நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள காந்தள் பகுதியில் நகராட்சியின் உருதுப் பள்ளி இயங்கி வருகிறது. 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர், மற்றும் 6- வகுப்பு மாணவர்கள் 2 பேர் என 6 பேருக்குக் கடந்த வாரம் திடீர் மயக்கம் ஏற்பட்டது.
இதைக் கண்ட ஆசிரியர்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு 6 பேரையும் உடனடியாக அழைத்துச் சென்றனர். குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகள் விழுங்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதை அறிந்த மருத்துவர்கள், ஆபத்தான நிலையிருந்த 4 மாணவிகளுக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளில் ஒருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதால் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், பாதி வழியிலேயே அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த மாணவியின் இறுதிச் சடங்கிற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் முதல் ஊட்டி நகராட்சி கமிஷனர் வரை பலரும் பங்கேற்று ஆறுதல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவித் தொகையை அறிவித்துள்ளார். இருப்பினும் மகளை இழந்த பெற்றோரின் அழுகுரல் ஒட்டுமொத்த ஊட்டியையும் சோகத்தில் உறையச் செய்தது.
இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணி குறித்துப் பகிர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ``பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை மூலம் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. வாரத்துக்கு ஒருமுறை ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும். இந்த பள்ளியில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் இரண்டு அட்டை மாத்திரைகளை மொத்தமாகக் கைகளில் கொடுத்திருக்கிறார்கள்.
இதைப் பெற்றுக்கொண்ட 4 மாணவிகளிடையே, யார் அதிக சத்து மாத்திரைகளை விழுங்குவது என்ற போட்டி எழுந்திருக்கிறது. இந்த விபரீத போட்டியில் 2 மாணவர்களும் இணைந்திருக் கிறார்கள். யாருக்கும் தெரியாமல் வகுப்பறை கதவைத் தாழிட்டு மொத்த மாத்திரைகளையும் பிரித்து மேசை மீது கொட்டியிருக்கிறார்கள்.

பின்னர் போட்டிபோட்டு ஒவ்வொரு மாத்திரையாக விழுங்கி இருக்கிறார்கள். ஒரு மாணவி மட்டுமே 40 மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார். அவர்தான் தற்போது பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மற்ற 3 மாணவிகளும் 20-க்கும் அதிகமான மாத்திரைகளை உண்டுள்ளனர். சிறுவர்கள் தலா 10 மாத்திரைகளை உட்கொண்டிருக்கிறார்கள். அதிக மாத்திரைகளை உட்கொண்டால் ஒரே நேரத்தில் அதிக சக்தி கிடைக்கும் என்ற அறியாமையில் இப்படி செய்திருக்கிறார்கள்.
ஆசிரியர்களின் அலட்சியமே இந்த அசம்பாவிதத்துக்கு மூல காரணம். இதில் கூடுதலான வேதனை என்னவென்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரது தாய் இதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன் மகள் மாத்திரைகளை விழுங்குவதை அறியாமல் அந்த நேரத்தில் பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்" என்றார் வேதனையுடன்.
இந்த விபரீதம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், ``வாரம்தோறும் வியாழக்கிழமை மதிய உணவுக்குப் பின் ஒவ்வொரு மாணவரின் கையிலும் ஒரு சத்து மாத்திரையை மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், இந்தப் பள்ளியில் வழக்கத்துக்கு மாறாக திங்கள்கிழமையே மாத்திரைகளை வழங்கியது மட்டுமல்லாமல், 15 மாத்திரைகள் கொண்ட 2 அட்டைகளை ஒவ்வொருவரின் கைகளிலும் கொடுத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. அலட்சியமாக செயல்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாத்திரைகளை வழங்கி கண்காணிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் என இருவரை சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாத்திரைகளை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கிறார்களா, சரியான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்களா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறோம். ஒரு மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 3 மாணவிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்" என்றார்.
நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி, ``அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாக உடலுக்குள் செல்லும்போது அது விஷமாக மாறி கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒரு குழந்தைக்கு 20 மில்லி கிராம் முதல் 40 மில்லி கிராம் வரை மட்டுமே இரும்புச்சத்தை உடலால் உட்கிரகிக்க முடியும். ஆனால், உயிரிழந்த அந்த மாணவி 11 கிராம் வரை உட்கொண்டிருக்கிறார்.

வாரத்துக்கு ஒரு மாத்திரை அல்லது நாளுக்கு ஒரு மாத்திரையென மருத்துவர்கள் பரிந்துரைப்படி இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால், அதிக சத்து மாத்திரைகளை ஒரேநேரத்தில் உட்கொண்டால் ஆபத்தாகிவிடும். மாத்திரைகள் குறித்த முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்" என்றார்.
பள்ளிகளில் இதுபோன்ற துயரங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு.