Published:Updated:

`விகடன் செய்தி, கலெக்டர் நடவடிக்கை... இப்ப பார்வை கிடைச்சிடுச்சு!' - நெகிழும் குழந்தைகள்

பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் கார்த்திகா ( ம.அரவிந்த் )

''எங்க அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கக் காரணமா இருந்த விகடன், கலெக்டர் சார் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருப்போம்.''

`விகடன் செய்தி, கலெக்டர் நடவடிக்கை... இப்ப பார்வை கிடைச்சிடுச்சு!' - நெகிழும் குழந்தைகள்

''எங்க அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கக் காரணமா இருந்த விகடன், கலெக்டர் சார் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருப்போம்.''

Published:Updated:
பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் கார்த்திகா ( ம.அரவிந்த் )

பேராவூரணி அருகே, பெற்றோர் இல்லாத நிலையில் வாழ வழியில்லாமல், பார்வைக் குறைபாடுடைய சிறுமி தனது அண்ணனுடன் தவித்து வருவது குறித்து விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது அந்தச் சிறுமிக்கு சிகிச்சையும் பார்வையும் கிடைத்திருப்பதுடன், பல்வேறு உதவிகளும் கிடைத்து வருவதாக சிறுமியின் தரப்பில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பேராவூரணி அருகே உள்ள சித்துக்காடு கிராமம் முனியாண்டி தெருவைச் சேர்ந்தவர் அமுதா. இவரின் கணவர் பெத்தபெருமாள் ஐந்து வருடங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார். வாத நோயால் பாதிக்கப்பட்டு குடிசை வீட்டில் முடங்கிக் கிடந்த அமுதாவும் ஒரு மாதத்துக்கு முன் இறந்துவிட்டார்.

சிறுவர்கள் கார்த்திகா, காளிதாசன்
சிறுவர்கள் கார்த்திகா, காளிதாசன்

இந்தத் தம்பதியின் மகன் காளிதாசன் 10-ம் வகுப்பும் மகள் கார்த்திகா 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கார்த்திகா பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி. பெற்றோரை இழந்த நிலையில் வாழ்வதற்கு வழி இல்லாமல், எந்த வசதியும் இல்லாத குடிசை வீட்டில் அண்ணன், தங்கை இருவரும் வயதான தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி தங்கையான கார்த்திகாவுடன் காளிதாசன் கலங்கி நின்றதையும் தனக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும் இருக்கும் தன் அண்ணன் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற கார்த்திகாவின் தவிப்பையும், ''எங்க அண்ணன் முகத்தைப் பார்க்க ஆசையா இருக்கு!'' - பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் சிறார்கள் என்ற தலைப்பில் விகடனில் எழுதியிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் படித்த விகடன் வாசகர்கள் பலர் கலங்கியதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு முன்வந்தனர். கார்த்திகா, காளிதாசன் நிலை குறித்து தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். 'இந்தச் சின்ன வயசுல இந்தளவுக்குத் துயரங்களை சுமக்கிறார்களே...' என வருந்தியவர் உடனடியாகத் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை சித்துக்காடு கிராமத்தில் உள்ள காளிதாசன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும் அரிசி, மளிகைப் பொருள்கள், மற்றும் ரூ. 1,000 உதவி என அப்போதைய தேவைக்காகக் கொடுக்க வைத்தார். மேலும் நவம்பர் 22-ம் தேதியன்று கலெக்டர் நிதியிலிருந்து 50,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

டாக்டர் செளந்தரராஜன் தலைமையிலான மருத்துவக் குழு
டாக்டர் செளந்தரராஜன் தலைமையிலான மருத்துவக் குழு

பின்னர், 'கார்த்திகாவுக்கு பார்வை கிடைக்கச் செய்கிற கடமை எனக்கு இருக்கு' என்றவர் தன்னுடைய நேரடிப் பார்வையில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செளந்தர்ராஜன் மற்றும் கண் மருத்துவ நிபுணர் திரவியம் உள்ளிட்டோர், வீட்டுக்கே சென்று கார்த்திகாவின் கண்களை பரிசோதனை செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரிசோதனையில், ஒரு கண்ணில் லேசாகப் பார்வையிருப்பதையும் மற்றொரு கண்ணில் சுத்தமாக பார்வையில்லை என்பதையும் அறிந்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின் பேரில் தஞ்சாவூரில் உள்ள இராசா மிராசுதார் அரசு கண் மருத்துவமனைக்கு கார்த்திகா வரவழைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் அவருக்கு இரண்டு கண்களுக்கும் ஆபரேஷன் செய்தனர்.

சிகிச்சைக்கு முன்
சிகிச்சைக்கு முன்

சில தினங்கள் சிகிச்சைக்குப் பிறகு, கார்த்திகாவுக்கு பார்வைக் குறைபாடு சரியானது. முதன்முறையாக முழு பார்வையுடன் உலகத்தைப் பார்த்த சிறுமி கார்த்திகாவுக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய காளிதாசன், ''கார்த்திகாவுக்கு பார்வை கிடைக்காதானு பல வருஷம் ஏங்கியிருக்கோம். இப்ப கண் பார்வை வந்துடுச்சு. எங்க அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. இந்த உதவி எங்களுக்குக் கிடைக்கக் காரணமா இருந்த விகடன், கலெக்டர் சார் மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருப்போம்'' என்றார் அதற்கு மேல் வார்த்தைகள் வராதவராக.

காளிதாசன் தரப்பில் பேசினோம். ''இவங்களைப் பத்தி விகடனில் செய்தி வந்ததுமே பலர் நேரடியாகவும் போனிலும் உதவி செய்வதா பேசி நம்பிக்கை கொடுத்தாங்க. பலர் தங்களால முடிந்த பணத்தை அனுப்பினாங்க. இதுவரை சுமார் ரூ. 25,000 வரை உதவி கிடைச்சிருக்கு. மேலும் கலெக்டர், அதிகாரிகள் மூலமா அரிசி, மளிகை, புது டிரெஸ் மற்றும் செலவுக்குப் பணம்னு கொடுக்க வெச்சார்.

மேலும், சிறுமி கார்த்திகாவுக்கு பார்வை கிடைப்பதற்கான பெரும் முயற்சியும் எடுத்தார். சமூக நலத்துறை சார்பாகவும் கார்த்திகாவுக்கு மாதம் ரூ 2,000 கிடைப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். இந்தக் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ்னு எதுவுமே இல்ல. அவையெல்லாம் கிடைப்பதற்கான நடவடிக்கையையும் எடுத்திருக்கார்.

அவங்க குடியிருக்கிற இடத்துல சில சிக்கல்கள் இருந்துச்சு. அதைத் தீர்த்துக் கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிச்சார். அதுக்கான வேலைகளும் நடந்துட்டு வருது. மேலும், கலெக்டர் கோவிந்தராவ் சார் கார்த்திகாவின் பாட்டி சாரதாம்பாளுக்கும் முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

சிகிச்சைக்குப் பிறகு, சிறுமிக்கு பார்வை கிடைத்ததுதான் இதில் முத்தாய்ப்பான விஷயம். ரொம்ப அக்கறை எடுத்து, நேரடியா தனது கண்காணிப்பில் கார்த்திகாவின் தேவைகளைச் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை கலெக்டர் எடுத்தார். எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்து தருவதாகவும் உறுதியளித்திருக்கார்.

கலெக்டர் சாராலதான் இதெல்லாம் இவ்வளவு சீக்கிரமே சாத்தியமானது. இன்னொரு பக்கம், இவங்களோட பல வருஷ போராட்டத்தை ஒரு மாசத்துல முடிவுக்குக் கொண்டுவந்த விகடனுக்கு இந்த நேரத்துல நன்றியை சொல்லிக்கிறோம்'' என்றனர்.

கார்த்திகாவிடம் பேசினோம். ''அப்பா இறந்து, அம்மாவும் ஒரே இடத்துல முடங்கிக் கிடந்த சூழ்நிலையில, பார்வையற்ற எனக்குக் கண்ணாவும், அப்பா, அம்மாவாவும் இருந்து என்னை கவனிச்சுக்கிட்டது எங்க அண்ணன்தான். எனக்குப் பார்வை கிடைச்சு, அவன் முகத்தை முழுசா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

நல்ல மனசு கொண்ட பலரது உதவியால அது இப்போ கைகூடியிருக்கு. இந்தத் தீபாவளிக்குத்தான் பட்டாசின் மத்தாப்பு வெளிச்சத்தைப் பார்த்தேன். அந்த நேரத்துல என் மனசுக்குள்ள கலெக்டர் எனக்கு தெய்வமா தெரிந்தார். இப்பதான் புதுசா பொறந்த மாதிரி இருக்கு. கண்ணுக்கு எல்லாமே தெரியுது'' என மகிழ்ச்சியில் பூரித்தார்.

காளிதாசன், ''என் தங்கச்சிக்குப் பார்வை கிடைச்சிடுச்சு. அதைவிட எனக்குப் பெரிய சந்தோஷம் எதுவும் இல்ல. வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் கிடைச்சுட்டு வருது. சின்ன வயசுல நாங்க பல வலிகளுடன் வாழ்ந்து வந்தோம். இப்போ அதெல்லாம் கொஞ்சம் மறைய தொடங்கியிருக்கு. பார்வை வந்த நேரம், என் தங்கச்சி பெரிய மனுஷியாவும் ஆகிட்டா. ரெட்டிப்பு சந்தோஷத்துல இப்போ எங்க மனசு நிறைஞ்சிருக்கு, மகிழ்ச்சி கூடியிருக்கு'' என்று நெகிழ்ந்தார்.

எந்த இருளும் நிரந்தரமில்லைதானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism