Published:Updated:

எபோலா வைரஸை விரட்டியது எப்படி? நைஜீரியா கற்றுக்கொடுத்த பாடம்!

மனித சக்தி திரண்டெழுந்து எதிர்த்தால், எந்த வைரஸும் தோற்றுப் போய்விடும்.

எபோலா வைரஸை விரட்டியது எப்படி? நைஜீரியா கற்றுக்கொடுத்த பாடம்!
எபோலா வைரஸை விரட்டியது எப்படி? நைஜீரியா கற்றுக்கொடுத்த பாடம்!

இந்த முறை மார்க்கெட்டில் பழ வகைகள் வாங்கும்போது கொஞ்சம் யோசனையாக இருந்தது. பிறகு, `அட... நாம் தமிழ்நாட்டில்தானே இருக்கிறோம்?’ என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வாங்கினேன். ஒரு பழம் வாங்க என்ன பயம் இருக்கக்கூடும்... ஏன் இவ்வளவு யோசனை வர வேண்டும்? காரணம், நிபா வைரஸ்! கேரளாவில் இப்போது முகாமிட்டிருக்கும் இந்தத் தொற்று எப்போது வேண்டுமானாலும் பிற இடங்களுக்கும் பரவலாம் என்கிற பயம். ஏற்கெனவே 13 உயிர்களைப் பலி வாங்கியிருக்கும் இந்த ஆட்கொல்லி வைரஸ், இன்னும் எத்தனை நாள்களுக்கு இருக்கப் போகிறதோ தெரியவில்லை. அரசும் சுகாதார நிறுவனங்களும் இந்த வைரஸின் தாக்குதல் குறித்தும், அதன் அறிகுறிகளையும், மக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகள், சிகிச்சை விவரங்கள் ஆகியவற்றையும் தெளிவாக எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால், பீதியும் அச்சுறுத்தலும் இருக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வு இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். ஒரு பயங்கரமான உயிரியல் ஆயுதத்தை எதிர்கொள்ள அரசு மட்டுமல்ல, பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவையாகயிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நைஜீரியாவில் பரவிய `எபோலா’ (Ebola) என்னும் கொடிய வைரஸ் நோயை அந்த நாட்டு அரசும் மக்களும் எப்படி விரட்டியடித்தார்கள் என்பது  மிகச்சிறந்த முன்னுதாரணம். அதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?

கடந்த முறை விமான நிலையத்தில் ஒரு இமிக்ரேஷன் அதிகாரி, `நான் லாகோஸ், (நைஜீரியா) செல்கிறேன்’ என்பது தெரிந்ததும், ஒரு மாதிரிப் பார்த்தார். `பயமில்லாம அங்கே போறீங்களே...’ என்று கேட்டார். `ஏன் சார் பயப்படணும்?’ என்ற என் கேள்விக்கு, `இல்லை... எபோலா நோய் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அதான்...’ என்று இழுத்தார். `ஆமாம், இருந்தது உண்மைதான். இப்போ இல்லை சார். அதை அவங்க விரட்டியடிச்சுட்டாங்க... உங்களுக்குத் தெரியாதா?’ என்று நான் திரும்பக் கேட்டேன். உடனே, `ஓ... அப்படியா?!’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பதிலாகச் சொல்லியனுப்பினார். என் பதில் அவரது எண்ணத்தைத் துளியளவுகூட மாற்றியிருக்காது என்பது எனக்குத் தெரியும். அவர் மட்டுமல்ல, பலருக்கும் இன்னும் அதே எண்ணம்தான் இருக்கிறது. 

இது முதன்முறை அல்ல, இதுபோல் நிறைய இடங்களில் கேட்டிருக்கிறேன்; பதிலும் சொல்லியிருக்கிறேன். 

எபோலா வைரஸ் மற்றும் நோயைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதுவும் கிட்டத்தட்ட நிபா வைரஸ் போன்றதுதான். ஆனால், அதைவிடக் கொடியது என்றும் சொல்லலாம். காற்றில் பரவக்கூடியது. மிகக் கடுமையான வலியும், வேதனையும், ரணம் ஒழுகும் உடல் புண்களுமாக மனதை உலுக்கும் அசூயையான நோய்த் தோற்றத்தை ஏற்படுத்திவிடுவது எபோலா வைரஸ். அது தரும் கொடிய வலி மிகுந்த மரணம் பற்றிக் கேட்டாலே மனது நடுங்கும். 

ஓர் அதி பயங்கரமான, உயிர்க்கொல்லித் தொற்றுநோயை, நவீன சுகாதார வசதியில் ஓரளவே முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும், வான்வழி, கடல்வழி, தரைவழி விரிவான போக்குவரத்தைக்கொண்டிருக்கும் நாடான நைஜீரியா எப்படி முழுமையாக அழித்தொழித்தது என்பதைப் பார்க்கலாம்.

ஜூலை 20, 2014... துரதிர்ஷ்டமான நாளாக நைஜீரியாவுக்கு விடிந்தது. அன்று, எபோலா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட லைபீரியா நாட்டிலிருந்து விமானத்தில் பேட்ரிக் சாயர் (Patric Sawyer) என்ற அமெரிக்க-லைபீரிய மருத்துவர் நைஜீரியாவுக்கு ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக லாகோஸ் நகரத்துக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் மயங்கிவிழுந்த அவர், அங்கிருந்த பணியாளர்கள், உதவியாளர்களின் உதவியால் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, நகரத்தின் மிகப் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாள்களாகியும் அவர் குணமடையாததால், மருத்துவர்கள் சந்தேகப்பட்டு ரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு எபோலா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூன்றாம் நாள் அவர் மரணமடைந்தார். அதற்குள் நோய்த்தொற்று அவரைக் கவனித்துக்கொண்ட இளம் நர்ஸுக்கும் ஒரு மருத்துவருக்கும் பரவி அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து நகரத்தின் அந்த மிகப் பெரிய மருத்துவமனை கால வரையன்றி மூடப்பட்டது. 

நைஜீரியா, ஆறாத சோகத்திலும் பயத்திலும் மூழ்கியது. ஆனாலும், அரசும் மக்களும் உடனடியாக சுதாரித்துக்கொண்டார்கள்; அழையா விருந்தாளியாக வந்த பேராபத்தைச் சந்திக்க உறுதிபூண்டார்கள். விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இறந்த பயணியுடன் நேர்மறையாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரும் ஒரு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்கள். உடன் பயணம் செய்தவர்கள், விமான நிலைய அதிகாரிகள், பணியாளர்கள், டாக்ஸி டிரைவர், நர்ஸின், டாக்டரின் தொடர்பிலிருந்தவர்கள், அவர்களுடன் இரண்டாம் கட்டமாகத் தொடர்பிலிருந்தவர்கள், அதாவது அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என்று 847 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, நோய் அறிகுறி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். சுமார் 18,000 நேர்முக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் அனைவரும் முதல்கட்டமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதில் சந்தேகம் வந்தபோது இரண்டாம் கட்டமாக 147 பேர் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களில் 20 பேர் நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தார்கள்.

மருத்துவத்துறையும் அரசும் இப்படி நாடு தழுவிய உயிர் காக்கும் பணியில் மூழ்கியிருக்க, மக்களும் தங்கள் பணியைச் செய்தார்கள். எங்கும் எபோலா நோய், அது குறித்த விழிப்பு உணர்வுத் துண்டுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சுகாதாரம் குறித்த விளக்க முகாம்கள் தன்னார்வலர்களால் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. கை குலுக்கி, கட்டித் தழுவி முகமன் கூறும் கலாசாரத்தை சில காலம் மக்கள் மறந்தே போனார்கள். கையை உடனடியாக சுத்தம் செய்ய உதவும் சானிட்டைஸர் ஜெல் பல நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளி விடுப்புகள் நீட்டிக்கப்பட்டன. `தீயாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. பல நாட்டினரின் ஏளனப் பார்வை, நோயின் கடுமை, கையிலுள்ள அளவான மருத்துவ வசதி... இவற்றோடு முப்பத்தாறு மாநிலங்களில் நாடெங்கும் சிதறிக்கிடக்கும் மக்களை எண்ணத்தில் ஒன்று கூட்டி, உடலைப் பேணவைக்கும் முயற்சி... இத்தனையையும் சமாளிக்க, நைஜீரியாவின் மிகச் சிறந்த பேருதவியாக இருந்தது மனித வளமே என்றால் அது மிகையில்லை. மத போதகர்கள், மீடியா, மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள், தன்னார்வலர்கள் நோய் குறித்த விழிப்பு உணர்வு தொடர்பாக ஆற்றிய களப் பணி போற்றுதலுக்குரியது. உலக சுகாதார நிறுவனமும் உதவிக்கரம் நீட்டியது. இப்படி முழு வீச்சில் எபோலா வைரஸ் அரக்கனை மக்கள் எதிர்கொண்டார்கள். 

அதே நேரம் நம்பிக்கையின் வேர்கள் துளிர்த்தன. மருத்துவக்குழுவின் ஓயாத உழைப்பால் 45 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒவ்வொருவராகத் தேறி வந்தார்கள். 

முடிவில், நோய் பீடிக்கப்பட்ட 19 பேரில் 7 பேர் மரணமடைந்தார்கள். 12 பேர் முற்றிலும் குணமடைந்தார்கள். இது மற்ற வளர்ந்த உலக நாடுகளை வியப்படயவைத்த, பொறாமைப்படவைத்த, மிக மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கை. மீண்டும் 42 நாள்கள்வரை (அதாவது எபோலா வைரஸின் இன்குபேஷன் பீரியட் 42 நாள்கள்) ஒரு புதிய நோயாளியோ, நோய்த் தொற்றுடையவரோ இல்லாத நிலையில் நைஜீரியா முற்றிலும் எபோலாவிலிருந்து விடுபட்டது. 2014, ஜூலை 23-ம் தேதி, கடினமான சூழ்நிலையில், மிகுந்த வேதனையோடும் வலியோடும், `நைஜீரியாவில் எபோலா தொற்று இருக்கிறது’ என அதிகாரபூர்வமாக சுகாதார அமைச்சர் அறிவிக்க நேர்ந்தது. ஆனால், அதே வருடம் அக்டோபர் மாதம், 20-ம் தேதி உலக சுகாதார மையம், `நைஜீரியா எபோலா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்ட நாடு’ என்று பெருமையுடன் அறிவித்தது. 

நோய் அரக்கனை எதிர்த்து விரட்டியதில் மனித சக்தி மீண்டும் வெற்றி பெற்றது. 

இப்படி மனித சக்தி திரண்டெழுந்து எதிர்த்தால், எந்த வைரஸும் தோற்றுப் போய்விடும். அதுபோன்ற மனவெழுச்சியுடன் நிபாவை கேரள மக்கள் மட்டுமல்ல, அனைத்து இந்திய மக்களும் எதிர்கொள்வார்கள் என நம்புவோம்.

வாழ்தல் சவால் என்றால், அதையும் சந்திப்போமே?!