Published:Updated:

போக்குவரத்துப் புகையினால் ஆஸ்துமா பாதிப்பு: தவிக்கும் குழந்தைகள்! #VikatanInfographics

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகள் Vs போக்குவரத்து புகை
குழந்தைகள் Vs போக்குவரத்து புகை

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் போக்குவரத்து புகையினால் 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சியடைய வைக்கிறது.

வெயில்காலம் முடிந்து இன்னும் சில நாள்களில் மழைக்காலமும் பனிக்காலமும் வரப்போகிறது. சில குழந்தைகளுக்கு நெஞ்சுச் சளி, அதன் அடுத்தகட்டமான வீசிங் (மூச்சிறைப்பு) என மிகவும் கடினமான காலங்கள் இவை என்று கருதப்படுகிறது. இதில், ஆஸ்துமா பாதிப்புக்குள்ளானவர்களும் தப்ப முடியாது என்பது நாம் அறிந்ததே...

குழந்தை
குழந்தை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது ஆஸ்துமா. தூசு, காற்று, சுற்றுப்புற மாசு எனப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த பாதிப்பு எளிதில் தாக்குவது குழந்தைகளையே... சிறிய வயதிலேயே இன்ஹேலரும் கையுமாகச் சுற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

2018-ம் ஆண்டு ஆய்வின்படி, உலகம் முழுவதும் 33.9 கோடி பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக ஆஸ்துமாவின் பாதிப்பானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முதன்மை காரணமாகச் சொல்லப்படுவது காற்று மாசடைந்து வருவதைத்தான். பல்வேறு தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் எரிப்பது தவிர்த்து போன்ற காரணங்களை தவிர்த்து, தற்போது போக்குவரத்துப் புகையினால் ஆஸ்துமா அதிகரித்து வருவதாக ஆய்வுமுடிவுகள் வெளிவந்துள்ளன.

குழந்தைகள் vs போக்குவரத்து புகை
குழந்தைகள் vs போக்குவரத்து புகை
Vikatan Infographics

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் போக்குவரத்துப் புகையினால் 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற தகவல் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்தியாவில் 1 லட்சம் குழந்தைகளில் 72 பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 15 சதவிகிதம் பேர் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாகனப் புகையினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா குறித்து நெஞ்சக நிபுணர் ஜெயராமனிடம் பேசினோம்… ``நுரையீரலில் ஏற்படும் ஒவ்வாமைப் பிரச்னைதான் ஆஸ்துமா. ஒரு மாத குழந்தைக்குக்கூட ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, போக்குவரத்துப் புகையில் இருக்கும் NO2 எனும் நச்சுப் பொருள் நுரையீரலில் உள்ள வைரஸ் கிருமியைத் தூண்டி விடுவதால் ஆஸ்துமா உண்டாகிறது. காற்று மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் ஆஸ்துமா அண்டாமல் தடுக்க முடியும். இதுமட்டுமன்றி சுத்தம் இல்லாத தண்ணீர், காற்றில் உள்ள தூசி, பூக்களின் மகரந்தம், நாய் மற்றும் பூனை போன்றவற்றின் ரோமங்கள் ஆகியவற்றினாலும் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இது போன்ற அலர்ஜியினால், நுரையீரலில் ஏற்படும் மாற்றம் ஆஸ்துமாவுக்குக் காரணமாக உள்ளது.

நெஞ்சக நிபுணர் ஜெயராமன்
நெஞ்சக நிபுணர் ஜெயராமன்

சில குழந்தைகளுக்குத் தங்கள் மரபு வழியாகவும் ஆஸ்துமா வருகிறது. மாறுபட்ட வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, துரித உணவுகள், புகைப்பழக்கம் இவைதான் ஆஸ்துமாவுக்கான முக்கியக் காரணமாக இருக்கின்றன. போக்குவரத்துப் புகையைச் சுவாசிப்பதால், முதலில் தும்மல் மூலமாக ஆஸ்துமா இருப்பது தெரியவரும். குறிப்பாக இருமல், வரட்டு இருமல், மூக்கில் எரிச்சல், நீர்வடிதல், நமைச்சல், மூச்சுவிடும்போது விசில் அடிப்பது போன்ற மெல்லிய ஓசை (வீசிங்), நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு போன்றவை இதன் அறிகுறிகள். இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் இவை அதிகமாக இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட இமேஜிங் பரிசோதனைகளைச் ( Imaging tests) செய்து எந்த மாதிரியான ஆஸ்துமா வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உணவுக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. ஆனாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பெப்ஸி, கோலா போன்ற குளிர்பானங்கள் தருவதைத் தவிர்க்கலாம். சளித் தொந்தரவைக் குறைக்கும் தன்மை வைட்டமின் சி-க்கு அதிகம். எனவே, வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். கிராமங்களில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் கிராமங்களில் உள்ள குழந்தைகளைவிட நகர்ப்புற குழந்தைகளுக்கு அதிக அளவில் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆஸ்துமா பாதிப்பு
ஆஸ்துமா பாதிப்பு

ஆஸ்துமாவுக்கு மாத்திரைகள், டானிக் போன்றவை உள்ளன. ஆனால், இன்ஹேலர் சிகிச்சையே ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த சிறந்தமுறையாக இருக்கிறது. ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை, மருத்துவர்கள் சொல்லும் விதத்தில் தினமும் காலை - இரவு இரண்டு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குறுகிய காலத்தில் குணப்படுத்திவிடலாம்" என்கிறார் ஜெயராமன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு