பார்கள். எனவே, அவர்கள் சோகமாயிருக்கும்போது குழந்தைகளும் சோகமாகிவிடுவார்கள்.

* படபடப்பு – பெற்றோரது மாற்றுச் செயல்பாடுகளால் ஒருவித பயத்துக்குள்ளாகி நீண்டநேரம் அழுவது, படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களால் படபடப்பை வெளிப்படுத்துவார்கள்.

* ஆதரவு – சில புத்திசாலிக் குழந்தைகள் பெற்றோருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். பெரியவர்களைப்போல `நீங்க ரெஸ்ட் எடுங்க; நான் வேலை செய்றேன்... இனிமே குறும்பு செய்யாம இருப்பேன்' என்று கூறுவதும் தங்களது தவறுகளைத் தாங்களே திருத்திக் கொண்டு அதைச் சொல்லி பெற்றோரை உற்சாகப்படுத்துவதும் உண்டு.

போக்குவரத்துப் புகையினால் ஆஸ்துமா பாதிப்பு: தவிக்கும் குழந்தைகள்! #VikatanInfographics
பயம்
பயம்

படபடப்பைத் தவிருங்கள்!

குழந்தைகள் எதையும் உற்றுநோக்கும் திறன் பெற்றவர்கள். குறிப்பாக தங்களின் பெற்றோரின் நடவடிக்கைகளை உளவுத்துறைபோல கவனிப்பார்கள். ஏதேனும் ஒரு கண்ணாடிக் கோப்பை தவறி கீழே விழுந்தாலும் அதற்காகக் கத்தி கூச்சலிடும் பெற்றோரே அதிகம். என்ன கத்தினாலும் உடைந்த கோப்பை திரும்பி ஒட்டப்போவதில்லை. ஆகவே, குழந்தைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், கவனமாகச் செயல்படக் கற்றுத் தருவது குழந்தையை நிதானமடையச் செய்யும்.

குழந்தை நடை பழகும்போது தடுமாறி விழுவார்கள். அடிபடாவிட்டாலும்கூட அழுவார்கள். அப்போது சில பெற்றோர் பதற்றமடைவதுடன், அலறியபடி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி, அவர்களை நடக்கவிடாமல் தடுப்பது தவறு. இது அந்தக் குழந்தையிடம் `நாம் அழுதால் கொஞ்சுவார்கள்' என்று மனதில் பதிந்துவிடும்.

குழந்தை
குழந்தை

விபத்துகள், குண்டுவெடிப்புச் சம்பவங்கள், சுனாமி பாதிப்பு போன்றவற்றைக் குழந்தைகள்முன் பேசும்போது அதற்கான காரணத்துடன் விளக்கிச் சொல்ல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் `காரில் போகும்போது விபத்து நடந்தது' என்பதைக் கேட்கும் குழந்தைக்கு,`காரில் போனாலே விபத்து ஏற்படுமோ...' என்று மனதில் பதிந்து அச்சத்தை ஏற்படுத்தும். `சுனாமி கடலில் வந்தது...' என்பதைக் கேட்கும் குழந்தை, `கடலுக்கே வரமாட்டேன்' என்று அடம்பிடிக்கும். இவை `அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' ஏற்படுவதால் வரும் பாதிப்பே.

குழந்தைக் கடத்தல் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களை 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பார்க்க விடாமல் தடுப்பது நல்லது. ஏனென்றால், பள்ளிக்கூடம் போனால் தன்னைக் கடத்திவிடுவார்கள் என்று அவர்கள் மனதில் பதிந்துவிடும். அதனால்தான் சில குழந்தைகள், `உட்கார்ந்து படி' என்று சொன்னால்கூட `கோஸ்ட் (பேய்) வந்துவிடும்; எனக்குப் பயமா இருக்கு' என்று அழுவார்கள். எனவே, எந்தவொரு செயலையும் பெற்றோர் நிதானமாக எடுத்துரைத்தால் குழந்தைகளும் இயல்பாக நடந்துகொள்வார்கள்.

குழந்தை
குழந்தை

* குழந்தையின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

* அண்டை வீட்டாரிடமும் ஆரோக்கியமாகப் பழகும் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.

* உணர்வுகளை வெளிப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

* பெற்றோர் தங்களது நட்புகளை ஆரோக்கியமாகப் பேணுவதுடன் தொழிலில் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு அதனால் எந்தவிதமான மோசமான விளைவும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்!" என்று முடிக்கிறார் மருத்துவர் பூங்கொடி பாலா.

அடுத்த கட்டுரைக்கு