Published:Updated:

தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை தன்ஷிகாவுக்கு நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை தன்ஷிகாவுக்கு நடந்தது என்ன?
தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை தன்ஷிகாவுக்கு நடந்தது என்ன?

குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையா தடுப்பூசிகள்!

`1,000 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டா ஒரு குழந்தை செத்துதான் போகும்னு ஆஸ்பத்திரியில் சொல்றாங்க. இதை, ஊசி போடுறதுக்கு முன்னாடியே சொல்லியிருந்தா, நாங்க குழந்தைக்கு தடுப்பூசியே போடச் சொல்லியிருக்க மாட்டோம். புள்ளைக்கு எந்த நோயும் வரக் கூடாதுன்னுதான் தடுப்பூசி போடுறோம். அதுவே குழந்தையைக் கொல்லும்னா அதுக்குப் பேரு தடுப்பூசியாங்க?’’ ஆதங்கத்தோடு பேசுகிறார் தன் ஐந்து வயது குழந்தையைப் பறிகொடுத்த, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கோபி.

கொடுங்கையூர், காவேரி சாலை முதல் தெருவில் வசித்துவருபவர் கோபி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவருடைய குழந்தைதான் தன்ஷிகா... ஐந்து வயது. கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் தன்ஷிகா. இந்தக் குழந்தைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அம்மை, தட்டம்மை போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்காகப் போடப்படும் எம்.ஆர் தடுப்பூசி கடந்த வியாழக்கிழமை போடப்பட்டது. தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே கண்கள் சிவந்துவிட்டன; முகம் வீங்கிவிட்டது. உடனே, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்ஷிகா, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மரணமடைந்தாள். மருத்துவர்களின் அலட்சியம்தான் தங்கள் குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் என்று ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள் தன்ஷிகாவின் பெற்றோர்.

தடுப்பூசி போடப்பட்டதும், சிறுமி தன்ஷிகாவுக்கு என்ன நடந்தது என்பதை விரிவாகச் சொன்னார் தன்ஷிகாவின் தந்தை கோபி.

``எம்.ஆர் தடுப்பூசி போட்டாங்க. வெளியில வந்த கொஞ்ச நேரத்துல குழந்தைக்கு கண் எரிச்சல், கை, கால் வீக்கம் ஆகிடுச்சு. திரும்ப உள்ளே கொண்டு போனோம். `நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிச்சிடுச்சு’னு சொல்லி ஆக்ஸிஜன் செலுத்திப் பார்த்தாங்க. ஆனா, ஆக்சிஜன் உள்ளே போகலை. `டோஸேஜ் அதிகமாப் போட்டதாலதான் இப்படி ஆகிடுச்சு’னு ஆஸ்பத்திரியிலேயே சொல்றாங்க. `ஆயிரம் குழந்தைகள்ல ஒரு குழந்தைக்கு இப்படித்தான் ஆகும். இதெல்லாம் சாதாரணம்’னு சொல்றாங்க. ஊசி போடுறதுக்கு முன்னாடியே இப்படிச் சொல்லியிருந்தா நாங்க அதைப் போட்டிருக்கவே மாட்டோம். ஒரு குழந்தையா இருந்தாலும், அதுவும் உயிர்தானேனு யோசிக்க மாட்டேங்கிறாங்க. ஊசி போடுறதுக்கு முன்னாடி, குழந்தையைச் சரியாப் பரிசோதிச்சுட்டு ஊசி போடவேண்டியது ஆஸ்பத்திரியோட கடமை. ஆனா அவங்க ரொம்ப அலட்சியமா பதில் சொல்றாங்க. முதல்ல, `டோஸேஜ் அதிகமாயிடுச்சு’னு என் மனைவிகிட்ட சொன்னவங்க, `ஏன் இப்படி பண்ணீங்க?’னு என் மனைவி கேட்டதும், `ஆதாரம் எதுவும் உங்ககிட்ட இல்லைல்ல... அமைதியாப் போங்க’னு என் மனைவியை மிரட்டியிருக்காங்க. அதனால ராஜீவ் காந்தி மருத்துவமனையில போஸ்ட் மார்ட்டம் செஞ்சோம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைக்க, ஒரு மாசம் ஆகும்னு சொல்றாங்க. இதுக்கு மேல எங்ககிட்ட எதுவும் கேட்காதீங்க. நாங்க இப்போ பேசுற நிலைமையில இல்லை." கண்கலங்கப் பேசுகிறார் கோபி.

``கடந்த வியாழக்கிழமை மதியம் 11:20 மணிக்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. கண்கள் சிவப்பாகி, எரிச்சலுடன் நீர் வடிந்து, முகம் வீங்கிய நிலையில் 12 மணிக்கு மீண்டும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தைக்கு ஐசியூ-வில் வைத்து

சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. வென்டிலேட்டரின் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனமின்றி வெள்ளிக்கிழமை மதியம் 3:45 மணிக்கு குழந்தை இறந்துவிட்டது. குழந்தைக்கு அலர்ஜி (Anaesthetic reaction) ஏற்பட்டிருக்கிறது. பத்து லட்சம் குழந்தைகளில் ஒருவருக்குத்தான் இந்த பாதிப்பு ஏற்படும். ஸ்டான்லி மருத்துவமனையில் முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. குழந்தைக்கு டோஸேஜ் எல்லாம் சரியாகத்தான் கொடுக்கப்பட்டது. டோஸேஜ் அதிகம் என்பதெல்லாம் உண்மை இல்லை" என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பொன்னம்பலம் நமச்சியவாயம்.

``தடுப்பூசி பலன் தருமா, தராதா என்பதில் மருத்துவத் துறையிலேயே மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழும்போது, மீடியாக்களால் கவனம் பெறுவதும், பின்னர் அப்படியே அந்த நிகழ்வு அடங்கிவிடுவதும் வழக்கமாக இருக்கிறது. தடுப்பூசியால் பலன் கிடைக்கவில்லை என்பதற்கே பல ஆய்வு முடிவுகளை எடுத்துக்காட்ட முடியும். எனவே, இப்போதைய கேள்வியெல்லாம் `தடுப்பூசி தேவையா, தேவையில்லையா?’ என்பதைவிட, இதற்கான சட்ட நடைமுறைகளாவது முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கவனத்தில் கொள்வதுதான். அதாவது, தடுப்பூசி போடுவதற்கு முன்னர் தடுப்பூசியின் சாதக, பாதங்களை பெற்றோருக்கு விளக்க வேண்டும். அதன் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் தரப்பில் கையொப்பத்துடன் ஒப்புதல் பெற வேண்டும். இதுதான் உலகளாவிய சட்ட நடைமுறை. அமெரிக்காவில் இதைக் கறாராகப் பின்பற்றுகிறார்கள். நம் நாட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பது அரசுக்கே வெளிச்சம். குறிப்பாக, தடுப்பூசி போடுவதற்கு முன்னர் சாதகங்களை மட்டுமே தெரிவிக்கிறார்கள். `ஒவ்வாமை உள்ளவர்களுக்கு பக்கவிளைவுகள் உண்டாகலாம்’ என்பதையோ, `சில நேரங்களில் இறப்புகூட நேரிடலாம்’ என்னும் விபரீதத்தையோ மருத்துவர்களே மறைக்கிறார்கள்.

அதேபோல மருத்துவ நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்தியாவில் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் (Serum Institute of India) தடுப்பூசி தகவல் குறிப்பிலேயே, `ஒவ்வாமை ஏற்பட்டால் அதனைச் சரிசெய்யத் தேவையான அட்ரினலின் (Adrenaline), ஸ்டீராய்டு (Steroid), ஹிஸ்டமின் (Histamine) எதிர்ப்பு ஊசி மருந்துகள், பிராணவாயு ஆகியவற்றை அருகிலேயே தயாராகவைத்திருக்க வேண்டும்' எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளாவது பின்பற்றப்படுகின்றனவா என்பதும் தெரியவில்லை.

பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், இங்கு தடுப்பூசி போடச் சொல்லி கட்டாயப்படுத்தும் நிலைதான் இருக்கிறது. அப்படி, கட்டாயத்தின்படி ஊசி போட்டுக்கொண்டால் ஏற்படும் உயிரிழப்புக்குக் குறைந்தபட்ச இழப்பீடு என்பதும் இல்லை என்பது மிகவும் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கிறது’’ என்கிறார் சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்.புகழேந்தி.

``எம்.ஆர் தடுப்பூசி என்பது மீசில்ஸ் - ரூபெல்லா (Measles-Rubella) அதாவது, தட்டம்மை, விளையாட்டம்மை நோய் தாக்காமல் இருப்பதற்காகப் போடப்படும் ஊசி. 9 மாதக் குழந்தை முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. `இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் எந்தப் பக்கவிளைவும் ஏற்படாது’ என மருத்துவக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. அதே மருத்துவமனையில் அந்தக் குழந்தைக்குப் போடுவதற்கு முன்னர் ஒன்பது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, தடுப்பூசி குறித்த தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இருந்தாலும், மத்திய சுகாதாரத் துறையின் தடுப்பு ஊசிக்குப் பிறகு ஏற்படும் பின்விளைவுகள் (Adverse Effects Following Immunisation - AEFI) என்கிற கமிட்டியின் விசாரணைக்கு இது உட்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் முன்னிலையிலேயே பிரதேப் பரிசோதனை உள்ளிட்டவையும் நடக்கும். மேலும், முதற்கட்ட தகவல்களில் தடுப்பூசியால் இறப்பு ஏற்படவில்லை என்ற தகவல்தான் கிடைத்திருக்கிறது. மருத்துவர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. தடுப்பூசி, தகுந்த மருத்துவர்கள் மூலம் உரிய மருத்துவக் கண்காணிப்பில்தான் போடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், முழுமையான விவரம் விசாரணை முடிந்த பிறகே தெரியவரும். தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க, தமிழக அரசின் `104’ என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்’’ என்கிறார் தமிழக அரசின் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு