Published:Updated:

"குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிக்கும் பொதுத்தேர்வுகள்!"- சிக்கல்களும், நிபுணரின் வழிகாட்டல்களும்...

Kids
Kids

பதின் பருவத்தின் ஆரம்பத்தில் காலெடுத்து வைக்கும் 5-ம், 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கெல்லாம் இயல்பாகவே உடலளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் பல விஷயங்களை உணர்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய காலம் இது.

`எக்ஸாம்' என்ற வார்த்தையை இப்போது கேட்டால்கூட பயத்தினால் நம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிடும். டெங்கு, மலேரியா காய்ச்சல்களை எல்லாம் சர்வசாதாரணமாகக் கடந்து வந்த நாம் இந்த `எக்ஸாம் ஃபீவரில்' கதிகலங்கிப் போயிருப்போம். அதுவும் பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இருக்கின்றனவே... அந்தக் காலகட்டங்கள் எல்லாம் கத்திமேல் பயணத்தைப் போன்றவைதான். பொதுத்தேர்வுகளை எழுதித் தேர்வாவதுகூட பெரிய விஷயமல்ல. ஆனால், அந்தத் தேர்வு முடிவு வரும் நாளில் நாம் எந்த மாதிரியான மனஅழுத்தத்துக்குச் செல்வோம் என்பதை நிச்சயமாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

தேர்வு
தேர்வு

ஒரு பக்கம் மாணவர்களின் வெற்றி களிப்பையும் மறுபக்கம் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரையும் சேர்த்தே பார்த்துக்கொண்டிருப்போம். இந்த நிலையில், 5, 8 பொதுத் தேர்வை எப்படி அணுகப்போகிறோம்?

எந்தவொரு விஷயத்தையும் மேலோட்டமாகப் பார்க்கும்போது அதன் வீரியம் புரியாது. அதுபோல்தான் தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5-ம் மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும். ஏனென்றால் பொதுத்தேர்வு என்ற பெயரில் இந்த சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படுபவை எல்லாமே அதீத மன அழுத்தங்கள்தான். அவற்றின் விளைவுகள் நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு மோசமாக இருக்கலாம்.

குழந்தை
குழந்தை
உடல் பருமன் குழந்தைகளின் படிப்பையும் பாதிக்கலாம்... எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவரின் தீர்வுகளும்!

பதின் பருவத்தின் ஆரம்பத்தில் காலெடுத்து வைக்கும் 5-ம், 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கெல்லாம் இயல்பாகவே உடலளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் பல விஷயங்களை உணர்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய காலம் இது. இந்நேரத்தில் பொதுத்தேர்வுகள் என்றோர் அழுத்தத்தை அவர்களின் மீது திணிக்கும்போது அவர்கள் தங்கள் தனித்திறமைகளோடு சேர்ந்து தங்கள் குழந்தைப் பருவத்தையும் இழக்கலாம். பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களை இந்தச் சமூகம் எப்படி நடத்தும் என்பது பற்றி பெரிதாகச் சொல்லத் தேவையில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுத்தேர்வுகள் என்ற பெயரில் பாடச் சுமைகளைக் குழந்தைகள் மீது திணிக்கும்போது அது அவர்களை எந்த விதத்தில் உளவியல் ரீதியாகப் பாதிக்கும் என்பது பற்றி குழந்தைகள் மனநல ஆலோசகர் கண்ணனிடம் பேசினோம்.

"நம்முடைய கல்வி முறை பெரும்பாலும் கணக்கு, அறிவியல் போன்ற புத்தகங்களில் உள்ளவற்றை மனப்பாடம் செய்து கடைசியில் ஒரு நாள் தேர்வு என்ற பெயரில் பேப்பரில் கொட்ட வேண்டும் என்பதுபோல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை இயல்பாகவே கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களில் அதிக ஆர்வமில்லாமல் வேறு ஏதாவது தனித்திறமையுடனும் காணப்படலாம். ஆனால், அப்படிப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களின் திறமைகளை மெருகேற்றிக் கொள்ள வாய்ப்புகள் தரப்படுவதில்லை. பள்ளி அளவில் தொழிற்கல்விகள் போன்றவை ஏற்படுத்தப்படாமல் இருப்பதே இதற்கான சான்று. காரணம் நம் சமூகம் ஏட்டுக் கல்விக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறது.

குழந்தைகள் மனநல ஆலோசகர் கண்ணன்
குழந்தைகள் மனநல ஆலோசகர் கண்ணன்

தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ள 5-ம், 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கான பொதுத் தேர்வுகள் நிச்சயமாக அந்த வயது குழந்தைகளை உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கும். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வழியாக மிகப்பெரிய அழுத்தம் குழந்தைகளை நோக்கி முன்வைக்கப்படும். இதனால் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை (Inferiority complex), மன அழுத்தம் (Mental stress), மனச்சோர்வு (Depression), மனப்பதற்றம் (Anxiety) போன்றவை ஏற்படலாம். இவற்றைக் கண்டுகொள்ளாமல்விடும்போது விளைவுகள் இன்னமும் மோசமாக இருக்கலாம்.

ஒவ்வொரு குழந்தையின் கற்றல்திறனும் மாறுபாடுடையது. சிலர் படிப்பில் ஆர்வமுடையவராக இருக்கலாம். சிலர் ஓவியம், விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வமாகவும், படிப்பில் சிறிது பின்தங்கியும் இருக்கலாம். இந்த மாணவர்களைப் படிப்பில் மற்ற மாணவர்களோடு ஒப்பிட்டுப் பேசும்போது அது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி `தான்' எதற்குமே தகுதியானவர் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிடும். இதனால் அவர்கள் தங்கள் தனித்திறமையிலும் ஆர்வம் குறைந்து, குடும்பத்தினரிடமிருந்து விலகி இருக்கவும், சில நேரங்களில் வழிதவறிச் செல்லவும் வாய்ப்புள்ளது.

குழந்தை
குழந்தை
For Representation Only
`ஓவர் திங்க்கிங் உடம்புக்கு ஆகாது பாஸ்’- அதீதமாகச் சிந்திப்பதால் வரும் பிரச்னைகளும் தீர்வுகளும்...

இந்த 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் `டிஸ்லெக்ஸியா' என்ற கற்றல்குறைபாடு உள்ள மாணவர்களை அதிகம் பாதிக்கும். `டிஸ்லெக்ஸியா' குறைபாடு உள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போலவே சாமானிய அறிவுடன் காணப்பட்டாலும் தாய்மொழியையும் கணித எண்களையும் கற்கச் சிரமப்படுவார்கள். எழுத்துகளில் இருக்கும் வேறுபாடுகளை அறிய முடியாமலும், சொற்றொடர்களைச் சரளமாகப் படிக்க முடியாமலும் இருப்பார்கள். இவர்களின் மீது திணிக்கப்படும் இந்தப் பொதுத்தேர்வுகள் வன்முறையில்தான் சேரும். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க பொறுமை மிகவும் அவசியம். அவர்களுக்கு ஒரு செய்முறை புரியவில்லை என்றால், இன்னும் ஒருமுறை சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

பொதுவாகவே `டிஸ்லெக்ஸியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேர்வுகள் எழுதும்போது விதிமுறைகளிலிருந்து அரசால் சில விதிவிலக்குகள் தரப்படும். ஆனால், இங்கு பிரச்னை என்னவென்றால் டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ள பெரும்பாலான குழந்தைகள் இனம் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. இவர்கள் படிப்பில் பின்தங்கியிருப்பதால் `மக்கு', `ஸ்லோ லேனர்ஸ்' என்று பச்சை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். குறிப்பாகக் கிராமங்களில் `டிஸ்லெக்ஸியா' என்ற குறைபாடு பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

குழந்தை
குழந்தை

எனவே, ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்களில் யாருக்கு `டிஸ்லெக்ஸியா' என்ற கற்றல்குறைபாடு உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல பாடங்களை கற்றுத்தர வேண்டும். தேசிய குழந்தை நலத்திட்டம் (RBSK) என்ற அமைப்பில் குழந்தை நலச் சோதனை மற்றும் ஆரம்ப சிகிச்சை சேவைகள், கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு முறையான அணுகுமுறை, பராமரிப்பு, ஆதரவு மற்றும் சிகிச்சைகள் தரப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் உள்ள மருத்துவமனைகளில் இதற்கென்றே மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். எனவே, `டிஸ்லெக்ஸியா' என்ற கற்றல் குறைபாடு அரசால் ஓர் இயலாமையாகப் பார்க்கப்படுவதால் இந்தக் குறைபாடு உள்ள மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு எழுதுவதில் சில விதிவிலக்குகள் தரப்படலாம்.

எனவே, முதலில் இது பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலோ அல்லது படிப்பில் ஆர்வமின்றி இருந்தாலோ அவர்களை நன்றாகப் படிக்கும் மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி வசைபாடுவதை முதலில் நிறுத்துங்கள். அதுபோல் படிப்பை ஒரு சுமையாக அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

தேர்வு
தேர்வு

பொதுத்தேர்வுகள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. தேர்வுகளில் தங்கள் குழந்தைகள் மதிப்பெண் குறைவாக எடுப்பதைப் பெற்றோர்கள் கௌரவ குறைவாகக் கருதுகின்றனர். இதனால் எல்.கே.ஜி குழந்தையைக் கூட ஏகப்பட்ட டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்களால் எவ்வளவு அழுத்தம் தரப்படும் என்பதைச் சொல்லவே வேண்டாம்! இந்தச் சமூகம் மதிப்பெண்களை வைத்து மட்டுமே ஒரு மாணவரின் திறமையை எடைபோடுகிறது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பவை உங்கள் குழந்தைகளின் மேல்படிப்பையோ அல்லது வாழ்க்கையையே தீர்மானிக்கும் தேர்வல்ல.

ஒருவேளை இந்தத் தேர்வுகளினால் உங்கள் குழந்தைகளுக்கு மனஅழுத்தமோ அல்லது மனச்சோர்வோ ஏற்பட்டால் அவசியமாக ஒரு மனநல மருத்துவரிடமோ அல்லது மனநல ஆலோசகரிடமோ அழைத்துச் செல்லுங்கள். அதுபோல் ஒரு குழந்தை தேர்வில் தோல்வி அடையும்போது அதற்குத் தேவை குடும்பத்தினரின் அரவணைப்பு மட்டும்தான் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் வைக்க வேண்டும்" என்றார் குழந்தைகள் மனநல ஆலோசகர் கண்ணன்.

kids
kids
pixabay

இன்று வாழ்க்கையில் வெற்றிகண்டவர்களில் பலரும் பள்ளி தேர்வுகளில் தோற்றவர்கள்தான். தேர்வுகள், முதல் மதிப்பெண், வெற்றி, தோல்வி என்ற எல்லாவற்றையும் கடந்து நம் குழந்தைகளுக்கென்று தனி உலகம் உள்ளது. அதில் அவர்களுக்கென ஆசைகளும், கனவுகளும் இருக்கும். இதை நாம் புரிந்துகொண்டால் பொதுத்தேர்வுகள் என்ற பெயரில் நம் குழந்தைகளின் மனதில் சுமைகளை ஏற்றி அவர்களின் கனவுகளை நொறுக்கமாட்டோம்.

அடுத்த கட்டுரைக்கு