சிறு விதை விருட்சமாக நிற்பதையும், சிறு நெருப்பு பெரும் காட்டை அழிப்பதையும் பிரமிப்போடு புரிந்துகொள்ளும் நாம், மனிதன் என்னும் ஆகப்பெரும் சக்தி எதிலிருந்து ஆரம்பமாகிறான் என்ற விந்தையைச் சற்று அலசுவோம்.

ஆணிடமிருந்து, 0.05 மிமீ அளவுள்ள (என்ன அளவு இருக்கும் என்று கற்பனையெல்லாம் செய்யவே தேவையில்லை, ஏனெனில் அது கற்பனைக்கு எல்லாம் எட்டாத சிறு உருவம்) ஓர் ஆரோக்கியமான விந்துவானது தலைப்பகுதி, நடுப்பகுதி மற்றும் வால் பகுதி என்ற கூறுகள் கொண்டது. நுண்ணோக்கி மூலமாக அது நகர்வதையும், அது சரியான அமைப்பு கொண்டதா, போதிய வீரியமும் வேகமும் இருக்கிறதா, ஏதேனும் பிசிறுகள் உள்ளனவா, இல்லை முழுவடிவமாய் உருப்படியாக இருக்கிறதா, முழுப்பகுதியும் திறம்பட வேலைசெய்யும் தன்மைகொண்டதா போன்ற கேள்விகளுக்கான பதில்களையும், துல்லியமாக தற்போதைய அறிவியலால் அறிய முடிகிறது.
அப்படிப்பட்ட ஆச்சர்யமான விந்து, அதைவிட 30 மடங்கு அளவில் பெரியதாக (30 மடங்கு என்றவுடன் பெரிய நிலக்கடலைப் பருப்பு சைஸ் என்றெல்லாம் எண்ண வேண்டாம், ஒரு சிறு கடுகை பத்தாக உடைத்தால் அதில் ஒரு பகுதிதான்) உள்ள பெண்ணின் கருமுட்டையோடு சேரும் அந்த ஓர் இணைப்புதான் கருவாகி, உருவாகி, கண், காது, மூக்கு, முட்டி, முடி, முழங்கால், முதுகு, மூளை என்று அனைத்துமாகி இவ்வுலகில் நினைத்துப் பார்க்க முடியாத ஆச்சர்யங்கள் எல்லாம் நிகழ்த்துகிறது. இரண்டு அணுக்களும் அணுஅணுவாக இணைந்து, மில்லி மீட்டர் மில்லி மீட்டராக வளர்ந்து, கடுகு, மிளகு, கடலைப்பருப்பு என்று அளவில் உருமாறி, சில பலப் புள்ளிகளாக, வளைவாக மாறி வளர்ந்து, சில வாரங்களில் வயிறாகவோ, குடலாகவோ, மலத்துவாரமாகவோ, புருவமாகவோ, நெற்றியாகவோ... இப்படி எண்ணற்ற உருப்புகளாக மாறப்போகிறது.

பெரிய கோளாறு ஏற்பட்டு அதைச் சரிசெய்வதைவிட, சிறு பிரச்னையை எளிதில் சரிசெய்யலாம். சற்று கவனியுங்கள், தயாராகுங்கள்' என்று நான் அடிக்கடி முந்தைய பதிவுகளில் குறிப்பிடக் காரணம் இதுவே.
இப்போது நமது கதாப்பாத்திரத்திற்கு வரலாம்.
பானுவின் கர்ப்பத்தில் சில கோளாறுகள். அவள் குடும்பம் மொத்தமும் வருத்தத்தோடு இருக்க, அதே அப்பார்ட்மென்டில் சீதா என்ற பெண்ணையும் அவள் குழந்தையையும் பார்த்தோம். அந்த அப்பார்ட்மென்டே புகழும் குடும்பம் அது. 'வரம்', 'அதிர்ஷ்டம்' என்ற வார்த்தைகளுக்கெல்லாம் ஒரே அர்த்தம்தான். அதாவது, சரியான வேலையைச் சரியான நேரத்தில் செய்வது. இந்த அழகான குழந்தைப்பேறும் அப்படித்தான். சீதா தன்னைச் சரியான நேரத்தில் சரியாகப் பராமரித்துக் குழந்தைப் பேற்றுக்குத் தயாரானாள். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாள்.

பானுவின் தாய் பானுவை இப்போது பத்திரமாக கவனித்துக்கொண்டாலும், முன்னரே சற்று அவள் உடலுக்கு கவனம் கொடுத்திருக்க வேண்டும் என்று உள்ளூர வருதத்துடனே இருந்தாள். மகள், நினைவு தெரிந்த நாள் முதல் இப்படிப் படுக்கையில் எல்லாம் படுத்து, முகம் வாடி, ஓய்வெடுத்து அவள் பார்த்திருக்கவே இல்லை. எந்நேரமும் ஓடி, ஓடி உழைத்த பானு தன் உடலைப்பற்றிக் கவலைப்படாமல் இருந்துவிட்டது இப்போது வருத்தமளித்தது. குதூகலத்தோடு இருக்க வேண்டிய கர்ப்பிணியை, இப்படிச் சோர்வாய் அசையாமல் படுக்கவைத்து விட்டார்களே என்று ஓயாமல் புலம்பி வந்தாள்.
அந்த நேரம், பானுவின் நெருங்கிய தோழி அர்ச்சனா கனடா நாட்டிலிருந்து தொலைபேசி மூலம் அழைத்திருந்தாள். பானு, தனக்கு திடீரென என்ன நேர்ந்தது என்பதையும், கர்ப்பப்பை சற்று பலவீனமாக இருப்பதாகவும், கர்ப்பகாலம் முழுக்க அதீத ஓய்வில் இருக்கச் சொல்லி இருப்பதையும் சொல்லி வருத்தப்பட்டாள். மேலும் இப்படி ஒரே இடத்தில் இருப்பது சித்ரவதையாக இருப்பதாய் புலம்பினாள். அதற்கு அர்ச்சனா அவளுக்கு ஆறுதல் சொல்லும்பொருட்டு, ''தைரியமாக இரு, ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாமல் நீ ஓடியதால் கடவுள் இந்த நேரத்தில் உனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார். மனம் தளர வேண்டாம், எல்லாம் நன்மைக்கு என்று எடுத்துக்கொள். உடலின் மீது நம்பிக்கை வை. எனக்கும் சில சவால்கள் இருந்தன'' என்று சொல்லி, தனக்கு நடந்தவற்றை விளக்கினாள்.

'எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக கர்ப்பம் உண்டாகி இருந்தது'' என்று ஆரம்பித்த அர்ச்சனா, ''நான்கு மாத கர்ப்பமாக இருக்கும்போது திடீரென ஒருநாள் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இரவோடு இரவாக மருத்துவரைச் சென்று பார்த்தபோது, இது சாதாரணமாக வரும் ஒரு நிகழ்வு என்று சொல்லி அவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார். மறுநாள் மிக அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனை வந்தடைந்தபோது ஸ்கேன் எடுத்துப் பார்க்கச் சொன்னார்கள். பின்னர், சிசு வெளியேறிவிட்டதை உறுதிப்படுத்தி, 'வி ஆர் ஸாரி, துரதிர்ஷ்டவசமாக கரு வெளியேறி விட்டது' என்றார்கள் மருத்துவர்கள்.
இந்தத் தகவலை, என் தாயிடமும், என் கணவரின் தாயிடமும் சொன்னார்கள் மருத்துவர்கள். எங்கள் குடும்பத்தில் பலரும் மெத்தப் படித்த மருத்துவர்கள். அவர்கள் இதைக் கேள்விப்பட்டு கடும் எதிர்ப்பும் அதிர்ச்சியும் கொண்டு அந்த கனடா நாட்டு மருத்துவரையும், மருத்துவமனையையும் வசைபாடினார்கள். அவர்களின் மீது வழக்கு தொடுத்து கொந்தளிப்பை ஏற்படுத்தினார்கள்.

காரணம், லேசாக உதிரப்போக்கு இருக்கும்போதே எனக்கு சில ஹார்மோன் ஊசிகள் அல்லது மருந்துகள் கொடுத்திருந்தால், கரு காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது என் வீட்டினரின் வாதம். அதை ஏன் அவர்கள் செய்யவில்லை என்று ஒரே கூக்குரல். மீண்டும் மீண்டும், ஏன் அதை அவர்கள் செய்யவில்லை என்று, என் கணவரை மருத்துவரிடம் விளக்கம் கேட்கச் சொன்னார்கள். இதுமாதிரி அடுத்த முறையேனும் எந்தத் தவறும் நடக்கக்கூடாது என்று கோபமாகி, என் கணவரும் அந்த மருத்துவரை கடும்கோபத்தில் கேள்வி கேட்டார். அப்போது அந்த மருத்துவர் என்னையும் என் கணவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு, எங்களுக்கு ஒரு விளக்கம் அளித்தார்.
'அதாவது உடம்பில் ஒவ்வோர் உறுப்பிற்கும் அளவுகடந்த அறிவும், ஞானமும் உள்ளது. தனக்கு எது தேவை, எது தேவை இல்லை என்றெல்லாம் அதற்கு நன்றாகத் தெரியும். கர்ப்பப்பை, அனைத்தையும்விட மேலான ஓர் உறுப்பு. அந்த உறுப்பால் வேலைசெய்ய முடியாத நிலையில் இருந்திருந்தாலோ, அல்லது தனக்குள் குடிபெயர்ந்து இருக்கும் சிசுவானது நல்ல நிலையில் இல்லாமல் இருந்தாலோ நிச்சயமாக அதை வெளியேற்றிவிடும். அதை மீறி நாம் மருந்து, மாத்திரை மூலம் அதைச் சரிசெய்ய நினைக்கும்போது அந்த செயற்கைத் தன்மை ஏதேனும் ஒரு விதத்தில் கருவை பாதிக்கும். ஆக தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகப் புரிந்துகொண்டு அந்த வேலையைச் சரிவர செய்திருக்கும் உங்கள் கர்பப்பையைப் பாராட்டாமல், என்னை தயவுசெய்து திட்டிக்கொண்டிருக்க வேண்டாம். அடுத்தமுறை நல்ல முறையில் உங்கள் உடலையும், கர்பப்பையையும் பராமரித்து பேறுகாலத்திற்குத் தயாராகுங்கள்' - இப்படிச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றார் அந்த மருத்துவர்.

அப்போதும்கூட என்னால் சமாதானம் ஆகமுடியவில்லை பானு. ஆனால் என் கணவர் மிகத் தெளிவாக அந்த உண்மையை விளங்கிக்கொண்டு, என்னை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆறுமாதம் இருவரும் நல்ல முறையில் உடலையும் மனதையும் தயார்படுத்த, அடுத்த கர்ப்பம் மிக ஆரோக்கியமானதாக நடந்தேறி, அதே மருத்துவரிடம் காண்பித்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொண்டோம்!'' - நீண்ட நேரம் அர்ச்சனா பேசி முடித்தபிறகு, பானுவுக்கு ஏதோ புரிந்ததுபோல இருந்தது.
இதையெல்லாம் பானு தன் தாயிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அவள் மனதிற்குள் எண்ணற்ற கேள்விகள். இப்படிப் படுக்கையில் படுத்திருக்கும் பானுவிற்கு குழந்தை நல்லபடியாக வளருமா? என்ன செய்தால் அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்? நடமாடி ஓடி ஆடி இருந்தால்தானே நல்ல பசி எடுக்கும்? குனிந்து, நிமிர்ந்து வேலைசெய்யாமல் எப்படி சுகப்பிரசவமாகும்? - இப்படி ஆயிரம் கேள்விகள். அவள் இப்படிக் கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கும்போதுதான், வீட்டுவேலை செய்யும் நம் சகலகலா மாலா அங்கு ஆஜர் ஆகிறாள். பானுவின் அம்மாவுக்குத் தைரியம் சொல்லிப் பார்த்தாள் மாலா. ஆனால், அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மாலாவிடம் பதில் இல்லை. ''இருங்க நான் சீதா அக்காவைக் கூட்டி வர்றேன், அவங்க உங்களுக்கு எல்லாத்தையும் கரெக்ட்டா சொல்லுவாங்க'' என்றாள்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்மணியா என்று, உடனடியாக பானுவின் தாய் சீதாவைச் சந்திக்கக் கிளம்பினார்.
மருத்துவ சமையல்!
பிரசவக் குழம்பு!
பிரசவக் குழம்பு அல்லது செலவுக் குழம்பு, பேறுகாலத்தின்போது பெண்களுக்குச் செய்துகொடுக்க வேண்டிய குழம்பு.
தேவையான பொருள்கள்
1. கண்டந்திப்பிலி - 50 கிராம் 2. அரிசித்திப்பிலி - 50 கிராம் 3. மிளகு - 100 கிராம் 4. சீரகம் - 50 கிராம் 5. வால்மிளகு - 50 கிராம் 6. பெருங்காயம் - 50 கிராம் 7. சுக்கு - 50 கிராம் 8. அக்ரா - 10 கிராம் 9. தேசாவரம் - 200 கிராம் 10. அதிமதுரம் - 10 கிராம் 11. ஓமம் - 400 கிராம் 12. சதகுப்பை - 25 கிராம் 13. விரலி மஞ்சள் - 10 கிராம்

இவற்றையெல்லாம் வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்துப் பொடி செய்யவும், அல்லது மெஷினில் கொடுத்து அரைக்கவும்.
குழம்பிற்கு...
சின்ன வெங்காயம் - 30 (உரித்து நறுக்கவும்)
பூண்டு - 3 (முழுதாக உரித்து எடுக்கவும்)
தாளிக்க - வடகம் அல்லது கடுகு வெந்தயம்புளி - எலுமிச்சை அளவு (சுட்டுக் கரைத்தது) மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதுஉப்பு - சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் - தாளிக்க...

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு வடகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு தாளிக்கவும். புளித்தண்ணீரில் ஒரு டேபிஸ்பூன் பொடி, அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்துத் கரைத்து வாணலியில் விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பசு நெய் அல்லது நல்லெண்ணெய்யில் சமைப்பது நல்லது. பேறுகாலப் பெண்களுக்குத்தான் என்றில்லை, மாதத்திற்கு ஒரு நாளோ, இரண்டு நாளோ அனைவருமே இந்தக் குழம்பு சாப்பிடலாம்.
குறிப்பு: இதில் காரப்பொடி, வெள்ளை சுதும்பு, கச்ச கருவாடு போட்டும் வைக்கலாம். சைவர்கள் பிஞ்சுக் கத்தரிக்காய், முருங்கைக்காய், நாட்டு அவரை சேர்த்துச் சமைத்துக்கொள்ளலாம்.
- டாக்டர் விஜயப்ரியா பன்னீர்செல்வம்