தொடர்
Published:Updated:

எதிர்மறை எண்ணங்கள் தவிர்ப்போம்!

எதிர்மறை எண்ணங்கள் தவிர்ப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்மறை எண்ணங்கள் தவிர்ப்போம்!

குடும்பம்

எதிர்மறை எண்ணங்கள் தவிர்ப்போம்!

ல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ஆனந்த். எல்லா விஷயங்களிலும் சக நண்பர்களைப் போல இயல்பாக இருந்தாலும் வெளியே சொல்ல முடியாமல் ஒரு பிரச்னை உள்ளுக்குள் வளரத் தொடங்கியது. நன்றாகவே தேர்வு எழுதி இருந்தாலும்கூட, `நாம் ஃபெயில் ஆகிவிடுவோமா’ என ஒரே மாதிரியான எண்ணங்கள் திரும்பத் திரும்பத் தோன்றி அவரைப் பயமுறுத்தியது. தலைவலி வந்தால் கூட, `மூளையில் கட்டி வந்திருக்குமோ, தலைவலி இதன் அறிகுறியோ?’ எனத் தேவை இல்லாமல் பயந்து, பதற்றத்துடனே வாழும் நிலைக்கு ஆளானார். நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க, தனக்கு மட்டும் எப்போதும் பிரச்னைகள் வந்துகொண்டிருக்கிறதே என நினைத்து எப்போதும் விரக்தியுடனே காணப்பட்டார். முயற்சி செய்தும் இப்படி, நெகட்டிவாக யோசிப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஆனந்தைப்போல பலர் உள்ளனர். நமக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்னைகளைவிட அந்தப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வாழ்கையின் மகிழ்ச்சி, வெற்றி அடங்கி இருக்கிறது. மனதில் எழும் சின்னச்சின்ன எண்ணங்களுக்குக்கூட ஒருவித சக்தி இருக்கிறது. தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்கூட தங்கள் மன வலிமையாலும் பாசிட்டிவ் எண்ணங்களாலும் தங்கள் நோய்களை வென்ற கதைகள் எத்தனை கேட்டிருப்போம்? பாசிட்டிவான நல்ல எண்ணங்களின் வலிமை அத்தகையது. எதிர்மறையான எண்ணங்கள் தொடர்ந்து மனதில் எழுந்துகொண்டே இருந்தால், மெள்ள மெள்ள மன நிம்மதியைத் தொலைத்துக்கொண்டு வருகிறோம் என அர்த்தம்.

எதிர்மறை எண்ணங்கள் தவிர்ப்போம்!

எதிர்மறை எண்ணங்கள் தோன்றக் காரணம் என்ன?

அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களோடு டிப்ரஷன், ஸ்கீசோப்ரினியா (Schizophrenia) போன்ற பிரச்னைகளால்கூட எதிர்மறையான எண்ணங்கள் நம் மனதில் எழுந்துகொண்டே இருக்கலாம். மிக முக்கியமான மற்றொரு காரணம் ஓ.சி.டி (Obsessive Compulsive Disorder)  எனப்படும் மனசுழற்சி நோய். ஒரு குறிப்பிட்ட எண்ணம் மனதுக்குள் வந்துகொண்டே இருக்கும். ‘இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது’ என நினைத்தாலும் அந்த எண்ணம் திரும்பத் திரும்ப மனதில் வந்துகொண்டே இருக்கும். `இது நம்முடைய எண்ணம்தான் என்பது தெரிந்தும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லையே’ என மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். எதிர்மறை எண்ணங்கள் வர முக்கியக் காரணமாக இந்த மனசுழற்சி நோய் விளங்குகிறது. பெரும்பாலானோருக்கு, தங்களுக்கு இந்த மனசுழற்சி நோய் இருக்கிறது என்பதுகூடத் தெரியாது.

எதிர்மறை எண்ணம் ஏற்படுத்தும் பாதிப்பு

 `நான் எதுக்கும் பிரயோஜனம் இல்லை... உயிர் வாழ் வதே வீண்’ என்ற ரீதியில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறையான சிந்தனைகள் தோன்ற மூலக் காரணம். தன்னம்பிக்கை இல்லாமல், வாழ்வில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் எந்த நேரமும் காழ்ப்பு உணர்ச்சியில் உழல்பவர்களே இந்த எதிர்மறை சிந்தனைகளால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

எதிர்மறை எண்ணங்களால் பதட்டமும் பயமும் மனதில் எழலாம். தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் தெரியாமல், பார்க்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என ஆசைப்பட்டு, எந்த நேரமும் பதற்றத்தோடு இருந்து, நினைத்தது கிடைக்காதபட்சத்தில் `எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என விரக்தியில் உழல ஆரம்பிப்பதே இதன் முதல் படி.

இதனால் பாதிக்கப்படுவது நம் மன நிம்மதி மட்டும் அல்ல... நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் அது பாதிக்கும். எதிர்மறை எண்ணங்கள் இருக்கும்போது, பிறரிடம் குறைகளையே அதிகம் காண்பர். பிறருடனான மனக்கசப்புக்கு இது எளிதில் வழிவகுக்கும்.

ஒருகட்டத்தில் இந்த எதிர்மறை எண்ணங்கள் வளர்ந்து `டெலுஷன்’ (Delusion) என்னும் நிலை வரைகூட இட்டுச் செல்லலாம்.

நம் படைப்பாற்றலை இது பாதிக்கும். குறிப்பாக மாணவர்களின், மதிப்பெண்கள் குறையும். வேலைக்குச் செல்பவர்கள் யாரிடமும் மனம் விட்டு பேச மாட்டார்கள்.  `எதற்காக வாழ்கிறோம்?’ என்கிற அளவுக்கு மன அமைதியைச் சீர்குலைத்து விடும்.

சிகிச்சை மூளையில் உள்ள செரோ டொனின் (serotonin) என்ற ஹார் மோன் குறைவாகச் சுரப்பதாலும் எதிர் மறை எண்ணங்கள் ஏற்படலாம். அதை குணமாக்க, இப்போதெல்லாம் எந்தவிதப் பக்க விளைவுகளும் இல்லாத பாதுகாப்பான மருந்துகள்  வந்துவிட்டன. எதிர்மறை எண்ணங்கள் பிரச்னையாக மாறும்போது சைக்கோதெரப்பி ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டும் சரிசெய்யலாம். இது தவிர, காக்னிட்டிவ் பிஹேவியர் தெரப்பி, பிஹேவியர் மாடிஃபிகேஷன் எனப் பல தெரப்பிகள் உள்ளன.

எதிர்மறை எண்ணங்கள் தவிர்ப்போம்!

கட்டுப்படுத்த சுலபமான வழிகள்

கவலையோ பதட்டமோ தரும் விஷயங்களைக் குறித்து யோசிப்பதைத் தவிர்க்க வேண்டும். டென்ஷன் ஃப்ரீ வாழ்க்கையே பாசிட்டிவான மனநிலைக்கு முதல் படி.

நம்மால் மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும்.

எந்த ஒரு கலந்துரையாடலிலும் முதலில் பாசிட்டிவான எண்ணங்களோடு பேசத் தொடங்க வேண்டும்.

முடிந்தவரை நெகட்டிவ் எண்ணங்களை வாய்விட்டுப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

சில பேர் இருப்பார்கள்; அவர்கள் அருகில் இருந்தாலே, நமக்கும் ஒரு நல்ல எண்ணம் கிடைக்கும். அவ்வாறான பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர்களோடு பழகி, ஓர் ஆரோக்கியமான நட்பு வட்டத்தை  உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

உங்களை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும்; நீங்களே உங்கள் ஆதர்ச நாயகன்.

மனதுக்குள் தேவையற்ற எண்ணங்கள் உருவாகி அலையடித்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்க, தியானம் ஒரு சரியான தீர்வு. யோகா மற்றும் தியானம் பயின்று, முறையாகத் தொடர்ந்து செய்தால் மனம் சமநிலையை அடையும்.

அலைகள் ஓய்ந்தால்தான் கடலில் செல்ல முடியும் என்றால், கப்பல் பயணத்தைத் தொடங்கவே முடியாது. அதைப்போலத்தான் இதுவும். `எதிர்மறையான சிந்தனைகளை முழுமையாக நீக்கினால்தான் நிம்மதி’ என எண்ணிக்கொண்டு காத்திருப்பதைவிட எதிர்நீச்சல் போட்டு, கடந்து செல்ல வேண்டும்.

உங்கள் திறன்களை வளர்க்க உழைக்க வேண்டும்.

அடுத்தவர் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிடக் கூடாது. மற்றவர்களும் நீங்களும் வாழ்க்கைப் புத்தகத்தின் ஒரே பக்கத்தில் எப்போதும் இருப்பது இல்லை. பின் ஏன் ஒப்பீடுசெய்து பார்க்க வேண்டும்? நாம் ஒவ்வொருவரும் தனித்திறமையுடன் ஆசீர்வதிக்கப்பட்டு  இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். நல்ல ஆரோக்கியம் இருந்தால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்; தெளிவாக சிந்திக்க முடியும். எனவே, உடலை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். மனதும் நிச்சயம் ஆரோக்கியமாக மாறும்.

– கோ.இராகவிஜயா

படங்கள்: ஆர்.கே.சர்வின்

மாடல்கள்: எஸ்.விக்னேஷ், வருண், சித்தார்த், கார்த்திக்

எப்படிக் கண்டறிவது?

உளவியல்ரீதியில் எந்த ஒரு விஷயத்தையும் பிரச்னையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க மூன்று அளவுகோல்கள் உள்ளன. அந்த வகையில் இப்படிஎதிர்மறையாகவே சிந்தித்துக்கொண்டிருப்பது ஒரு பிரச்னையா என்பதைக் கண்டறிய..

1. ஒரு நாளைக்கு எத்தனை முறை இப்படி நெகட்டிவாக சிந்திக்கிறீர்கள்? இது அதிகரித்துள்ளதா?

2. எத்தனை நாட்களாக இந்த இயல்பு உங்களிடம் காணப்படுகிறது?

3. இதனால் உங்கள் இயல்பு வாழ்க்கை, குறிப்பிடும் அளவுக்கு பாதிக்கப்படுகிறதா?

இந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலளித்துப் பார்த்தாலே, உங்களை இது பாதிக்கும் பிரச்னையாக மாறியுள்ளதா என்பது தெரிந்துவிடும். பிரச்னை என்று தெரிந்துவிட்டால், உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். மனநல மருத்துவரை அணுகுபவர் எல்லாம் மன நோயாளிகள் என்ற தவறான பலரிடமும் உள்ளது. இது தவறு. பிரச்னை சிறியதாக இருக்கும்போதே, கிள்ளி எறிவது அவசியம்.