டி.வி.அசோகன், மனநல மருத்துவர்குடும்பம்

சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, திங்கட்கிழமை பள்ளிக்கூடம் போவதை நினைத்தாலே, குழந்தைகளுக்கு சோகம் வந்துவிடும். ஐந்து நாட்கள் கடுமையான வேலை, ஒருநாளோ, இரண்டு நாட்களோ வார இறுதி விடுமுறைக் கொண்டாட்டம் என மாறிய பிறகு, பெரியவர்களுக்கும் இந்தத் திங்கட்கிழமை ‘பீதி’ வந்துவிட்டது. திங்கட்கிழமையை, வெள்ளிக்கிழமை மாலை போல் இனிமையாக மாற்றுவது எப்படி?
• ஞாயிறு மாலையில், அடுத்த வாரம் முழுவதும் என்ன வேலை செய்யப்போகிறோம், ஒவ்வொரு நாளும் என்னென்ன வேலையை முடிப்பது என அட்டவணை போடுங்கள். விடுமுறை முடிந்து, வேலைக்குச் செல்லும்போது அந்தச் சூழலுக்கு ஏற்ப நம் மனமும் ஒத்துழைக்கத் தொடங்கும்.
• முதலில் ஒரு பேப்பர், பேனா எடுத்து, திங்கட்கிழமைகள் ஏன் அலுப்பாக இருக்கின்றன என்று எழுதுங்கள். அலுப்பாக இருக்கக் காரணம் ‘வேலைப் பளு, உடன் வேலை செய்பவரின்

தொல்லைகள், பிடிக்காத வேலை’ என எது வேண்டுமானாலும் இருக்கலாம். பின்பு ஒவ்வொரு பிரச்னைக்கும் மூன்று தீர்வுகளை எழுதுங்கள். ஒவ்வொரு தீர்வையும் ஒவ்வொரு வாரத் தொடக்கத்திலும் முயற்சியுங்கள். ஏதேனும் ஒரு தீர்வுக்காவது நிச்சயம் பலன் கிடைக்கும். காலையில் வேலைக்குக் கிளம்பும்போது, குடும்பத்தினருடனோ, வெளியில் மற்றவருடனோ மல்லுக்கட்ட வேண்டாம். அது அன்றைய நாளின் மனநிலையையே மாற்றிவிடும்.
• விடுமுறையின்போது அலுவலகம் சார்ந்த போன் கால்கள், இ-மெயில்_களைத் தவிர்த்துவிடுங்கள். ‘நீங்கள் செய்யாத ஒன்றை, நீங்கள்தான் செய்தீர்கள், அதற்கு இந்தத் தண்டனை’ என்று மெயில் வருகிறது. உடனே உங்கள் மன ஓட்டம், ‘நாளை என்ன நடக்கும்? நாம் செய்யவில்லை என்பதை எப்படி நிரூபிப்பது?’ எனப் பதற்றமாகி, விடுமுறை மனநிலையைக் கெடுத்துவிடும். முடிந்தவரை விடுமுறைகளில் குடும்பத்துக்காக மட்டும் செலவிடுங்கள்.
• ஞாயிறு இரவு சீக்கிரமாகப் படுக்கைக்குச் சென்று, காலை சரியான நேரத்துக்கு எழுந்திருங்கள். திங்களன்று வேலை அதிகமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அன்று யாராவது உதவி கேட்டால், மறுக்காமல் செய்யுங்கள். அது மனதுக்குப் புத்துணர்ச்சி தந்து, அன்றைய நாளை சிறப்பாக எதிர்கொள்ள உதவும்.
• திங்கட்கிழமைகளில் பிடித்த உடை, பிடித்த உணவு, பிடித்த மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களுக்கு எனக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.
- குரு அஸ்வின்