Published:Updated:

எளிதில் கிடைக்கும், விலை குறைவு... குழந்தைகளின் வயிற்றுப்போக்குக்கு அருமருந்தாகும் ஓ.ஆர்.எஸ் கரைசல்!

ச.கெளதம் ராஜா

உலக சுகாதார நிறுவனமும் யுனிசெஃப் அமைப்பும் அனைத்துவிதமான வயிற்றுப்போக்குக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல் (Oral Re-hydration Salts) என்று கூறப்படும் உப்பு - சர்க்கரை கரைசலையே பரிந்துரை செய்கின்றன.

ஓ.ஆர்.எஸ் கரைசல்
ஓ.ஆர்.எஸ் கரைசல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொதுவாக எதிர்கொள்ளும் தொற்றுப் பிரச்னை வயிற்றுப்போக்கு. யுனிசெஃப் அமைப்பின் தரவுப்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு எட்டு முதல் ஒன்பது சதவிகிதம் வயிற்றுப்போக்கு காரணமாக அமைகிறது. `மிகவும் எளிமையான, பயனுள்ள சிகிச்சைகள் இருந்தபோதும் நாள் ஒன்றுக்கு சுமார் 1,300 குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் இறப்பதாக' யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

குழந்தைகள்
குழந்தைகள்
pixabay.com

வயிற்றுப்போக்கு ஏற்பட வைரஸ் தொற்றுதான் முதன்மைக் காரணியாகக் கூறப்படுகிறது. மலம் மற்றும் வாய் வழியாக இந்த வைரஸ் பரவுவதால் குழந்தைகளை எளிதில் பாதிக்கிறது. வயிற்றுப்போக்கின்போது அதிகப்படியான நீர் மற்றும் உப்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

உலக சுகாதார நிறுவனமும் யுனிசெஃப் அமைப்பும் அனைத்துவிதமான வயிற்றுப்போக்குக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல் (Oral Re-hydration Salts) என்று கூறப்படும் உப்பு - சர்க்கரை கரைசலையே பரிந்துரை செய்கின்றன. இத்தகைய பயனுள்ள ஓ.ஆர்.எஸ் கரைசலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச்செல்லவும் அதைப் பயன்படுத்தும்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 29-ம் தேதி ஓ.ஆர்.எஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

குழந்தை
குழந்தை

ஓ.ஆர்.எஸ் கரைசலின் பயன்கள் குறித்தும் அதைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் அறிந்துகொள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் சமூக மற்றும் நோய் தடுப்புத்துறை இணைப் பேராசிரியர் மருத்துவர் சுனிதாவைச் சந்தித்தோம். விளக்கமாக எடுத்துரைத்தார் அவர்.

"வயிற்றுப்போக்கின் விளைவாக ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டையும் சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற சத்துகளின் குறைபாட்டையும் குழந்தைகளின் உடல் எளிதாகச் சமன்செய்துகொள்ள இயலாது. இதைச் சரிசெய்வதற்காகத்தான் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. ஓ.ஆர்.எஸ் கரைசலில் பல்வேறு வகையான தாதுஉப்புகள் மற்றும் சர்க்கரை குறிப்பிட்ட அளவில் காணப்படும். அதனால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர் மற்றும் உப்புச்சத்துக் குறைபாடு சீர்செய்யப்படும்.

சமூக மற்றும்  நோய் தடுப்புத்துறை இணைப் பேராசிரியர் மருத்துவர் சுனிதா
சமூக மற்றும் நோய் தடுப்புத்துறை இணைப் பேராசிரியர் மருத்துவர் சுனிதா

குழந்தைகளுக்கு இந்தக் கரைசலுடன் எளிதாகச் செரிமானமாகும் திரவ ஆகாரங்களையும் துத்தநாக சல்பேட்டையும் அளிப்பது சிறந்த சிகிச்சையாகும். இவை விலை குறைவாகவும் எளிதில் கிடைப்பவையாகவும் இருப்பதால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் சிக்கல்கள் எளிதில் குணமாகும்.

உலக சுகாதார நிறுவனம் ஓ.ஆர்.எஸ் கரைசலை, `குழந்தைகளுக்கான அத்தியாவசிய மருந்தாக' அறிவித்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஓ.ஆர்.எஸ் பொட்டலம் மாநில அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

WorldOrsDay
WorldOrsDay

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களது வயதுக்கேற்ப இந்தக் கரைசலைக் குடிக்க வேண்டும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 50-100 மில்லி (1/4 டம்ளர்) வரை வழங்கலாம். இரண்டு முதல் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 100-200 மில்லி (1/2 டம்ளர்) வரை கொடுக்கலாம். பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அவர்களால் குடிக்க முடிந்த அளவு குடிப்பது நல்லது; அதிகபட்சமாக இரண்டு லிட்டர் ( 8 1/2 டம்ளர்) வரை வழங்கலாம். மேற்கூறிய அளவுகளில் ஒவ்வொருமுறை வயிற்றுப்போக்கை அடுத்தும் ஓ.ஆர்.எஸ். கரைசலைப் புகட்ட வேண்டும். தற்போது மருந்தகங்களில் பல்வேறு சுவைகளில் பொடியாகவும் ஜூஸாகவும் ஒ.ஆர்.எஸ் கிடைக்கிறது.

வயிற்றுப்போக்கால் ஏற்படும் சிக்கல்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தீவிரமாக வெளிப்படும்‌. சாதாரண வயிற்றுப்போக்கு என்று அதை உதாசினம் செய்யக் கூடாது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்கள் உணவளிக்கும் முன்பும் சிறுநீர் மற்றும் மலத்தைச் சுத்தம் செய்தபிறகும் தங்கள் கைகளைச் சோப்பினால் நன்றாகக் கழுவ வேண்டும்.

ஓ.ஆர்.எஸ்
ஓ.ஆர்.எஸ்

சமைக்கும் இடம், சமையல் செய்யும் முறை மற்றும் உணவு பரிமாறும் இடம் என அனைத்து இடங்களிலும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கைப் பரப்பும் வைரஸ் தொற்றைத் தடுக்கும்விதமாகச் சுத்தமான குடிநீரைப் பருகுவது இன்றியமையாதது. வயிற்றுப்போக்கின்போது அதிகமாக நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படும் ஓ.ஆர்.எஸ் கரைசலை அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல பயன்படுத்த வேண்டும்.

வயிற்றுப்போக்கைத் தடுக்கும் தடுப்பூசியை (Rotavac vaccine) தவறாமல் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இந்தத் தடுப்பூசியானது முன்று தவணைகளாகக் குழந்தை பிறந்த 6,10,14-ம் வாரங்களில் வழங்கப்படுகிறது.  வயிற்றுப்போக்கின்போது குழந்தைகளுக்கு அதீத சோர்வு, மயக்கம், தீவிர வயிற்றுவலி, ரத்தத்துடன் மலம் வெளியேறுவது, காய்ச்சல், வாந்தி, சுருங்கிய கண்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்கிறார் டாக்டர் சுனிதா.

Vikatan

ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பயன்படுத்தும் முறை:

1. ஒரு லிட்டர் சுத்தமான நீரை எடுத்துக்கொள்ளவும்.

2. ஒரு பாக்கெட் ஓ.ஆர்.எஸ் கரைசலுக்கான பொடியை அதில் போடவும்.

3. நன்றாகக் கரைத்து அருந்தக் கொடுக்க வேண்டும்.

4. ஓ.ஆர்.எஸ் கரைசலை நீரில் மட்டுமே கரைக்க வேண்டும். பால், சூப், பழச்சாறு மற்றும் குளிர்பானங்களில் கரைக்கக் கூடாது.

5. ஓ.ஆர்.எஸ் கரைசலில் கூடுதலாகச் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அது சர்க்கரை மற்றும் உப்பு விகிதாசார அளவை மாற்றி பயனற்றதாக்கிவிடும். அதிக சர்க்கரை வயிற்றுப்போக்கை மேலும் மோசமாக்கக்கூடும்.

6. ஒருமுறை கரைத்த கரைசலை 24 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

7. கரைசலைச் சுத்தமான பாத்திரத்தில் கரைப்பதும் நன்றாக மூடிவைத்துப் பயன்படுத்துவதும் அவசியம்.

`வயிற்றுப்போக்குதானே' என்று அலட்சியப்படுத்தாமல் உரிய நேரத்தில் மருத்துவரை அணுகியும் ஓ.ஆர்.எஸ் போன்று எளிதாகக் கிடைக்கும் பக்க விளைவுகளற்ற மருந்துகளின் பயனறிந்தும் செயல்பட்டால் சிக்கல்களை விரட்டியடிக்கலாம்...