கேரளாவில் டொமேட்டோ காய்ச்சல் (Tomato flu) பரவி வருவதையடுத்து கோவை மாவட்டத்திற்குள் நோய் பரவுவதைத் தடுக்க எல்லையில் கண்காணிப்பு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றின் தீவிரத்திலிருந்து மீண்டுவரும் நிலையில், தற்போது பரவத் தொடங்கி உள்ளது புதிய வைரஸ் தொற்று. டொமேட்டோ காய்ச்சல் என அழைக்கப்படும் இந்தத் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் அறியப்படாத நிலையில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்நோய் பாதிப்பது தெரியவந்திருக்கிறது. பெரியவர்களையும் பாதித்தாலும், குழந்தைகளுக்கே பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவரிடமிருந்து எளிதாகப் பிறருக்குப் பரவும் என்பதால், தொற்று பாதித்தவர்களை தனிமையில் வைப்பது சிறந்தது.

மேலும் ஃப்ளுவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் கொப்புளங்களைத் தேய்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓய்வும், சுகாதாரமாக இருப்பதும் அறிவுறுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்திய உடை மற்றும் பொருள்களை நன்கு சுத்தம் செய்வதன் மூலம் தொற்றுப்பரவலைத் தவிர்க்கலாம்.
உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இந்தக் காய்ச்சலானது சுயமாக கட்டுப்படக் கூடியது. இதற்கு மருந்துகள் ஏதும் கிடையாது.
எனவே தற்போது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையார் செக்போஸ்ட்டில் அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு நிறுத்தப்பட்டுள்ளது.