
ஆக்ஞா சக்கரம்

ஆறாவது சக்கரம் எனும் இந்த அற்புதமான `ஆக்ஞா சக்கரம்’, மனிதனுக்கே உரிய ஆறாவது அறிவைச் சார்ந்தது. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் அனைத்தையும் பகுத்தறிந்து காண்பது. அதற்கு, இந்த ஆறாவது சக்கரம் துணை புரிகிறது.
ஆக்ஞா சக்கரத்தின் சிறப்பும், அதன் முக்கியமான உறுப்பான கண்ணில் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில், ஆக்ஞா சக்கரத்தைச் சேர்ந்த மற்ற உறுப்புகள், அவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம்.
மூக்கு: சுவாச மண்டலத்தின் முதல் பாகம். நாம் சுவாசிக்கும் காற்றில், தூசு, மாசு படிந்திருந்தால், அதை நீக்கி சுத்தமான காற்றை நுரையீரலுக்கு அனுப்ப, ரோமங்களும் ஆன்டி பாடி உற்பத்திசெய்யும் செல்களும் உள்ளன. இதனால், இது ஒரு தற்காப்பு உறுப்பாகவும் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்புத்தன்மை குறையும்போது, சளி, தும்மல், மூக்கடைப்பு, மூக்கு எரிச்சல் ஏற்படும். அடிக்கடி சளி பிடிக்கும்போது, நாசியைச் சார்ந்த சைனஸ் பாதிக்கப்படும். அடிக்கடி மாத்திரை, மருந்துகள் உட்கொள்வதால், இவர்கள் மேலும் பலவீனமடைவார்கள். தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் என அறிகுறிகள் இருக்கும். இதனால், ஏற்படும் தலைவலிக்கு, ஆக்ஞா சக்கரத்துக்கு சக்தி அளித்து நிவாரணம் அளிக்கலாம்.
சுஜோக் அக்குபஞ்சரில், சுவாச உறுப்புகள் நுரையீரல் மெரிடியனைச் சார்ந்தது. மூக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு நுரையீரல் அல்லது பெருங்குடல் மெரிடியனில் உள்ள புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கட்டை விரலில் மூக்கு, சைனஸ் உறுப்பைக் குறிக்கும் புள்ளிகள் உள்ளன. அங்கும் அக்குபஞ்சர் செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

காது: வெளிப்புற செவி, நடு செவி, உள் செவி என மூன்று பாகங்களைக்கொண்டது காது. ஒலி, இவை மூன்றையும் சம நிலையில் ஊடுருவும்போது, காது நன்றாகச் செயல்படும். இந்தப் பாதையில் தடை ஏற்படும்போது, செவித்திறன் குறையும். புறச் செவியில் ஒரு சிலருக்கு சீழ் வடியும். இதனால் தலைவலி வரலாம். சிலருக்கு சுவாச உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்போது, தொண்டையில் இருந்து, யூஸ்டேஷியன் குழல் மூலம் நடுக்காதுக்கு பாதிப்பு பரவி, இதனாலும் தலைவலி வரலாம். எதனால் நடுக் காது பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
சிலருக்கு இரைப்பையில் அதிக அளவில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும்போது, உணவுக்குழாய் வழியே தொண்டை வரை வரும்போது, நடுசெவியைப் புண்ணாக்கும். இதனால் தலைவலி, காதில் சீழ் வடிதல் போன்றவை தோன்றும். இதற்கு மூல காரணத்தைக் கண்டுபிடித்து ஆக்ஞா சக்கரத்துக்கும் காதுக்கும் ரெய்க்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.
சுஜோக் அக்குபஞ்சர் முறையில், சிறுநீரக மெரிடியனைச் சார்ந்த உறுப்பு காது. இந்தப் புள்ளியில் சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.
உள்காதானது மூளையைச் சார்ந்தது. ஒலியைக் கேட்பது மற்றும் உடலின் சமநிலைக்கு உள்காது துணைசெய்கிறது. உள்காது பாதிக்கப்படும்போது, காது கேளாமை ஏற்படும். சிலருக்கு உள்காது பாதிப்பால் தலைசுற்றல் பிரச்னை ஏற்படும். இதற்கு, முன் ஆக்ஞா, பின் ஆக்ஞா சக்கரம் இரண்டுக்கும் ரெய்கி சிகிச்சை அளிக்கலாம்.
வாய்: வாய், செரிமான மண்டலத்தின் முதல் பகுதி. நாக்கின் அசைவால் உணவுப் பொருட்களைப் பற்கள் அரைக்கின்றன. இதை எளிதாக்க, உமிழ்நீர் சுரக்கிறது. உமிழ்நீரில் உள்ள டயலின் எனும் என்ஸைம், மாவுச்சத்தை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பல், நாக்கு, உமிழ்நீர்ப்பை இவை யாவும் ஒருங்கிணைந்து வேலை செய்ய ஆக்ஞாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
பல் வலி, ஈறு வீக்கம், வாய்ப்புண், அல்சர், புற்றுநோய் ஆகியவற்றுக்கு ஆக்ஞா சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளித்து நிவாரணம் பெறலாம். சுஜோக் அக்குபஞ்சரில், இரைப்பை மெரிடியனில் நோய் அறிகுறியைப் பொறுத்து, புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். கட்டை விரலில் வாயைக் குறிக்கும் புள்ளிகளில் அக்குபஞ்சர் செய்யலாம்.
- தொடரும்
படம்: ப.சரவணகுமார்
பின் ஆக்ஞா சக்கரம்
இது தலையின் பின் பக்கம் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தில் பாதிப்பு ஏற்படும்போது, மூளையில் கட்டி, புற்றுநோய், தலைசுற்றல், பின்பக்கத் தலைவலி போன்றவை ஏற்படும். கழுத்து வலி, உயர் ரத்த அழுத்தம், உள் காது பாதிப்பு இருந்தால், பின் ஆக்ஞா சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.