Published:Updated:

வியர்வை, சரும வறட்சி, அலர்ஜி... அக்னி நட்சத்திரத்தை எதிர்கொள்வது எப்படி?

வியர்வை, சரும வறட்சி, அலர்ஜி... அக்னி நட்சத்திரத்தை எதிர்கொள்வது எப்படி?
வியர்வை, சரும வறட்சி, அலர்ஜி... அக்னி நட்சத்திரத்தை எதிர்கொள்வது எப்படி?

அக்னி நட்சத்திரத்தைச் சமாளிப்பது எப்படி ?

மிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. இப்போது அனல்காற்றும் சேர்ந்து வாட்டி எடுக்கிறது. இரவு நேரங்களில்கூட வெப்பம் குறையாமல் படுத்தியெடுக்கிறது. இந்த நிலையில், `அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று (4-ம் தேதி) தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கிறது. ஏற்கெனவே வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், அக்னி நட்சத்திரத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பதுதான் இப்போது பெரும்பாலானவர்களின் அச்சம். தாங்க முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம்’ மற்றொரு பக்கம், இந்த  கத்திரி வெயிலில் வியர்க்குரு தொடங்கி அம்மைநோய் வரை சரும வறட்சி மாதிரியான பாதிப்புகளும் சேர்ந்துகொண்டு அச்சுறுத்த ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை எப்படி எதிர்கொள்வது? 

``சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தப் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்’’ என்கிறார் தோல்நோய் மருத்துவர் ஷரதா. மேலும், கோடை வெயிலில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவரிக்கிறார்...

வியர்க்குரு

வெயில் காலத்தில் அதிகம்பேரை பாதிக்கும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. உடலில் வியர்வை தங்குவதால்தான் வியர்க்குரு ஏற்படுகிறது. இதைத் தடுக்க, தினமும் இரண்டு வேளை குளிப்பதும், வெயிலில் சென்று வீட்டுக்குத் திரும்பியவுடன் கை, கால்களை குளிர்ந்த நீரில் கழுவுவதும் வியர்க்குருவை தவிர்க்க உதவும். வியர்க்குருவைச் சொறிந்தால் அது தொற்றுக்கு வழிவகுக்கும்... கவனம்! 

சீழ்க் கட்டிகள்

நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாலும், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களாலும் ஏற்படக்கூடியவை வெயில்கால சீழ்க் கட்டிகள். சருமத்தில் கிருமித்தொற்று ஏற்படுவதாலும், உடற்சூட்டாலும் கூடச் சீழ்க் கட்டிகள் உருவாகும். முதுகு, கழுத்து, அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் இவை உருவாகும். சிறிய கொப்புளங்கள் போலக் காட்சியளிக்கும் இந்தக் கட்டிகள் வீங்கிக் காணப்படும்; வலியெடுக்கும். இந்தக் கட்டிகளை உடைக்கக் கூடாது. தொற்று ஏற்படுவதற்குள் மருத்துவரை அணுக வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. 

அம்மை நோய்

கோடையில் உருவாகும் நோய்களில் முதன்மையானது, 'சிக்கன் பாக்ஸ்' எனப்படும் சின்னம்மை. கோடையில் வீரியமாக செயலாற்றும் இந்தக் கிருமி, எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை விரைவாகத் தாக்கும். நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கும் சின்னம்மை ஏற்படும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து காற்று வழியாக, மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும். அதிக ஜுரம், பின் கழுத்து, முதுகு, கை போன்ற இடங்களில் சிறுசிறு கொப்பளங்கள் வந்து, ஒரு வாரத்தில் மறைந்துவிடும். கொப்புளங்களை கிள்ளக் கூடாது. வேப்பிலை, மஞ்சள் ஆகியவை இதற்குச் சிறந்த மருந்து. அதனால் கொப்பளங்களால் ஏற்படும் அரிப்பு நீங்கும். அதிக அரிப்போ, காய்ச்சலோ இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டும். அம்மை நோய்களுக்கு தடுப்பூசி இருப்பதால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியம். 

வெயில் அலர்ஜி

சிலருக்கு வெயிலில் சென்றுவிட்டு வந்தால், உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். அரிதாகச் சருமம் உரியும் பிரச்னையும் ஏற்படலாம். இதற்கு ‘சோலார் அர்ட்டிகேரியா’ (Solar Urticaria) என்று பெயர். இந்தத் தொல்லையைத் தடுக்க, முதலில் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, அதிக நேரம் சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள் உடலில்படுவதால், சருமச் செல்கள் வீக்கமடைந்து ‘சன் பர்ன்’ (Sun Burn) என்னும் சருமப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைகளுக்கு வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவிக்கொள்ளலாம்; புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம். உடல் முழுவதையும் மறைக்கிற வகையில் ஆடை அணிவதும் பலன் தரும். 

சரும வறட்சி

கோடையில் நமக்கு அதிகம் வியர்வை வெளியேறுவதால், சருமத்திலிருக்கும் நீர்த்தன்மை வற்றிவிடும். அதை ஈடுகட்டும் அளவுக்கு அடிக்கடி நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால், சருமம் வறண்டுவிடும். சருமம் வறட்சி அடையாமலிருக்க, தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகள், இளநீர், மோர், பானகம், சர்பத் போன்றவற்றை அருந்தலாம். வறண்ட சருமத்தில் மாயிச்சரைசர் களிம்பைப் பூசிக்கொள்ளலாம்.

தலைமுடி வறட்சி

கோடையில் தலைமுடியும் வறண்டுபோகும். எனவே, குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் தலையில் எண்ணெய் தடவி, தலைக்குக் குளிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தடுக்கலாம். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்வது நல்லது. தலையில் அதிகமாக வியர்த்தால், அழுக்கு சேர்ந்து அரிப்பு ஏற்படும். எனவே, வீட்டுக்கு வந்ததும், தலைக்குக் குளிக்க வேண்டும். தலையில் பொடுகு, பூஞ்சைத் தொற்று பாதிப்புள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

பாதங்களில் வெடிப்பு

கோடையில் ஏற்படுகிற சரும வறட்சி காரணமாக, பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க தினமும் இரவில் பாதங்களைக் கழுவி, சுத்தப்படுத்திவிட்டு, தரமான மாய்ச்சரைசர் களிம்பைப் பூசிக்கொள்ளலாம். கோடைக்காலத்தில் ஷூ அணிவதைத் தவிர்க்கவும். 

இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தங்கி, படர்தாமரை, அரிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும். படர்தாமரைக்கான க்ரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு பூசிக்கொள்ளலாம். தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.

மேற்கொள்ளவேண்டிய பொதுவான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்! 

* வெயில் கொளுத்தும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம் அல்லது வெளியில் செல்லும்போது குடை மற்றும் சன்கிளாஸ் எடுத்துச்செல்லலாம்.  இப்போது விடுமுறை காலமாக இருப்பதால், குழந்தைகளின் விளையாட்டுக்குத் தடை போட முடியாது. ஆனால், வெயிலில் விளையாட அனுமதிக்கக் கூடாது. மாலை 5 மணிக்கு மேல்தான் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

* வெயிலில் வெளியே செல்லும்போது ஏற்படும் தாகத்தைத் தணிக்க ஒரு தண்ணீர் பாட்டிலை எப்போதும் கொண்டு செல்ல வேண்டும்.

* குளித்த பிறகு பௌடர் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பௌடர் நம் சருமத்தில் சிறிய நுண் துளைகளை மூடிக்கொள்ளச் செய்யும். இதனால் வெப்பம் வெளியேறாமல் சருமப் பிரச்னைகள் ஏற்படும். 

* மிகவும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, உடலில் ஈரம் தங்காதபடி வியர்வையை உறிஞ்சக்கூடிய, சருமத்தில் அரிப்பு ஏற்படுத்தாத, பருத்தி ஆடைகளையே அணியவும். ஸ்லீவ்லெஸ் ஆடைகளைவிட முழுக்கை, காலர் வைத்த சட்டைகளை அணிந்தால், தோலில் வெயில்படாமல் இருக்க உதவும்.

* சன் ஸ்க்ரீன் உபயோகப்படுத்துபவர்கள், அதன் எஸ்.பி.எஃப் (SPF - Sun Protection Factor) அளவு 30 இருக்கிறதா என பரிசோதித்துக்கொள்ளவும். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு, முப்பது நிமிடங்களுக்கு முன்னரே தோலில் சன் ஸ்க்ரீனை அப்ளை செய்துவிட வேண்டும். ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் தோலில் சன் ஸ்க்ரீன் அப்ளை செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் சன் ஸ்க்ரீனில், வைட்டமின் ஏ மற்றும் சி இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளவும். ஸ்டீராய்டு மற்றும் ஹைட்ரோகுயினோன் (Hydroquinone) கொண்ட க்ரீம்களை மருத்துவர் பரிந்துரையின்றி உபயோகப்படுத்த வேண்டாம்.

* புற ஊதாக் கதிர்களின் வெப்பத்திலிருந்து தோல்களைக் காக்க, உணவில் வைட்டமின் சி அதிகமிருக்கும் பொருள்களை சேர்த்துக்கொள்ளவும். ஆந்தோசயானிடின்ஸ் (Anthocyanidins), பீட்டா கரோட்டின் (Beta carotene), லைகோபீன் (Lycopene) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமிருக்கும் ஆரஞ்சு, கேரட், புராக்கோலி, மாம்பழம், பப்பாளி, தர்பூசணி, கீரைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

* காரமான, அதிகம் எண்ணெயுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இளநீர், மோர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியான மற்றும் நார்சத்துள்ள உணவுப் பொருள்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு