வயதானவர்கள் மீண்டும் தங்களது இளமையைப் பெற இளையவர்களின் ரத்தத்தைக் குடிப்பது அல்லது அதில் குளிப்பது போன்ற விஷயங்களைச் செய்வதாக புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்படிச் செய்வதால் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?!
கதைகளைத் தாண்டி நிஜத்தில் ஒருவர் இப்படிச் செய்தால், எப்படியிருக்கும்..? கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா…
அமெரிக்காவைச் சேர்ந்த டெக் தொழில்முனைவோர் தான் 45 வயதான பிரையன் ஜான்சன் (Bryan Johnson). இவருக்கு 70 வயதில் ரிச்சர்டு என்ற தந்தையும், 17 வயதில் டால்மேஜ் என்ற மகனும் இருக்கின்றனர்.

இவர்கள் மூவரும் ஏப்ரல் 3 அன்று டல்லாஸில் உள்ள கிளினிக் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். முதலில் அவரின் மகன் டால்மேஜிடம் இருந்து லிட்டர் அளவில் ரத்தம் எடுக்கப்பட்டு, எந்திரத்தின் உதவியுடன் திரவ பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட் போன்றவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன.
அடுத்ததாக பிரையனிடமிருந்தும் ரத்தம் பெறப்பட்டு இதே செயல்முறை நிகழ்த்தப்பட்டது. இவருக்குக் கூடுதலாக மகனின் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. அதன்பிறகு இவரின் தந்தை ரிச்சர்டும் இதே செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டார். இவருக்கு பிரையனின் பிளாஸ்மா செலுத்தப்பட்டு, நீண்ட நேரத்திற்குப் பின் மகன், தந்தை, தாத்தா என மூன்று தலைமுறையினர் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை மாற்றிக் கொண்டனர். இது போல 18 முறை இவர்கள் செய்துள்ளனர்.
ஏன் இப்படிச் செய்கிறார்கள், இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா செலுத்துவதை ஒரு புத்துணர்ச்சி சிகிச்சையின் சோதனையாகச் செய்துள்ளனர். இதற்காக வயதான எலிகளில், இளைய எலிகளின் பிளாஸ்மாவை செலுத்திப் பரிசோதித்ததில், வயதான எலிகளின் அறிவாற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்கையில் உடலானது பழையதை நீக்கி புதிய செல் மற்றும் திரவங்களை உற்பத்தி செய்வதற்கான சான்றுகளும் இருக்கின்றன.
கோவிட் தொற்று சமயத்தில், கோவிட் நோயாளிகள் சிலருக்கு கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மா கொடுக்கப்பட்டது. இது அவர்களின் உடலில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்து நோயில் இருந்து குணமடைய வழிவகுத்தது. ஆனால், 2021-ல் உலக சுகாதார அமைப்பு இந்தச் செயல்முறையை எதிர்த்தது.

ஜான்சன் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், சரியான உடல் எடை, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்தும் பிளாஸ்மாவை பெற்றிருக்கிறார். வயதாகும் செயல்முறையை மெதுவாக்குவது அல்லது ரிவர்ஸ் செய்வதற்காக இவர் வருடத்திற்கு 2 மில்லியன் டாலர்கள் வரை செலவு செய்கிறார்.
இவரை கண்காணிக்க மருத்துவர் குழு ஒன்றும் இருக்கிறது. ஜான்சனின் மருத்துவக் குழு, அறிவாற்றல் குறைபாடு மற்றும் பார்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான சாத்தியமான சிகிச்சையாக இந்தச் செயல்முறையை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.