ஜார்கண்ட் மாநிலம், பொகாரோ ஸ்டீல் சிட்டி பகுதியில், சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார், மொஹம்மத் கலீம் என்கிற 16 வயது சிறுவன். இவருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை பாதிப்பால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
ஹாலிவுட்டின் `Hulk’ கதாபாத்திரம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஹல்க்கிற்கு ஏற்பட்ட அதிகப்படியான வளர்ச்சியால் ராட்சத உருவத்தோடு இருப்பார். ஆனால் இப்படி வைத்துக் கொள்வோம். கைகள், கால்கள் அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் ராட்சத வளர்ச்சியைப் பெற்றிருந்தால், எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

சிறுவன் மொஹம்மத் கலீம், அப்படியான ஓர் அரிய வகை உடல்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த அசாதாரண நிலைக்கு `Macrodactyly' என்று பெயர். இப்பிரச்னையால் பாதிக்கப்படும் பட்சத்தில், எலும்பு மற்றும் மென்மையான திசுக்களில் அதிகப்படியான வளர்ச்சி இருக்கும்.
இந்த வளர்ச்சியின் காரணமாக கால் விரல்கள் அல்லது கை விரல்கள் இயல்பை விட மிகப்பெரிதாக ராட்சத உருவத்தோடு வளரும். அபரிமிதமான வளர்ச்சியால் சாதாரணமாகச் செய்யும் வேலையைக்கூட இவர்களால் செய்ய முடியாது. உலகம் முழுவதிலும் சுமார் 300 பேர் மட்டுமே, இந்த அரிய உடல்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சிறுவனின் ஒரு கை மட்டும் 8 கிலோ வரை எடை கொண்டுள்ளது. சிறுவனின் மணிக்கட்டுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே உள்ள தூரம் 24 அங்குலம் (61 சென்டி மீட்டர்). இரண்டு கைகளும் 2 அடி வரை நீளமாக உள்ளது.
இச்சிறுவனுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் எஸ் ராஜா சபாபதி கூறுகையில், ``உடலின் சில பகுதிகளை மட்டும் பாதிக்கும் இந்த அரிய சிண்ட்ரோமான `Local Gigantism’ என்ற நிலையால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் இச்சிறுவனை `பிசாசின் குழந்தை’ (Devil’s Child) என்று அழைக்கிறார்கள். மற்ற குழந்தைகள் இவரைப் பார்த்துப் பயப்படுவதால், பள்ளியில் சிறுவனை சேர்த்துக் கொள்ளவில்லை.

மொஹமத்தின் தந்தை தினசரி கூலித் தொழிலாளி. 10 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மகன் கையின் அளவை குறைக்க அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அறுவை சிகிச்சையின் முடிவுகள் எதிர்மறையாகச் செயல்படத் தொடங்கின. சிறுவனின் கை முன்பைவிட அதிகமாக வளர்ந்து, சிதைந்தது. இதன் விளைவாகப் பெரிய பிரச்னைகள் ஏற்பட்டன.
குளிப்பதற்கும், உணவு உண்பதற்கும் தினசரி வேலைகளைச் செய்யவும் சிறுவன் மிகவும் சிரமப்படுகிறான். அன்றாட வேலைகளைச் செய்ய குடும்பத்தைச் சார்ந்துள்ள நிலை சிறுவனுக்கு உள்ளது’’ என்று கூறியுள்ளார்.