இங்கிலாந்தின் பெண் கிரிக்கெட் வீரர் சாரா டெய்லர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக 2019-ல் அறிவித்தார். தனது முப்பதாவது வயதில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக புகழின் உச்சியிலிருந்த சமயத்தில் அவர் இந்தக் கடின முடிவை அறிவிக்கக் காரணமாக இருந்தது Anxiety (பதற்றம்) எனும் மனநல பாதிப்பு. இது மிகக் கடினமான முடிவு என்றும் ஆனால் தன்னுடைய மன நலத்தை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் சாரா அறிவித்திருந்தார்.
மிக இளம் வயதில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து 13 ஆண்டுகள் உலகில் பல்வேறு போட்டிகளில் விளையாடி புகழின் உச்சியில் இருக்கும் ஒருவர் தனக்கு மன நலம் சரியில்லை, அதனால் விலகுகிறேன் என்று சொல்வது நம் நாட்டில் இன்னமும் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம்.
ஏனெனில் நாம் இங்கே உடல் நலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால்பங்கு கூட மன நலத்திற்குக் கொடுப்பது இல்லை. மன நலம் மற்றும் மன நோய் தொடர்பான எல்லா விஷயங்களும் சமூகத்தின் பொதுப்புத்தியில் இன்னமும் அவசியமில்லாததாக இருக்கின்றது.

இந்தியாவில் அதிகம் பேருக்கு மனநல பாதிப்பு ஏற்படுவதற்கு பொருளாதார சூழ்நிலையும், பொருள் ஈட்டுவதை முதன்மையாக கொண்ட வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். பொருளாதாரத்தை நோக்கி ஓட வேண்டிய தேவை இருக்கும் ஒரு வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்குத் தேவைப்படும் வயதில் பெற்றோர்கள் உடன் இருப்பதில்லை. உடன் இருந்தாலும் பிள்ளைகளை பல்வேறு காரணங்களுக்காக தேவையில்லாமல் கண்டிக்கின்றனர். தங்களது வேலை, தொழிலில் பிரச்னை இருப்பவர்கள் அந்த அழுத்தத்தை பிள்ளைகளின் மேல் காட்டுகின்றனர். கல்வியின் மூலமே வாழ்க்கையில் அடுத்தகட்ட பொருளாதார நிலையை எட்ட முடியும் என்று சிறுவயது முதலே குழந்தைகளுக்கு போதிக்கின்றனர்.
பதின்வயதில் இருக்கும் குழந்தைகள் முதன்முதலில் மனநல பாதிப்புக்கு உள்ளாகும்போது பெரும்பாலான பெற்றோர்கள் அதை மனதில் பிரச்னை என்று புரிந்து கொள்ளாமல் அடிக்கவும், திட்டவும் செய்கிறார்கள். பொய் சொல்கிறார்கள், அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள், கவன ஈர்ப்பிற்காக செய்கிறார்கள் (Attention Seeking) என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டப்படுகிறது.
மனநலக் குறைவால் அதிக உணர்ச்சிவசப்பட்டு வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளும் பிள்ளைகளை திரைப்படங்களில் வருவது போல பௌர்ணமி, அமாவாசையை காரணம் காட்டுவது, பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி கோயிலுக்கு அழைத்துச் செல்வது போன்ற காரியங்களையும் செய்கிறார்கள். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து வீட்டுக்குள் பூட்டி வைக்கிறார்கள். அதிக அளவில் Physical Abuse-ற்கு ஆளாகுபவர்கள் இத்தகைய குழந்தைகள் மற்றும் பெண்கள்தான்.
பதின் பருவத்தில் ஏற்படும் பாலியல் எண்ணங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியில் கவனச் சிதறல்களை ஏற்படுத்தும்போது அதை ஒரு கொடுந்தவறு போல பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். அதனால் பிள்ளைகள் தொடர்ந்து குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அது அவர்களுக்கு மனநோயாக மாற வாய்ப்புகள் அதிகம்.
13 வயது முதல் 17 வயது வரை உள்ள 98 லட்சம் பதின்பருவ குழந்தைகள் இந்தியாவில் மனச்சோர்வு மற்றும் பல மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் (NIMHANS, Bengaluru) 2015-16 ஆண்டிற்கான ஆய்வறிக்கைக் கூறுகிறது. உடனடியாக தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுவிக்க வேண்டிய சூழலில் அவர்கள் இருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டில் கல்வி நிலையங்கள் மற்றும் வீடுகளில் மனநலம் பற்றிய தொடர் உரையாடல்களை நிகழ்த்துவதற்கும், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த ஐந்து ஆண்டுகளில் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளில் போதாமை இருக்கிறது.

அதே சமயம் இந்தியாவில் போதிய அளவுக்கு மிகக் குறைவாகவே மனநல மருத்துவ துறையினர் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஆய்வறிக்கைச் சொல்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா மிகப்பெரும் பொருளாதார சீரழிவை அடைவதற்கு மனநோய் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
தூக்கமின்மை, சரியாக சாப்பிட முடியாமல் இருப்பது, யாருடனும் பேசப் பிடிக்காமல் இருப்பது, நாள்தோறும் செய்யும் வேலைகளை குறிப்பிட்ட சமயத்தில் செய்ய முடியாமல் போவது, அதற்காக பதற்றம் மற்றும் மன வருத்தம் கொள்வது, காரணமில்லாமல் அழுகை, சோகமாக இருத்தல், எல்லோரிடமும் சந்தேகம் மற்றும் கோபம் கொள்வது என இயல்புக்கு மாறாக இருப்பது ஒருவர் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள். பொருளாதார இழப்பு, லட்சியம் அல்லது கனவுகள் நடக்காமல் போகுதல், உறவுகளின் பிரிவுகள் இவை மனநலத்தை பாதிக்கலாம்.
அதுபோக பிரியமானவர்களின் இழப்பு, இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து கேட்கும் மரணம் மற்றும் நோய் பற்றிய செய்திகள் மனநலத்தை பாதிப்படையச் செய்யலாம்.
உலகில் நடக்கும் தற்கொலைகளில் 36.6 சதவிகிதம் இந்தியாவில் நடப்பதாக லான்செட் வீக்லியின் ஆய்வு கூறுகிறது. 15 முதல் 29 வயது வரையில் உள்ள பெண்களின் மரணத்திற்கு தற்கொலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் அதிக கவனம் மற்றும் உடனடி நடவடிக்கையும் தேவைப்படும் இத்தகைய ஆய்வு முடிவுகள் பொது சமூகத்தில் சிறு சலசலப்பைக்கூட ஏற்படுத்துவதில்லை.
அதே சமயம் மனநலப் பிரச்னைகள் இருந்த ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொள்ளும் போது சமூக வலைத்தளங்களில் எதிர்வினைகள் வேறு மாதிரி இருக்கின்றன.
“மனநலம் சரியில்லை என்றால் தனியாக இருக்காதீர்கள், கவலையில் இருக்காதீர்கள், எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்று பலரும் தொடர்பு எண்களை பகிர்வதை பார்த்திருக்கலாம். ஒருவகையில் இத்தகைய Moral Support பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையாக இருந்தாலும் மன நோய்களுக்கான சரியான தீர்வு மருத்துவரிடம் செல்வதே ஆகும். ஆன்லைனில் ஆதரவு என்கிற பெயரில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இதனால் ஏற்படுகின்றன.

பெரிதாக அறிமுகமில்லாதவர்கள் யாரிடமாவது இதுபோன்ற நேரத்தில் தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்தில் போய் முடிகிறது. சமீபமாக Social Media #MeToo பாலியல் குற்றச்சாட்டுகளின் தொடக்கமாக 'Are you Depressed?' எனும் கேள்வி இருக்கிறது.
Are you depressed என்பது Pickup lineஆக மாறுவதற்கு பின்னால் குடும்பங்களில் மனநல பிரச்னைகளை கையாளும் விதம் முக்கிய காரணங்களில் ஒன்று. குடும்பத்தில் ஒருவருக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தாலும், அவரின் நியாயமான கேள்விகள், கோபங்கள்கூட மனநலம் பாதிப்பட்டிருப்பதின் விளைவு என சொல்லி புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு பயந்து பலரும் தாங்கள் உணரும் மன மாற்றங்களை ஆரம்பத்திலேயே சொல்வதில்லை. அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒருவர் சொல்லும்போது அதை அலட்சியப்படுத்தும் குடும்பத்தினரே இங்கு அதிகம். இந்த அலட்சியங்கள் மற்றும் புறக்கணிப்புகள் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் கிடைக்கும் இடம் நோக்கி நகர்த்துகிறது. அந்நகர்வினால் பிரச்னைகள் ஏற்படும்போது ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களே அங்கு பலியாக்கப்படுகிறார்கள். #VictimBlaming
ஆரம்ப காலம் முதலே தமிழ்த் திரைப்படங்களில் மனநலம் பாதிக்கப்படிருப்பவர்கள் பற்றிய சித்திரங்கள் மிக மோசமானவை. திரைப்படங்கள் பெரும்பாலும் சமகால சமூகத்தை பிரதிபலிப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். மறுபக்கம் பெரும்பான்மை மக்கள் திரைப்படங்களில் இருந்தே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
தமிழ்த் திரைப்படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் தலைமுடி கலைந்து, கிழிந்த ஆடைகளை உடுத்தி, கையில் கிடைத்தவற்றை எல்லாம் உடைத்து, சத்தமாக பேசிக்கொண்டு, சிறுபிள்ளைகள் போல் நடந்து கொள்வது என தங்கள் வயதிற்கும், தோற்றத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் செய்பவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என காட்டியிருப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இவை பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளாக திரைப்படங்களில் வரும். இந்த தவறான நகைச்சுவை காட்சிகள் மீம் டெம்ப்ளேட்டுகளாகி இன்று மிக சகஜமாக இளம் தலைமுறையினரிடம் வலம் வருகின்றன.

திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும் பெண்ணுக்கு தனிமையினால் ஏற்படும் மனச்சோர்வை பற்றிப் பேசும் ‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படம் முக்கியமானது. மனநல பாதிப்புள்ளவர்களிடம் குடும்பமே மோசமாக நடந்து கொள்வது, சமூகம் அவர்களை ஒதுக்கி வைப்பது, அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து மறுவாழ்வு அமைத்துக்கொள்வதை பற்றிய ‘போராளி’ திரைப்படம் என ஒரு சில நல்ல திரைப்படங்களும் மனநலம் பற்றிய அடிப்படை புரிதலுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை எண்ணிக்கையில் மிகக் குறைவு.
சமூக வலைதளங்களில் இயங்கும் படித்தவர்கள், முற்போக்காளர்கள், சில சமயம் மருத்துவர்களே கூட சாதி/மத வெறியை தூண்டுபவர்கள்/செய்பவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற பொருளில் ’பைத்தியம்’ என்கிறார்கள்.
இதுபோன்ற குற்றங்களை ’தெரிந்தே செய்பவர்களை’ கிரிமினல்கள் என்றழைப்பதே சரி. அதேபோல் இணையத்தில் தங்களுக்கு எதிர்கருத்து கொண்டிருப்பவர்களை உளறுகிறார்கள் என்று சொல்வதற்காக, ”வண்டியில ஏறுங்க பேசிக்கிட்டே போகலாம்” என்று மனநல மருத்துவமனையின் பெயரிட்ட வாகனத்தின் பட டெம்பிளேட்டோடு கேலி செய்வதை மிக சகஜமாக பயன்படுத்துகிறார்கள். மனநல சிகிச்சையில் இருப்பவர்கள் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் இதுபோன்ற பதிவுகளை பார்க்கும், கேட்கும்போதும் அது எத்தகைய மன உளைச்சலை அவர்களுக்கு ஏற்படுத்தும் என சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
இளம் வயதினரின் தற்கொலை என்றவுடன் பெரும்பாலும் பரீட்சை மற்றும் காதலில் தோல்வி பொருளாதார பின்னடைவு போன்ற விஷயங்களைத்தான் பேசுகிறோம். தற்கொலை வரை சொல்லும் மன அழுத்தம்/மனச்சோர்வு/பதற்றம் பற்றி நாம் பேசுவது இல்லை. தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கான மனநிலையை ஏற்படுத்த சிறுவயதில் இருந்து பழக்கப்படுத்த வேண்டும். பந்தயக்குதிரையை போல் வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கு அதிக அளவில் மனச்சிதைவு மற்றும் மனச்சோர்வு நோய்கள் ஏற்படுகின்றன.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார். மனநோய்க்கு எதிரான அவரது போராட்டங்களை பற்றி தொடர்ந்து வெளிப்படையாக பேசியும் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார். இதுபோல் பிரபலமானவர்கள் தங்களின் மனநோய் பற்றி வெளிப்படையாக பேசுவது மனநோய் குறித்து மக்களிடையே இருக்கும் Social Stigma-வை நீக்க உதவியாக இருக்கும்.
Also Read
உலக மனநல விழிப்புணர்வு நாளான அக்டோபர் 10, 2020, உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவில் 2020 ஆண்டு முடிவில் 20 சதவிகித மக்கள் மனநலம் பாதிக்கப்படுவார்கள் என்றும், 5.6 கோடி மக்கள் மனசோர்வினாலும் (Depression), 3.8 கோடி மக்கள் பதற்றத்தினாலும் (Anxiety) பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. பாலியல் குற்றங்கள், அதன் மீதான விவாதங்கள், விழிப்புணர்வுகள் பற்றி ஓரளவு வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டோம். ஆனால் மனநலம் இன்னமும் பேசக் கூடாத விஷயமாக அணுகப்படுகிறது.
மனநலத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதில் அவமானம் ஏதுமில்லை. உடலில் ஏற்படும் மற்ற எந்த நோயை போலதான் மனநோயும். அலட்சியப்படுத்தவோ, அவமானமாக நினைக்கவோ தேவையில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைவிட நமது நலமும், மகிழ்ச்சியுமே முக்கியம்.