கேமராவுக்கு ஏற்ற முகத்துடனும் தெளிவான தமிழ் உச்சரிப்புடனும் மருத்துவக் குறிப்புகள் வழங்கி வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஆனால், ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ உடல் எடை கூடும்; நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்பன போன்ற மருத்துவத்துக்குப் புறம்பான விஷயங்களை அவர் பகிர ஆரம்பிக்க, வைரலாக்கிய சமூக வலைத்தளங்களே அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தன.
தவிர, ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன்,`மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசிவரும் சித்த மருத்துவர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, விகடனிடம் பேசிய சித்த மருத்துவர் ஷர்மிகா, ``குலோப் ஜாமூன்பற்றி நான் பேசியது ஹியூமன் எரர்தான். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் பொறுப்புணர்வுடன் தெளிவாகப் பேசுவேன். இணை இயக்குநருக்கு என் மீது நடவடிக்கை எடுக்க உரிமையிருக்கிறது என்றாலும், அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது" என்றார்.
இந்நிலையில், மருத்துவத்துக்குப் புறம்பாகப் பேசியுள்ள கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவ இயக்குநரகம், சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், 15 நாள்களுக்குள் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஷர்மிகா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்று இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.