Published:Updated:

தற்கொலை தீர்வல்ல...

காப்பாற்றும் கோப்பிங் டெக்னிக்

பிரீமியம் ஸ்டோரி
தற்கொலை தீர்வல்ல...

‘தற்கொலை, கோழைகள் எடுக்கும் துணிச்சலான முடிவு’ என்பார்கள். எந்தப் பிரச்னைக்குமே தற்கொலை தீர்வு அல்ல. இன்னும் சொல்லப்போனால் அதுதான் பல பிரச்னைகளுக்குத் தொடக்கமே. எதற்காக ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ அந்தப் பிரச்னை தற்கொலையால் தீரப்போவது இல்லை என்பதோடு மேலும், பல புதிய பிரச்னைகளையும் அது உருவாக்குகிறது. பிறப்பதற்கு எப்படி நாம் காரணம் இல்லையோ  அதுபோல இறப்பதற்கும் நாம் காரணமாக இருக்கக் கூடாது. தற்கொலை என்னும் `மரண விளையாட்டு’ சுயநலம் மட்டும் அல்ல. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் செய்யப்படும் மன்னிக்க இயலாத துரோகம் மற்றும் சமூகப் பொறுப்பற்ற அநீதி.

தற்கொலை தீர்வல்ல...

தற்கொலைக்கான காரணங்கள்

தற்கொலை எண்ணம் ஒரு மனநோய். ஒரு பிரச்னையை மனதில்வைத்து அதிலேயே எந்த நேரமும் புழுங்கி, இதற்குத் தீர்வே கிடையாது எனப் பொய்யாக நம்பி, ‘வாழ்க்கையை முடித்துக்கொள்வதுதான் இதற்கு வழி’ எனத் தன்னைத்தானே ஏமாற்றி, முட்டாள்தனமாக முடிவு எடுப்பது மனநோய்தான்.

பொருளாதாரச் சுமை, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தொழிலில் தோல்வி, சமூக அந்தஸ்தை இழத்தல், தாங்கவியலாத அவமானம், ஏமாற்றம் அடைந்ததாக உணர்தல், குடும்ப உறவுகளோடு ஏற்படும் நெருக்கடி, சமூக நெருக்கடி, தீராத நோய், மனச்சிதைவு போன்ற வெவ்வேறு காரணங்களால் பலரும் தற்கொலை செய்துகொண்டாலும்,  இதன் பின் மறைமுகமாக இருப்பது கடுமையான மனஅழுத்தம்தான். சாதாரண மன அழுத்தத்துக்கும், தற்கொலை மன அழுத்தத்துக்கும் வித்தியாசம் உண்டு. பிரச்னைக்கு ஓர் உருவம் தந்து, தீர்வு கிடைக்காது என மனதிலேயே புழுங்கி, அதிலேயே புதைந்துவாடும் மனஅழுத்தத்தை, காயப்படுத்தும் மனஅழுத்தம் (Vulnerable stress) என்பார்கள். இது, சமயங்களில் உயிரையும் பறித்துவிடும். சிலருக்குக் காதில் சத்தம் கேட்கும்; எதற்கெடுத்தாலும் பயமாக இருக்கும்; மாயத்தோற்றங்கள், உருவங்கள் தோன்றி மறையும்; பிரச்னையைத் தாங்கிக்கொள்ள இயலாமல் போகும்; கடுமையான மனத்தளர்ச்சி, மனஉளைச்சல் உண்டாகும்; தோற்றுவிடுவோம் அல்லது தோற்றுவிட்டோம் என்ற தன்னம்பிக்கை அற்ற மனநிலை காணப்படும்; தனக்கு யாரும் இல்லை என்ற தனிமை உணர்வு இருக்கும்... இவை தற்கொலையைத் தூண்டும் மனநிலைகள்.

ஒவ்வோர் ஆண்டும், எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதாவது `40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் தற்கொலைக்கான பெரும்பான்மையான காரணம் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைதான்.

தற்கொலை தீர்வல்ல...

நெருக்கும் சூழலைச் சமாளிப்பது எப்படி?

எத்தனையோ மனஅழுத்தங்கள் நம்மைத் தாக்கினாலும், அதைச் சமாளித்து நம்மை புதுப்பித்துக்கொள்ளும் டெக்னிக்தான் கோப்பிங் (Coping). அதாவது ஒரு பிரச்னையை தமது பாசிட்டிவ் குணத்தால் வென்று, முறியடிக்கும் முயற்சிதான் கோப்பிங். உதாரணத்துக்கு, நடிகர் கமல் சொன்ன கோப்பிங் டெக்னிக் பற்றிப் பார்க்கலாம். ‘படத்தைத் திரையிடக் கூடாது’ என தடை விதித்ததும், மனம் உடைந்து, `இன்வெஸ்ட் செய்த பணம் போச்சே’ என மன அழுத்தத்தில் மூழ்காமல், சில மணி நேரம் தூங்கச் சென்று விட்டாராம் கமல். இந்த இடத்தில் ‘தூக்கம்’ அவரது பிரச்னையை இலகுவாக்குகிறது. தூங்கி எழுந்து பிரெஷ்ஷான மனநிலைக்கு வந்த பின், என்ன முடிவு எடுக்கலாம் என்று சிந்தித்துச் செயல்பட்டார். இதுவே, `கோப்பிங் டெக்னிக்’. இது, ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். தூக்கம் என்ற இடத்தில் உணவு, விளையாட்டு என்று தனக்குப் பொருத்தமானதைத் தேர்ந்து எடுக்கலாம்.

இன்றைய இளைஞர்கள் விளையாட்டாகச் செய்வதுகூட கோப்பிங்தான். கடுப்பான மனநிலையில் இருந்தாலும், நண்பர்கள் சூழச் சாப்பிடுவது, காதல் தோல்வியை மறக்க தோழிகளுடன் சேர்ந்து ஐஸ்க்ரீம் பார்லரில் நேரம் செலவழிப்பது, அரியர்ஸுக்குகூட `ட்ரீட் எடு, கொண்டாடு’ எனச் சொல்வது எல்லாமும் கோப்பிங் டெக்னிக்தான். இதுவே, புகைபிடிக்கவோ, மது அருந்தவோ சென்றால், அது நெகட்டிவ் கோப்பிங். எந்த ஒரு பிரச்னையையும் மூளையில் ஏற்றிக்கொண்டு, மனதில் ஏற்றிக்கொள்ளாமல் ‘மாத்தி யோசி’ என முடிவு எடுத்தால், பிரச்னை மன அழுத்தமாக மாறாமல் தடுக்கப்படும்.

தடுக்கும் வழிகள்

ஒருவர் பிரச்னையில் மூழ்கி இருக்கும் சமயத்தில் அவருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாது. பயம், கூச்சம், வெட்கம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றைத் தாண்டி மற்றவரிடம் பகிர்ந்துகொண்டால், மற்றவர் நமக்கு ஆலோசனை வழங்க உதவியாக இருக்கும்.
இதனால், தற்கொலைகள் தடுக்கப்படும்.

நண்பர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையை நட்பு சூழ வாழ்வது நல்லது.

தற்கொலை பற்றிய தேவை அற்ற அறிவை வளர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தற்கொலை எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றினால், மனநல அல்லது தற்கொலைத் தடுப்பு கவுன்சலரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி, பிரச்னைகள் நமக்கு மட்டுமே வருவது அல்ல. ஒவ்வொருக்கும், வெவ்வேறாக இது இருக்கவே செய்கிறது. இதைச் சமாளிப்பதே வாழ்க்கை என்ற புரிதல் அவசியம்.

குறிப்பிட்ட அல்லது ஒருவரின் மேல் மட்டும் அதீத அன்பு, அக்கறை, கவனம், ஈர்ப்பு போன்றவற்றைவைக்காமல் அனைவரிடமும் அன்பைச் செலுத்துவதே சரி. ஏனெனில், ஒரு நபர் பிரிந்தாலும் மற்றவர் இருப்பதால் பிரிவின் ஆழம் நம்மை வெகுவாகப் பாதிக்காது.

கவுன்சலிங், சைக்கோ தெரப்பி, மருந்துகள், அதீத மன உளைச்சலுக்கு இ.சி.டி (Electroconvulsive therapy (ECT)), ஆன்டி டிப்ரஷன் சிகிச்சைகள் போன்றவை மிகுந்த பலன் அளிக்கும்.

- ப்ரீத்தி, படம்: மா.பி.சித்தார்த்

சில விநாடிகளில் மனதை எப்படி மாற்றுவது?

விரக்தியான மனநிலையின்போது, மனதுக்குப் பிடித்தவரிடம் பகிர்ந்துகொள்வது நல்லது.

தவறான விஷயத்தைச் செய்திருந்தாலும்கூட, உரிய நபரிடம் சொல்லி தீர்வு காண வழியைத் தேடுவது.

தனிமையைத் தவிர்த்துவிட்டு, சேர்ந்து இருத்தல் அவசியம். நண்பர்களுடன் ரிலாக்ஸாக அரட்டை அடிக்கலாம்.

அனைத்துக்கும் தீர்வு உண்டு என்ற பாசிட்டிவ் எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும்.

மூன்றாம் நபர் நமக்கு சரியான ஆலோசனை வழங்கினால், பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

இனிப்புகள், ஃபிரெஷ் காய்கனிகள், இயற்கையான சூழல், விருப்பமானவருடன் நேரம் செலவழித்தல் நம் உடலில் மகிழ்ச்சியான மனநிலை தரும் ஹார்மோன்களைச் சுரக்க உதவும்.

வெற்றிகரமான நபர்களைப் பற்றிப் படிப்பது, தெரிந்துகொள்வது, தன்னம்பிக்கைக் கதைகள் மனதுக்கு ஊட்டமளிக்கும்.

தற்கொலை எண்ணத்தைப் போக்க தற்கொலை தடுப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவரிடம் செல்லலாம்.

தற்கொலை தீர்வல்ல...

தற்கொலை செய்துகொள்பவர் யார்... நாம் யாரைச் சந்தேகிக்க வேண்டும்?

இயல்பாக இருந்தவர் அதிக மாற்றங்களுடன் காணப்படுவது.

நார்மலாக இல்லாமல் அதிகமாகச் சாப்பிடுவது அல்லது மிகவும் குறைவாகச் சாப்பிடுவது.

வீட்டுக்குள் முடங்கிப்போய் இருப்பது.

கடைசி ஆசைகளை நிறைவேற்றுவது போல, நீண்ட நாட்கள் இல்லாமல் புதுசாக ‘உன்னைப் பார்க்க வந்தேன், பார்த்துட்டுப் போக வந்தேன்’ என சந்தேகத்துக்கு உரிய செயல்களில் ஈடுபடுவது.

’சாகப் போகிறேன்’ எனத் தொடர்ந்து சொல்பவர். இது, 100 சதவிகித உண்மை. `எப்போதும் சொல்கிறவர்தானே, இவர் தற்கொலை செய்ய மாட்டார்’ என்ற அலட்சிம்ஒருநாள் ஒருவரின் உயிரைப் பறித்துவிடலாம்.

தூக்கம் குறைந்து, நடு இரவில் அல்லது விடியும் வரை விழித்துக் கொண்டிருப்பவர்.

தனிமையில் அடிக்கடி இருப்பவர், யாருடனும் பேசாமல் தனிமையைத் தேடித் திரிபவர்.

அன்றாட நடவடிக்கைகளைச் செய்யாமல், வெறுமையாய் காட்சியளிப்பது. `வெறுப்பாக இருக்கிறது’ என அடிக்கடிச் சொல்பவர்.

லைஃப் ஸ்கில்

`நேர்மறையான சிந்தனையை வளர்க்க, லைஃப் ஸ்கில் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என ‘உலக சுகாதார நிறுவனம்’ பரிந்துரைக்கிறது. தேர்வு முடிவால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் அதிகரித்து இருப்பதால், லைஃப் ஸ்கில் பல பள்ளிகளிலேயே சொல்லித்தரப்படுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை அனைவரும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டியது  அவசியம்.

பிரச்னையை சமாளித்து, தெளிவான முடிவு எடுக்கும் திறன் (Problem solving and decision-making skills).

மோசமான சூழல்களிலும் தெளிவான முடிவு எடுத்து, படைப்பாற்றல் திறமையுடன் விளங்கும் திறன் (Development of critical and creative thinking skills).

பேச்சுத் திறன் மற்றும் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் திறன் (Communication and interpersonal skills).

தன்னை அறிதல் மற்றும் பிறர் உணர்வை அறியும் திறன் (Self-awareness and empathy).

நேர்மறை எண்ணங்களுடன் மன அழுத்தத்தையும், உணர்வுகளையும் சமாளிக்கும் திறன் (Coping with stress and emotions).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு