கோடை வெயில் கொளுத்துவதால், தமிழகத்தில் பள்ளித் திறப்பை தமிழக அரசு தள்ளி வைத்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், வெயிலால் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

நீடிக்கும் வெயிலின் தாக்கம்!
தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று, தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. எனினும், கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் நீடிப்பதால், அது குழந்தைகளின் உடல்நலனை பாதிக்கும். எனவே, பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளிவைக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ஒன்று முதல், 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 7-ம் தேதிதான் திறக்கப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை இன்று புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இச்சூழலில், ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து, வானிலை நிபுணர் ரமணனிடம் கேட்டோம்... ``மே மாதம் முடிந்ததுமே, வெயிலின் தாக்கம் குறைந்துவிடும் என்று கூறிவிட முடியாது. ஜூன் மாதத்திலும் வெயில் சற்று அதிகமாகத்தான் இருக்கும். சில சமயம் ஜூலை மாதம் வரையிலும் கூட 40° செல்சியல் வெப்பநிலை நிலவ வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

வெயிலால் ஏற்படும் நீர்வறட்சி
கடும் வெயிலில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது என்ன மாதிரி பிரச்னைகள் ஏற்படும், அவற்றை எப்படிக் கையாளலாம் என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த்...
``வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை உடலில் நீர்வறட்சி ஏற்படுவது. பெரியவர்களை விட குழந்தைகள் எளிதாக இந்தப் பிரச்னையால் பாதிப்படைவர். குழந்தைகளின் உடல், பெரியவர்களை விட மூன்று முதல் ஐந்து மடங்கு வரை வேகமாக சூடாக மாறும். உடல் வெப்பம் அதிகமாகும்போது அதிகளவில் வியர்வை வெளியேறி அது உடலில் இருந்து உப்புச்சத்து வெளியேறக் காரணமாக அமையும். நீர்வறட்சி ஏற்படுவதால் குழந்தைகளுக்கு அசதி, சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகள் வரலாம். சில சமயங்களில் வெயிலால் அதிகம் பாதிக்கப்படும்போது வாதம்கூட ஏற்படலாம். இதுதவிர வெயிலின் தாக்கத்தால் சரும பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.
சோர்வினை அலட்சியப்படுத்த வேண்டாம்!
பள்ளிக்குச் செல்லும்போது வெயிலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, போதுமான அளவில் தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம். பெற்றோர்கள் தினமும் போதியளவு தண்ணீர் கொடுத்து அனுப்புவதோடு அதை குழந்தைகள் குடித்து முடித்துவிடும்படி அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் நீர்வறட்சியால் பாதிக்கப்படுவது போல் ஆரம்பகட்ட அறிகுறிகள் (சோர்வாக இருப்பது, தலைவலி) இருந்தால், அவற்றை அலட்சியம் செய்யாமல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உப்பு போட்ட எலுமிச்சை சாறு, இளநீர் போன்ற பானங்களை அவர்களுக்கு கொடுக்கலாம். அதிக சர்க்கரையூட்டப்பட்ட பாட்டில்களில் விற்கும் பழச்சாறுகளை கொடுத்தனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் இடைவேளைகளில் உண்பதற்கு எண்ணெய் அதிகமுள்ள பதார்த்தங்களைத் தவிர்த்து, தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களை நறுக்கி, கொடுத்து அனுப்பலாம்.
சரும பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு, சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்தலாம். குறைந்தபட்சம் SPF 15 அளவில் உள்ள சன்கிரீனை பயன்படுத்த வேண்டும். சீருடைகள் மிகவும் இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.