குழந்தைகளுக்கு விதவிதமாக, பார்த்துப் பார்த்து உணவு வழங்கும் பெற்றோர் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தாய் ஒருவர் மளிகை சாமான் பில்லை குறைப்பதற்காக, தன்னுடைய 18 மாதக் குழந்தைக்கு, வெட்டுக்கிளிகளை உணவாக அளித்து வருகிறார்.

கனடாவின் டொரன்டோ பகுதியில் வசித்து வருபவர் டிஃப்பனி லெய்க் ( Tiffany Leigh). இவர் உணவுகளைக் குறித்து எழுதி வருகிறார். சமீபத்தில் ஆசிய நாடுகளுக்குச் சென்றவர், சிலந்தியின் கால்கள், தேள்கள் என பொறித்த அனைத்தையும் உண்டு மகிழ்ந்திருக்கிறார். அவற்றின் சுவையும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.
தன்னுடைய குழந்தை திட உணவு உண்ணும் நாளுக்காகக் காத்திருந்தவர், சிறுகச் சிறுக 18 மாதக் குழந்தையின் உணவில் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் (crickets ) சேர்த்துள்ளார். இது மிகவும் விலை மலிவாகவும், புரதம் நிறைந்த உணவாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
அதாவது பாரம்பர்யமாக புரதம் நிறைந்த கோழி, பன்றி மற்றும் மாடு இறைச்சிக்கு ஆகும் செலவைவிட இதற்கு குறைவாகவே செலவாகிறதாம். சாதாரணமாக இது போன்ற உணவினை வழங்கும்போது வாரத்திற்கு 250 முதல் 300 அமெரிக்க டாலர்கள் வரை ஆகும் செலவு, பூச்சிகளைக் கொடுக்கும்போது வாரத்திற்கு வெறும் 150 -200 அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆகிறது என கூறியிருக்கிறார் டிஃப்பனி.

``வெட்டுக்கிளிகள் புரத ஊட்டச்சத்து நிறைந்தவை. குழந்தைக்குத் தேவையான 100 சதவிகித தினசரி புரதத்தை வெட்டுக்கிளி பவுடர் வழங்கிவிடும். இன்னும் குழந்தையின் உணவு முறையில் எறும்புகள், புழுக்களையும் சேர்க்க உள்ளேன்'' என அப்பெண் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்குப் பூச்சிகளை தாய் உணவாகக் கொடுக்கும் இந்தச் செய்தி பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.