இந்தியாவில் ஆண்டுதோறும் ஊட்டச்சத்துக் குறைவால் சுமார் 50 லட்சம் குழந்தைகள் மரணம்
அடைகிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரம் நாடு முழுவதும் தேசிய ஊட்டச்சத்து வாரமாக (National Nutrition Week) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வாரத்தில் இந்திய அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் (Food & Nutrition Board )பல்வேறு விழிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்வது இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
தாய்மார்கள் போதிய அளவு ஊட்டமாக சாப்பிடாததால் நாட்டில் சுமார் 20 சதவிகித குழந்தைகள் எடைக் குறைவாக பிறந்து பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.
குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்து சொல்லப்படுகிறது.
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது. ஆறு மாதமாகிவிட்டால் கடைகளில் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் ஏதோ ஒரு 'சத்து ஆகாரம்' என்று சொல்லப்படுகிற உணவை வாங்கி கொடுக்கிறார்கள். இது தவறு.
##~##
புட்டிப் பாலிலும், டப்பா உணவுகளிலும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான புரதம் கிடைப்பதில்லை. மேலும், பால் கொடுக்கும் புட்டிகள் சரியாக சுத்தப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால், தொற்றுக் கிருமிகளால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் இறக்கிறது என்பது வேதனையான விஷயமாக இருக்கிறது.
குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் போது பல பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை கூட நிறுத்தி விடுகிறார்கள். இது மிகவும் தவறு. குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் போது தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வர வேண்டும். அதனுடன் உப்பு, சர்க்கரை கலந்த தண்ணீரை தொடர்ந்து கொடுத்து வந்தாலே வயிற்று போக்கு சரியாகிவிடும். அதே நேரத்தில், குழந்தையை மருத்துவரிடம் காட்டவும் தவறக்கூடாது.
பாலும் கொடுக்காமல், தண்ணீரும் கொடுக்காமல் நிறுத்திவிட்டால், குழந்தையின் உடலில் இருக்கும் நீர் எல்லாம் வெளியேறி குழந்தை இறந்துவிடுகிறது.
ஒரு தாயால் குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்க முடியும். அதற்கு தாய் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம். குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதன் மூலம் அத்தியாவசியமான நுண் சத்தான விட்டமின் ஏ குழந்தைக்கு கிடைக்கும். மேலும், டப்பா உணவுகளுக்கு பதில் கேழ்வரகு, பட்டாணி, சோளம், சோயா பீன்ஸ் போன்ற தானியங்களை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். இவற்றில் புரத சத்து அதிகமாக இருக்கிறது. இதை அறிந்தும் தாய்மார்கள் அவற்றை பயன்படுத்தாத நிலைதான் காணப்படுகிறது.
இரண்டு வயது குழந்தைக்கு தாய் சாப்பிடுவதில் பாதி அளவு சத்தான உணவு தேவைப்படும். இதை பெரும்பாலான தாய்மார்கள் உணராதவர்களாக இருக்கிறார்கள். சத்துக் குறைவால் ரத்த சோகை (அனீமியா), எலும்பு வளர்ச்சி குறைவு, கண் பார்வை மங்குதல், எடை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, இந்த வயதில் பச்சை காய்கனிகள், பழங்கள், பருப்பு வகைகள், கீரைகள், பேரிச்சம் பழம், முருங்கை கீரை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.
குழந்தைக்கு புரதம், கால்சியம், விட்டமின் போன்ற சத்துகள் கலந்த சரிவிகித உணவை கொடுப்பது மிக அவசியம்.
சிலர் குழந்தை அழும்போது எல்லாம் அதன் வாயில் ஏதாவது பிஸ்கட்டை நுழைத்து விடுகிறார்கள். இது அதன் வயிற்றை நிரப்புமே தவிர, அது குழந்தைக்கு தேவையான சத்துகளை அளிக்காது.
ஊட்டச் சத்து கிடைக்கவில்லை என்பதை விட, அது குறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு, வாரம் ஒரு முறை ஆட்டு இறைச்சி கிலோ 380 ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிடுகிறவர்கள், தினசரி 5 ரூபாய், 10 ரூபாய் செலவு செய்து கீரைகள், காய்கறிகளை ஏனோ வாங்கி சாப்பிடுவது இல்லை. இறைச்சி உணவுக்கு இணையான.. ஏன், அதை விட அதிகமான சத்து கீரை, பருப்பு, காய்கறி வகைகளில் இருக்கின்றன.
இப்போதைக்கு நம் மக்களுக்கு தேவை ஊட்டச்சத்து என்பதை விட விழிப்பு உணர்வுதான்..!