Published:Updated:

இருமல், ஆஸ்துமா, அலர்ஜி போக்கும் விளாம்பழம்!

இருமல், ஆஸ்துமா, அலர்ஜி போக்கும் விளாம்பழம்!
இருமல், ஆஸ்துமா, அலர்ஜி போக்கும் விளாம்பழம்!

விளாம்பழம்... விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகருக்கு வைக்கப்பட்ட படையலில் களாக்காய், நாவல்பழம் வரிசையில் விளாம்பழத்துக்கும் முக்கிய இடமுண்டு. இது ஏதோ பத்தோடு  பதினொன்றாக அல்லாமல் விளாம்பழத்துக்கென்று நீண்ட நெடிய வரலாறும் நிறைய மருத்துவக் குணங்களும் இருக்கின்றன. சங்க இலக்கியமான நற்றிணையில், விளாம்பழத்தைத் தாழிப்பானையில் உள்ள தயிரில் போட்டு தயிருக்கும் மணம் கூட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டதைப்போல இந்து மதத்தில் சிவனுக்கு பிடித்தது பஞ்ச வில்வம் (பஞ்ச வில்வம் என்பது வில்வம், மாவிலங்கை, நொச்சி, கிளுவை மற்றும் விளா மரத்தின் இலை ஆகியவை அடங்கும்). 

விசாக நட்சத்திரத்தின் விருட்சமாக விளா மரத்தைக் குறிப்பிடுகிறார்கள். விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களால் குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே, இதை விசாக நட்சத்திர தோஷம் என்று சொல்வார்கள். இத்தகைய பாதிப்புக்கு ஆ6ளானவர்கள் விளா மரத்தின் நிழலில் இளைப்பாறினால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம் என்று புராணத்தில் சொல்லப்படுகிறது. 

விசாக நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுக்களை தன்னுள் ஈர்த்து வைத்திருக்கும் விளா மரமானது தன்னை தொடுபவர்களுக்கும் தன் நிழலில் ஓய்வெடுப்பவர்களுக்கும் நல்வாழ்வு தரக்கூடியது. குழந்தைப் பாக்கியம் இல்லாமலிருப்பவர்கள், வாய்வுத் தொல்லைகள், நோய்த் தொற்று, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, சர்க்கரை நோய், மனப்பதற்றம், கர்ப்பப்பைக் கோளாறு உள்ளவர்கள் விளா மர நிழலில் இளைப்பாறி வந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் சரியாகும்.

விளா மரத்தை நடுபவர்கள் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று விருட்ச ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுபோன்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விளா மரத்தின் பழங்கள் விரும்பி உண்ணப்பட்டாலும் இந்த மரத்தை ஆர்வமாக நட்டு வளர்க்க யாரும் முன்வராததாலேயே இது ஓர் அரிய வகை மரமாக மாறிவிட்டது. விளா மரத்துக்கும் அதன் பழத்துக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. பெரோனியா எலிபண்டம் (Feronia Elephantum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இதை ஆங்கிலத்தில் wood Apple என்பார்கள். 

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவிளா மரமானது எங்கும் வளரக்கூடியது என்றாலும் காடுகளில் அதிகம் காணப்படுகிறது. வீடுகள், தோட்டங்கள் மற்றும் கோயில்களிலும் வளர்க்கப்படும் இந்த மரம் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. 30 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த மரத்தின் இலைகள் கூட்டிலைகளாக காணப்படும். நல்ல மணம் வீசக்கூடியது; காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாகக் காணப்படும். பழத்தின் ஓடு அதிக கெட்டியாகவும்,  உள்சதை மரத்தின் நிறத்திலும், விதைகள் வெள்ளையாகவும் காணப்படும். 

கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்ற பல பெயர்களைக் கொண்ட விளா மரத்தின் கொழுந்து, இலை, காய், பழங்கள், பட்டை, ஓடு, பிசின் என எல்லாமே மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும். தரையோடு ஒட்டிப் படர்ந்து வளரக்கூடிய அதை நில விளா என்றும் சிறிய மரமாக வளர்வதை சித்தி விளா என்றும், பெரிதாக வளரக்கூடிய மரங்களை பெருவிளா என்றும் கூறப்படுகிறது.

விளாம்பழத்தின் சதை காயாக இருக்கும்போது துவர்க்கும்; பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த புதுச்சுவையுடன் இருக்கும். நறுமணம் வீசும் இந்தப் பழத்தை பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். பசியைத் தூண்டும், ரத்தம் ஊறும், வாந்தியை நிறுத்தும், மலத்தைக் கட்டும். குடலுக்கும் உடலுக்கும் பலம் தருவதோடு விந்து ஊறச் செய்யும், பித்தக் கோளாறுகளை நீக்குவதுடன் அதனால் வரக்கூடிய தலைச்சுற்றலைப் போக்கும். நரம்புகளைச் சுருங்கச் செய்வதுடன் கோழையை அகற்றும்.


விளாம்பழத்தைத் தீயில் சுட்டு அதன் சதையை எடுத்து மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, துவரம்பருப்பு, உப்பு சேர்த்துத் துவையலாகச் செய்து உணவில் சாப்பிட்டு வந்தால் சுவையாக இருக்கும். விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலித் தூள் சேர்த்து சாப்பிட்டால் விக்கல், மேல் மூச்சு வாங்குதல் போன்றவை சரியாகும். பழத்தை மட்டும் சாப்பிடுவதால் வாயில் நீர் ஊறல், வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்கள் நீங்கி நன்றாக பசி ஏற்படும். பிரசவமான பெண்கள் விளாம்பழத்தை கூழாக்கிக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம் பெறும்.
விளாம்பழத்தைப் போல அதன் காயையும் பயன்படுத்தலாம். முழு காயை சட்டியில் போட்டு அது நனையுமளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். வெந்ததும் கீழே இறக்கி உடைத்து அதன் உள்ளே இருக்கும்  சதையை மட்டும் எடுத்து அத்துடன் அரை டம்ளர் தயிர் சேர்த்துக் காலை வேளைகளில் தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்றவை பூரணமாக குணமாகும்.

மேலே சொன்னபடி காயை வேக வைத்து உடைத்து அதன் சதையை எடுத்து உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துத் துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்துத் தொடர்ந்து ஏழு நாள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் சரியாகிவிடும். விளாங்காய் மற்றும் வில்வக்காயின் சதைப்பகுதியை எடுத்து அதைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்து வந்தால் மூல நோய் மற்றும் அதுதொடர்பான பிரச்னைகள் குறையும்.

விளாம்பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து மைபோல அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து காலையில் மட்டும் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். இதை ஆண்கள் 21 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் நீர்த்து பெண் மீதான ஆசை வெறுத்துவிடும். அதனால்தான் `விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு' என்ற பழமொழி புழக்கத்தில் இருந்தது.
விளா மரத்தின் கொழுந்து எலுமிச்சை அளவு எடுத்து அரைத்து பால், கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பசியின்மை, கபத்துடன் கூடிய இருமல், இளைப்பு, பித்தம், கணைச்சூடு ஆகியவை விலகும். தளிர் இலையை அரைத்து 10 கிராம் எடுத்து மோருடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றோட்டம் நிற்கும். இதேபோல் இரண்டு நாள்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

விளா இலைத் தளிர், நாரத்தை இலைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி 100 கிராம் அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் மிளகு, வெந்தயம் 10 கிராம், வறுத்துப் பொடித்த கடலைப் பருப்பு 100 கிராம், உப்பு 20 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதில் சிறிதளவு பொடியை தினசரி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும். அத்துடன் நன்றாக பசி எடுப்பதுடன் எதுக்களித்தல், வாயில் நீர் ஊறல், வாந்தி நிற்கும். இதனால் உடலுக்கு ஊட்டம் கிடைக்கும்.

விளாம்பிசினை உலர்த்தி தூளாக்கி காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு (மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு), நீர் எரிச்சல், உள் உறுப்புகளில் ரணம் போன்றவை சரியாகும். இதைச் சாப்பிடும்போது உணவில் உப்பு சேர்க்கக்கூடாது.

இதுபோன்று இன்னும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை படைத்தது இந்த விளாமரம்.