Published:Updated:

அலர்ட் பெற்றோர்களே... 10-ல் 8 குழந்தைகள் ஒருநாளில் ஒரு மணி நேரம்கூட விளையாடுவதில்லை! #WHOReport

இந்தியாவில் மட்டும் 73.9 சதவிகித வளரிளம் பருவத்தினர் உடலுழைப்பின்றி இருக்கின்றனர்.

குழந்தைகள்
குழந்தைகள்

டீன் ஏஜ் குழந்தைகளில், உலகளவில் பத்தில் எட்டு பேர் உடலுழைப்பே இல்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஆதாரபூர்வமாகக் கடந்த வாரம் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் மட்டும் 73.9 சதவிகித வளரிளம் பருவத்தினர் உடலுழைப்பின்றி இருக்கின்றனராம். லேன்செட்டின் `குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான உடல்நலம்' குறித்த கையேட்டில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாருக்காக இருக்கிறது மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம்? - ஓர் அதிர்ச்சி அலசல்
இந்தியாவில்தான் இந்த நிலை என்றில்லை. உலகளவில் 80 சதவிகித வளரிளம் பருவக் குழந்தைகள், குறைந்தபட்சம் ஒரு மணி நேரம்கூட விளையாடுவதில்லையாம்! இது பெற்றோர்களுக்கான எச்சரிக்கை மணி. இனியாவது அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும்.

``இது மிகவும் வருந்தத்தக்க விஷயம், மிகவும் ஆபத்தான விஷயமும்கூட!'' என்று சொல்கிற குழந்தைகள்நல மருத்துவர் கார்த்திக் சூர்யா மேலும் விவரமாகப் பேசுகிறார்.

குழந்தைகள்நல மருத்துவர் கார்த்திக் சூர்யா
குழந்தைகள்நல மருத்துவர் கார்த்திக் சூர்யா

``உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே, 11 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம். பொதுவாகவே, 11 - 17 வயது இடைவேளையின்போதுதான் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் வளர்ச்சியடைவார்கள். அதனாலேயே இந்தக் காலகட்டத்தை `வளரிளம் பருவம்' என மருத்துவர்கள் குறிப்பிடுவது உண்டு. உடல் சார்ந்த அனைத்து வளர்ச்சிகளையும், அவற்றால் மனதளவில் ஏற்படும் மாற்றங்களையும் இந்தப் பருவத்தில் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு அடிப்படை, இரண்டு விஷயங்கள். அவை ஆரோக்கியமான உணவு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறைகள்.

இதில் குறிப்பிடப்பட்ட `நெறிப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறை'களில் முக்கியமானது உடலுழைப்பு. உடலுழைப்பு என்பது உடற்பயிற்சியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஏதேனுமொரு விளையாட்டாகக்கூட அது இருக்கலாம். `குழந்தை ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது' என்பது மட்டும்தான் கான்செப்ட். ஆனால், இன்றைய குழந்தைகள் விளையாட்டுக்குக்கூட ஆக்டிவாக இல்லை என்பதுதான் பிரச்னை!

டீன் ஏஜ்
டீன் ஏஜ்
டீன் ஏஜ் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகுவது ஏன்? #LifeStartsAt40 #நலம்நாற்பது

உடலுழைப்பு மூலம், குழந்தைகளுக்குக் கிடைக்கும் பலன்கள்...

1. * தினமும் வெயிலில் நேரம் செலவழிக்கும் குழந்தைகளுக்கு, வைட்டமின் - டி குறைபாடு ஏற்படாது. இதனால் சருமப் பிரச்னைகள் தொடங்கி சத்துக் குறைபாடு வரை பல பிரச்னைகளை அவர்கள் வருங்காலத்தில் தவிர்க்கலாம்.

2. * போதுமான அளவு உடலுழைப்பு இருக்கும் பெண் குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் சமச்சீரின்மை போன்றவை தடுக்கப்படும்.

3. * இன்றைய குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் மற்றும் உடல் மிகவும் மெலிந்து காணப்படுதல் போன்ற பிரச்னைகள் முழுமையாகத் தடுக்கப்படும்.

4. * இன்றைய தேதியில் பெரும்பாலான பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் `விரைவில் பூப்படைந்துவிடும்' பிரச்னை தடுக்கப்படும். குழந்தைகள், சரியான நேரத்தில் சரியான பருவத்தில் பூப்படைவர்.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

5. * உடலுறுப்புகள் வளர்ச்சி அடைவது, குரல் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், எலும்பு வளர்ச்சி என எல்லா விதமான உடல் சார்ந்த அனைத்து மாற்றங்களும் வளர்ச்சிகளும் குழந்தைகளுக்கு டீன்ஏஜில்தான் இருக்கும். இவை அனைத்தையும் ஒருசேர எதிர்கொள்ளும்போது, மனதளவிலான பல மாற்றங்களையும், அவர்கள் எதிர்கொள்வர்.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

இதற்குக்கூட, உடலுழைப்பு உதவிபுரியும். தினமும் நண்பர்களுடன் பேசி, சிரித்து விளையாடும் குழந்தைகளுக்கு, மனத்தடைகள் இருக்காது. விளையாட்டிலேயே வளரும் குழந்தைகள் வாழ்வில் வெற்றி, தோல்விகள் அனைத்தையும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வர். ஆக, குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் தங்களின் பதின் பருவத்தைக் கடக்க உடலுழைப்பு கட்டாயம் தேவை!

6. * தினமும் ஒரு மணி நேரம் விளையாடும் குழந்தைகள் அன்றாட வாழ்வில், புத்துணர்வோடும் சுறுசுறுப்போடும் இருப்பர். சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, படிப்பின்மீதான ஆர்வமும் கவனமும் இயல்பாகவே இருக்கும்.

7. * கவனச்சிதறல், அதீத சுறுசுறுப்பு, அடிக்கடி பதற்றமடைவது போன்ற நடத்தை சார்ந்த பிரச்னைகள் சரிசெய்யப்படும்.

8. * பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளிலிருந்து குழந்தைகள் காக்கப்படுவர்.

9. * சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு வளர்ந்த பின்னர் சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வாழ்வியல் நோய் பாதிப்புகளெல்லாம் தடுக்கவும் தவிர்க்கவும்படும்! மரபு ரீதியாக பிரச்னை ஏற்படலாம் என்பவர்களுக்கும்கூட, பிரச்னை தள்ளிப்போடப்படும். அதாவது 35 வயதில் ஏற்படவிருக்கும் பிரச்னை, 50 வயதில் ஏற்படும்!

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

10. * உடலுழைப்பு இல்லாத குழந்தைகளைக் கவனித்துப் பார்த்தால் அவர்கள் அனைவரும் மொபைல் அதிகம் உபயோகிப்பவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்களின் உடலின் தோற்றமே மாறிப்போயிருக்கும். முதுகு, நேராக இருக்காது. தோற்றமே வளைந்து காணப்படும். வெளியில் - வெயிலில் விளையாடும் / வியர்வை வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்யும் குழந்தைகளுக்கு இப்படியான பிரச்னைகள் ஏற்படாது!

படிப்பு பிரதானம்தான். ஆனால், விளையாட்டும் உடலுழைப்பும் அதைவிட முக்கியம்.
குழந்தைகள்நல மருத்துவர் கார்த்திக் சூர்யா

ஆகவே, பெற்றோரே இனியாவது உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள். பல பெற்றோரும் குழந்தைகளிடம் `படிப்பே பிரதானம்' எனச் சொல்வதைக் காணமுடிகிறது. `படிப்பு பிரதானம்தான். ஆனால், விளையாட்டும் உடலுழைப்பும் அதைவிட முக்கியம்' என்பதை உணர வேண்டும். தினந்தோறும் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதைப்போல, தினமும் விளையாடுவதற்கும் பிள்ளைகளைப் பழக்கப்படுத்தப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமையும்கூட.

Infographics
Infographics
`கண்காணிக்காத மாதிரி அவங்களை கவனிக்கணும்!’ - டீன் ஏஜ் பேரன்டிங் பற்றி பட்டிமன்ற ராஜா #GoodParenting

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள், வரும் ஆண்டுகளில் குறையாவிட்டால், நம் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமே கேள்விக்குறியாகும் என்பதை, பெற்றோர் அனைவரும் உணர வேண்டும். இது பெற்றோர்களுக்கான எச்சரிக்கை மணி இனியாவது விழித்துக்கொள்வோம்!" என்கிறார் அவர்.