`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகளைக் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
சென்ற அத்தியாயத்தில், பால் புட்டிகளின் உருவாக்கத்துக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகப்படுத்தப்பட்ட பிஸ்பினால் ஏ (Bisphenol A/ BPA) கெமிக்கலால் ஏற்படும் மருத்துவ பாதிப்புகளின் காரணமாக, 2015-ல் பால் புட்டிகள் தயாரிப்புக்கு பிஸ்பினால் ஏ உபயோகப்படுத்த இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறித்து விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து, பால் புட்டிகள் தவிர்த்து வேறு பொருள்களுக்கும் பிஸ்பினால் ஏ உபயோகப்படுத்துகிறார்களா, அதன் மூலம் குழந்தைகளை பிஸ்பினால் ஏ சென்றடைந்து பாதிப்புகளை ஏற்படுத்துமா போன்று பல கேள்விகளை பெற்றோர் பலர், என்னிடம் கேட்டிருந்தனர்.
அதற்கு விடையளிக்கும் நோக்கில், ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளில் பிஸ்பினால் ஏ இருப்பதை தன் ஆய்வு மூலம் உறுதி செய்த என் நெருங்கிய நண்பரும் பச்சிளங்குழந்தை மருத்துவருமான டாக்டர் க. பிரபாகரன் MD (PGIMER), DM (AIIMS, Jodhpur) அவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டேன். ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் பிஸ்பினால் ஏ-வை கண்டறிந்த முதல் இந்திய ஆய்வு இவருடையதென்பது குறிப்பிடத்தக்கது.

பிஸ்பினால் ஏ பயன்பாடு எவ்வாறு தொடங்கியது?
பிஸ்பினால் ஏ-வை முதன்முறையாக ரஷ்ய வேதியியலாளர் டையனின் (Dianin), 1891-ல் கண்டறிந்தார். 1950-களில், முதன்முறையாக பாலிகார்பனேட் (Polycarbonate) பிளாஸ்டிக் உற்பத்திக்கு பிஸ்பினால் ஏ-வை பயன்படுத்தத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக பிஸ்பினால் ஏ தண்ணீர் பாட்டில்கள், பால் புட்டிகள், பிளாஸ்டிக் பொருள்கள், உணவு சேமிப்பு கன்டெய்னர்கள் என்று பல்வேறு பொருள்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. எபோக்சி பிசின் (Epoxy resin) உற்பத்திக்கு பிஸ்பினால் ஏ உபயோகப்படுத்துவது, 1936 முதல் தொடங்கியது. எபோக்சி பிசின் உணவு கேன் உள்பூச்சு, பாட்டில் மூடி, தண்ணீர் பைப்களிள் உள்பூச்சு என்று பலவற்றுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. வருடாவருடம், பிஸ்பினால் ஏ-வின் உற்பத்தி மட்டுமே 8 லட்சம் டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஸ்பினால் ஏ-வினால் மருத்துவ பாதிப்புகள் ஏற்படுவது எப்படி?
பிஸ்பினால் ஏ ஹார்மோன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து, பிஸ்பினால் ஏ-யின் அளவு உடலில் கூடும்போது, மலட்டுத் தன்மை, கருக்கலைப்பு, குறைப் பிரசவம், பிறக்கும் குழந்தையில் எடை குறைவாக இருப்பது போன்ற இனப்பெருக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இவை தவிர்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல்பருமன், நீரிழிவு நோய், இதய நோய், மூளை வளர்ச்சியில் பாதிப்புகள், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு, கல்லீரல் பாதிப்புகள், ஆஸ்துமா போன்று பல்வேறு மருத்துவ பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பிஸ்பினால் ஏவை எந்தெந்தப் பொருள்களின் உற்பத்திக்கு பயன்படுத்த தடை அமலிலுள்ளது?
உலகம் முழுதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு பிஸ்பினால் ஏ-யினால், மருத்துவ பாதிப்புகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது. பிஸ்பினால் ஏ-யினால் செய்யப்பட்ட பாட்டில்களை டிஷ்வாஷர்களில் கழுவும்போதும், சூடுபடுத்தும்போதும், பிஸ்பினால் ஏ-யின் மூலக்கூறுகள் உடைந்து, பாட்டிலில் உள்ள தண்ணீர் அல்லது பாலில் சேர்கின்றன. இவ்வாறு, பிஸ்பினால் ஏ-யினால் செய்யப்பட்ட புட்டிகளில் தொடர்ந்து பால் கொடுக்கும் போது, பாட்டில்களில் தண்ணீர் அருந்தும்போது, பிஸ்பினால் ஏ-யினால் செய்யப்பட்ட எபோக்சி பிசின் உள்பூச்சு செய்யப்பட்ட உணவு கேனில் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது, எபோக்சி பிசின் உள்பூச்சு செய்யப்பட்ட தண்ணீர் பைப்களிள் தண்ணீர் தொடர்ந்து குடிக்கும்போது, உடலில் பிஸ்பினால் ஏ சேர்ந்து, நச்சு அளவைத் தாண்டும்போது மருத்துவ பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதன் நச்சு பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, 2008-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் பிஸ்பினால் ஏ பால் புட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளில், உணவு சம்பந்தப்பட்ட பொருள்களின் உற்பத்தியில் பிஸ்பினால் ஏ உபயோகப் படுத்துவதை முற்றிலும் தடை செய்துள்ளனர். 2015-ம் ஆண்டில், இந்திய தர நிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards - BIS), IS 14625:2015-ன் படி, பால் புட்டி தயாரிப்பில் பிஸ்பினால் ஏ உபயோகப்படுத்தப்படுவதைத் தடை செய்தது.

உங்களின் ஆய்வு முடிவுகளில் கண்டறிந்தது என்ன?
இந்தியாவில், பால் புட்டி தயாரிப்பில் பிஸ்பினால் ஏ உபயோகப்படுத்த தடையிருந்தும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பால் புட்டிகளில் பிஸ்பினால் ஏ இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஸ்பினால் ஏ உடலில் இருப்பதை, சிறுநீரிலுள்ள பிஸ்பினால் ஏ-யின் அளவின் மூலம் உறுதி செய்யலாம். புட்டிப்பால் மட்டுமல்லாமல், தண்ணீர் பாட்டில், எபோக்சி பிசின் உள்பூச்சு செய்யப்பட்ட தண்ணீர் பைப்கள், உணவு கேன்கள் மூலமாகவும் பிஸ்பினால் ஏ குழந்தைகளின் உடலில் சேரக் கூடுமென்பதால், 1 மாதம் முதல் ஐந்து வயது வரை சண்டிகரில் உள்ள அங்கன்வாடிகளுக்கு வருகை தந்த குழந்தைகளில், புட்டிப்பால் கிடைக்கப்பெறும் குழந்தைகள் மற்றும் புட்டிப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகள் என்று இரண்டு பிரிவாகப் பிரித்து, அவர்களின் சிறுநீரில் பிஸ்பினால் ஏ-யின் அளவைக் கண்டறிந்தோம்.
இதில், புட்டிப்பால் கொடுக்கப்படும் 94.8% குழந்தைகளிலும், புட்டிப்பால் கொடுக்கப்படாத 84.7% குழந்தைகளிலும் பிஸ்பினால் ஏ இருப்பது உறுதி செய்யப்பட்டது. புட்டிப்பால் கொடுக்கப்படாத குழந்தைகளிலும் பிஸ்பினால் ஏ காணப்பட்டதைக் கொண்டு, தண்ணீர் மற்றும் உணவுகளின் மூலமாக பிஸ்பினால் ஏ அவர்களின் உடலில் சேர்வதை அறிய முடிகிறது.

பிஸ்பினால் ஏ உடலில் சேர்வதை எப்படித் தடுப்பது?
பால் புட்டிகளில் பிஸ்பினால் ஏ இருக்கிறதா என்று தொடர் ஆய்வு செய்து, தடையை மீறிய உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் புட்டிகளை ஒவ்வொரு முறை உபயோகப்படுத்தும்போதும் சரியாகச் சுத்தப்படுத்தப்படா விட்டால், குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுமென்பதால், புட்டிப்பால் கொடுப்பதையே பெற்றோர்கள் தவிர்க்கலாம். தேவைப்படும்பட்சத்தில் ஒரு வயது வரை பாலாடையிலும், ஒரு வயதுக்குப் பிறகு டம்ளரிலும் பால் கொடுக்கலாம்.
பல நாடுகளில் உணவு சம்பந்தப்பட்ட பொருள்களின் உற்பத்தியில் பிஸ்பினால் ஏ உபயோகப்படுத்துவதை முற்றிலும் தடை செய்துள்ளனர். அதைப்போல் நம் நாட்டிலும் தண்ணீர் பாட்டில்கள், உணவு கேன்கள், தண்ணீர் பைப்களில் பிஸ்பினால் ஏ உபயோகப்படுத்துவதைத் தவிர்க்கலாம். பிளாஸ்டிக் உபயோகத்தை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் குப்பைகள், நீர்நிலைகளில் சேர்வதைத் தடுக்க வேண்டும். அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளில் மட்டுமல்ல பெரியவர்களின் உடலிலும் பிஸ்பினால் ஏ சேர்வதை முற்றிலும் தடுக்க முடியும்.
ஒவ்வொரு நாளும், உலகம் முழுதும் புட்டிப்பால் கொடுக்கப்படும் குழந்தைகள், பாலுடன் கோடிக்கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் (microplastics) துகள்களையும் உட்கொள்கின்றனர் என்னும் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகளை அடுத்த அத்தியாயத்தில் விரிவாக அலசுவோம்.
பராமரிப்போம்…