
டாக்டர் சசித்ரா தாமோதரன், மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்
அனிதா, ஓர் ஆன்லைன் நிறுவனத்தின் மூத்த மேலாளர். வினோத், நகரின் பல பெரிய தொழிற்சாலைகளுக்கு சட்ட ஆலோசகர். இரட்டைக் குழந்தைகளுடன் நகரும் ஐந்தாண்டுகள் திருமண பந்தம் இவர்களுடையது. குழந்தைகளை கவனிக்கவேண்டி, தனது வேலையை வீட்டிலிருந்தபடி மேற்கொண்டார் அனிதா.

வீட்டிலிருந்தபடியே வேலை என்பதால், அலுவலகத்திலிருந்து செய்வதைவிட வேலை கடுமையானதாக மாறிவிட்டது அனிதாவுக்கு. எப்போதும் க்ளையன்ட், கால்ஸ், மீட்டிங், டார்கெட், டெலிவரி எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டே குழந்தைகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் தன் காதல் மனைவியிடம் ஓர் இரவு, ‘ஆறு மாசமாச்சு... நம்ம தாம்பத்யமே காணாமப்போச்சு’ என்று வினோத் கூற, குற்ற உணர்வுடன் கணவனை அணைத்துக்கொண்டாள் அனிதா. அந்நேரம் பார்த்து ஒரு கால் வர, சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து, காலையில் அனுப்பத் தவறியிருந்த மெயில்களை அந்த நள்ளிரவில் அனுப்பிக்கொண்டிருந்தாள். தனது அலுவலகப் பணியை முடித்து, ‘ஸாரிடா...’ எனத் திரும்பியபோது, ஏமாற்றத்துடன் வினோத் உறங்கி வெகுநேரம் ஆகியிருந்தது.
35 வயதான அனிதா மட்டுமல்ல, உலகெங்கும் சமூகத்தில் வெற்றிபெற முயலும் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கை சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் தவறிவிடுகின்றனர். ‘உங்கள் அலுவலகம் உங்கள் தாம்பத்யத்தைக் கொல்கிறது!’ - இது, நம் நாட்டின் பல முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவு அறிக்கை. ஆண், பெண் இருபாலாரும் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்தத் தவறியதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு. மேலும், தங்கள் தாம்பத்ய வாழ்க்கையை சமரசம் செய்துகொள்ள இருபாலினரும் கூறும் காரணங்களையும் இது வெளியிட்டுள்ளது.
‘எனக்கு ரொம்ப தலை வலிக்குது... இன்னிக்கு வேணாம்...’ என்பதே செக்ஸைத் தவிர்ப்பதற்காகச் சொல்லப்படும் முதன்மையான காரணம்; ‘இன்னிக்கு நாள் முழுக்க வேலை ரொம்பவும் பிஸி, செம டயர்டா இருக்கு...’ என்பது அடுத்த காரணம் என்று கூறும் ஆய்வு, உடலுறவைத் தவிர்ப்பதில் ஆண்களும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள் என்றும் கூறுகிறது. (பெண்கள் 46%, ஆண்கள் 43%).
தாம்பத்ய உறவை ‘செக்ஸர்சைஸ்(Sexercise)’ என அழைக்கும் மருத்துவ அறிவியல், அது உடலின் பல ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, உடல் மற்றும் மனரீதியாகப் பல நன்மைகளை அளிக்கிறது என்கிறது. பெண்களின் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களுடன் ஆக்ஸிடோசின், வாஸோப்ரெஸின், அட்ரீனலின் சுரப்பிகளும் தூண்டப்படும். அவற்றின் மூலமாக உற்பத்தியாகும் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களான டோபமைன், செரடோனின் மற்றும் என்டார்ஃபின்கள் தாம்பத்ய உறவின்போது அதிகம் சுரந்து இருவரிடையே மனநிறைவை அளிப்பதுடன், நேர்மறை எண்ணங்களை அதிகரித்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

இவற்றில், மூளைக்குள் சுரக்கும் என்டார்ஃபின்கள் மனஅழுத்தத்தைக் குறைத்து திருப்தியான நிலையையும், நல்லுறக்கத்தையும் அளிக்கின்றன. கூடவே இந்த என்டார்ஃபின்கள் சிறந்த வலி நிவாரணிகளாகவும் விளங்குகின்றன. எனவே, தொழில் சார்ந்து நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருப்பதால் ஏற்படும் உடல் அசதி, தசை வலி மற்றும் தலைவலியைப் போக்கி, புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. மேலும், முந்தைய இரவின் மன நிறைவு, கிட்டத்தட்ட 24 மணிநேரம்வரை நீடிப்பதால் மறுநாள் பணியில் சுறுசுறுப்பாகவும் திறம்படவும் செயல்பட என்டார்ஃபின்கள் உதவுகின்றன. ஆக, இன விருத்திக்கு மட்டுமன்றித் தொழில் விருத்திக்கும் உதவுகிறது இனிய இல்லறம்.
சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படும் உடலுறவு என்ற ‘செக்ஸர்சைஸின்’போது, உங்கள் தசைகளிலும் திசுக்களிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து ரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகும். அவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த அழுத்தம், உடற்பருமன், இதய நோய் மற்றும் பல்வேறு வாழ்க்கை முறை நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன. அனைத்திற்கும் மேலாக, புரிந்துணர்வுடன் கூடிய தாம்பத்யம் உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, வயோதிகத்தைத் தள்ளிவைத்து, வாழ்நாளையும் நீட்டிக்கிறது என்கிறது மருத்துவ அறிவியல்.
கணவன், மனைவி இருவருமே பணிக்குச் செல்லும் தற்போதைய சூழலில், நிலைமையே வேறு. தம்பதி இருவரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைந்துகொண்டே வருவதால் அனிதாவைப்போலவே பெரும்பான்மையினர் சுலபமாக, ‘முக்கியமான வேலைகள் இருப்பதால் நீங்கள் சற்றுப் பொறுத்திருக்க வேண்டும்’ என்று மறுக்கிறார்கள். இதனால் கணவன், மனைவியிடையே இடைவெளி அதிகமாவதுடன் மனஅழுத்தம், திருமண பந்தத்தை மீறிய உறவுகள், மதுப்பழக்கம், ஆபாசப்படங்களில் ஈடுபாடு, தற்கொலை முயற்சி, விவாகரத்து என ஒரு பெரும் சமூகநோயாகவே இது உருவெடுத்துவருகிறது. இவை போதாதென்று நைட் ஷிஃப்ட், சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு, மனஅழுத்தம் என அனைத்துமே தூக்கமின்மைக்கு அடிகோல, காலப்போக்கில் பல்வேறு வாழ்க்கை முறை நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். இதனால் அனைவருக்குமே ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருமடங்கு அதிகமாவதைக் காண்கிறோம்.
சரி, இதிலிருந்து எப்படித் தப்பிப்பது? மேலைநாடுகள் பல வழிகளைக் காட்டுகின்றன. ‘இரவு நேரம் இல்லறத்துக்கானது, உழைப்புக்கானதல்ல, Just Make Time for it.’ என்பதை வலியுறுத்தும் ஸ்வீடன் அரசு, சமீபத்தில் இதில் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்வீடனின் ஓவர்டார்னியே நகரத்தில், ஒன்றாகப் பணிபுரியும் தம்பதிகளுக்கு அவ்வப்போது ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளிப்பதுடன், பணியிடையே வாரம்தோறும் கட்டாய ஓய்வாக சில மணிநேரத்தை ஒதுக்கி, அந்நேரத்தில் உடற்பயிற்சி அல்லது தாம்பத்ய உறவை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திவருகிறது அரசு. செக்ஸ் என்பது நல்லதோர் ஆரோக்கியமான உடற்பயிற்சி என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அது கூறுகிறது. மக்கள் தொகை குறைந்து காணப்படும் ஸ்வீடன் நாட்டில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த இணக்கமான பணிச்சூழல்(Flexible work) நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
வேலைப்பளுவை எப்போதும் படுக்கைக்குக் கொண்டுவராதீர்கள்!
செய்ய வேண்டியவை!
வீட்டிற்கு அலுவலக வேலைகளை எடுத்துச் செல்லாதீர்கள்.
உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்தைப் பேணுங்கள்.
மனதிற்குப் பிடித்த இசையைக் கேளுங்கள்.
மனம்விட்டுச் சிரியுங்கள்.
குறைந்தது எட்டு மணிநேரமாவது உறக்கம்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைத் தொடர்ச்சியாகச் செய்யுங்கள்.
ஹோட்டல், ஷாப்பிங் என வாரத்திற்கு ஒருமுறையாவது துணையுடன் வெளியே செல்லுங்கள்.
வருடத்திற்கு ஒருமுறையாவது நீண்ட தூரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள்.
பருப்பு மற்றும் கொட்டை வகைகள், பழங்கள், கீரை வகைகள், மீன் மற்றும் முட்டை, இவற்றுடன் சாக்லெட் ஆகியவை Aphrodisiac என்ற பாலுணர்வுத் தூண்டுகோல்கள் என அறியப்படுகின்றன.
தவிர்க்க வேண்டியவை!
அலைபேசி, தொலைக்காட்சியிலிருந்து விலகி இருங்கள்.
முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றிடம் நீங்கள் தொலைப்பவை உங்கள் நேரத்தையும், தூக்கத்தையும் மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் தான்.
காபியில் உள்ள கேஃபின் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு புத்துணர்வையும் சுறுசுறுப்பையும் தரும் என்றாலும், இரவு நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது.
அதிக காரம், எண்ணெய் மற்றும் மசாலா உணவுகளை உட்கொள்வதால் மந்த நிலை ஏற்படுகிறது என்பதால் தவிர்ப்பது நல்லது.
மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக அருந்தும் மதுபானங்கள் உங்களது செயல்திறனை முடக்கிவிடும்.
புகைபிடித்தல் ஆண்மைக்குக் கேடு என்பதை மறவாதீர்கள்.