Published:Updated:

அரசு இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உச்ச நீதிமன்றம் இது குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் போன்று, எங்கெல்லாம் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தார்களோ, அங்கெல்லாம் உள்ள குழந்தைகளைக் குடும்பங்களோடு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி பெரும் கவலையை உருவாக்கியிருக்கிறது. இதுபோன்று, அரசால் நடத்தப்படும் மற்ற குழந்தைகள் இல்லங்களிலும், தனியார் மற்றும் தன்னார்வு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களிலும் இந்நோய் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும்.

அரசு, ஓர் அளவுக்குத் தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மறுக்கவியலாது. மார்ச் மாதத்திலேயே கொரோனா சமூகப் பரவல் தொற்று குறித்து ஊரடங்கு அறிவித்தபோதே, குழந்தைகளை, அவரவர் குடும்பங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. உச்ச நீதிமன்றம் இது குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் போன்று, எங்கெல்லாம் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தார்களோ அங்கெல்லாம் உள்ள குழந்தைகளைக் குடும்பங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசு சார்பில் குறிப்பாக, சமூக பாதுகாப்புத் துறையால் அனைத்து இல்லங்களுக்கும், கொரோனா தொற்று குறித்தும், பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம்
சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம்

தமிழ்நாட்டில் சமூக பாதுகாப்புத் துறை, குழந்தைகளை அவரவர் பெற்றோர் அல்லது பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர். பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வந்த இல்லங்களில் இருந்த குழந்தைகளை அவரவர் குடும்பங்களுக்கு அனுப்பிவைத்தனர். அதனால் குழந்தைகள் தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். இது ஒரு வகையில் குழந்தைக்கு நலன் விளைவிக்கும் முடிவாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இதன் விளைவாக, பெற்றோர் அல்லது பொறுப்பாளர் எவரும் இல்லாத குழந்தைகள் மட்டுமே, இல்லங்களில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உதாரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 குழந்தைகள் இல்லங்களில் மொத்தம் 1034 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களில் 120 பேர் மட்டுமே தற்போது இல்லத்தில் உள்ளார்கள். மற்ற அனைவரும் அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு சில குழந்தைகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும், வீட்டின் பல்வேறு சூழல் காரணமாக, இல்லங்களுக்குத் திரும்பி வந்துவிட்டனர்.

சென்னை ராயபுரம் குழந்தைகள் இல்லத்தில் இம்மாதிரியான குழந்தைகளுக்குத்தான் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து, இக்குழந்தைகள்தான் உண்மையிலேயே, மிகவும் பாதிக்கப்பட்ட சூழலில் உள்ளார்கள் என்றும் உடனடி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் உள்ளார்கள் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்... எண்ணிக்கை பொருட்டல்ல. இவர்களுக்குத்தான் நமது முக்கிய கவனம் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள்
குழந்தைகள்

குழந்தை இல்லங்களில் தற்போது தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். மேலும், கொரோனா குறித்து முதலில் வந்த விளக்கங்களில் வயது வந்தோர், நீரிழிவு, இதய நோய் போன்ற பிற நோய்களுக்கு உள்ளனாவர்களைதான் அந்த தொற்று அதிகமாகப் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டது. குழந்தைகளை இந்நோய் பாதிக்காது என்ற எண்ணம் நம் அனைவரிடமும் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 70 நாள்களில் நோயின் தன்மை மாறி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதனுடைய விளைவே, இப்போது ராயபுரம் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்டுள்ள தொற்று ஆகும்.

இத்தொற்றிற்கு, யார் காரணம் என்ற சர்ச்சையில் ஈடுபடாமல் இம்மாதிரியான தொற்று, மற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படா வண்ணம், உடனடியாக, போர்க்கால அடிப்படையில், தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

`ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 31 மருத்துவப்  பணியாளர்களுக்கு கொரோனா!' -சென்னையில் தொடரும் அதிர்ச்சி
  1. குழந்தைகள் இல்லங்களில் தற்சமயம் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் - வயது வாரியாக ஆண், பெண் பாலர் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த வேண்டும்.

  2. அவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்தி, அவர்களில் எவருக்கேனும் பிற நோய்களின் தாக்கம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, Primary Complex, Sinus Problem, Wheezing போன்ற பிற நோய்கள் உள்ளதா என்று அறிய வேண்டும்.

  3. இந்த இல்லங்களில் பணிபுரியும் அனைவருக்குமே மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  4. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மாதம் இருமுறையாவது இவ்வில்லங்களை பார்வையிட்டு, தேவையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  5. காவல்துறை அல்லது சைல்டுலைன் 1098 மூலம் கொண்டுவரப்படும் குழந்தைகளை தனியாக ஓர் இடத்தில் தனிமைப்படுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  6. இந்த இல்லங்களில் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் இருக்கிறன்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சமூக இடைவிலகல், முகக்கவசம் மற்றும் கைகழுவும் திரவம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  7. இந்த இல்லங்களில் புதிதாக குழந்தைகள் சேர்க்கப்படுவதை கூடுமானவரை சிறிதுகாலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்து, இயல்புநிலை திரும்பும்வரை, குழந்தைகளை இல்லத்தில் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

    ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்த்தொற்று குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மையின் குறியீடே.

இந்நோய் தொற்று பரவாவண்ணம், இத்தகைய குழந்தைகளைப் பாதுகாப்பது நமது தலையாய கடமை ஆகும். பெற்றோர் இல்லாத இக்குழந்தைகளுக்கு அரசுதான் முதன்மை பாதுகாவலர் என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மை ஆகும்.

- கிரிஜா குமார பாபு

அடுத்த கட்டுரைக்கு