Published:Updated:

நுரையீரல் புற்றுநோயை விரட்டுமா தேயிலைச் சாற்றின் குவான்ட்டம் துகள்கள்? #QuantumDots

நுரையீரல் புற்றுநோயை விரட்டுமா தேயிலைச் சாற்றின் குவான்ட்டம் துகள்கள்? #QuantumDots
நுரையீரல் புற்றுநோயை விரட்டுமா தேயிலைச் சாற்றின் குவான்ட்டம் துகள்கள்? #QuantumDots

குப்பையில் கொட்டப்படும் தேயிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றிலிருந்து குவான்ட்டம் துகள்களைத் தயாரித்து புற்றுநோய் செல்களை அழிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய்... உலகின் மிகக் கொடிய நோய். இது யாருக்கு வரும் என்பதை மருத்துவராலும் சொல்ல முடியாது. இந்தக் கொடிய நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். முற்றியநிலையில், காப்பாற்றுவது கடினம். சிலருக்கு வாழ்நாளை வேண்டுமானால் கொஞ்சம் நீட்டிக்க முடியும். மனிதர்களுக்கு சுமார் 100 விதமான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. 2015-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க சுமார் 88 லட்சம் பேர் புற்றுநோயால் மரணமடைந்திருக்கிறார்கள். உலகம் முழுக்க இறப்பவர்களில் ஆறு பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. `புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. எனவே, புற்றுநோய் சிகிச்சையைக் குறைந்த செலவில் செய்யவேண்டியது அவசியம்.

இங்கிலாந்தின் ஸ்வான்சி பல்கலைக்கழகம் (Swansea University), தமிழ்நாட்டின் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் இவை மூன்றும் இணைந்து நடத்திய ஆய்வில், தேயிலைச் சாற்றின் துணையோடு தயாரிக்கப்பட்ட குவான்ட்டம் துகள்களைக் (Quantum dots) கொண்டு, நுரையீரல் புற்றுநோய் செல்களை சோதனை முறையில் அழித்து, புற்றுநோய் மருத்துவத்தில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வுக்கு பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் நாட்டின் அரசு, `செர் சிம்ரு-II' (Ser Cymru-II) என்ற ஆய்வுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி செய்துகொண்டிருக்கிறது.

தேயிலைத் தயாரிப்பில் மூன்றில் ஒரு பகுதி, தேநீர் தயாரிக்க ஏதுவானதாக இருக்காது. எனவே, அந்தக் கழிவுகளை குப்பையில்தான் கொட்டுகிறார்கள். அப்படி, குப்பையில் கொட்டப்படும் தேயிலைக் கழிவுகளின் சாற்றை பரப்பு மாற்றிகளாகக் (Surfactant) கொண்டு மிக நுண்ணிய நேனோ துகள்களான குவான்ட்டம் நேனோ துகள்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியை, ஸ்வான்சி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. இந்த ஆய்வைத் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தலைமையில் முனைவர்கள் கேத்தரின் காஸ்ட்ரோ, மேத்யூ டேவிஸ், மைதிலி ஞானமங்கை, கவிதா சிவாஜி ஆகியோர் மேற்கொண்டார்கள். 

இந்த ஆய்வின் தலைமை ஆராய்வாளர் சுதாகர் பிச்சைமுத்து இதுகுறித்து விளக்கமாகப் பேசுகிறார்... `குவான்ட்டம் துகள்கள் (Quantum Dots) என்பவை மிக நுண்ணிய துகள்கள். இப்போது இவற்றை நீர்மநிலை வடிவில் தயாரிக்க ஆகும் செலவு மிக அதிகம். இதனால் குவான்ட்டம் துகள்களின் விலையும் மிக அதிகம். இப்போது சந்தையில் விற்கப்படும் குவான்ட்டம் துகள்கள் ஒரு மில்லி கிராம் ரூ.22,500 முதல்  ரூ.45,000 வரை விற்கப்படுகிறது.

குப்பையில் கொட்டப்படும் தேயிலைக் கழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றிலிருந்து குவான்ட்டம் துகள்களைத் தயாரிப்பதன் மூலம் இதன் விலையைப் பல மடங்கு குறைக்கலாம். தேயிலைச் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட குவான்ட்டம் துகளை ஒரு மில்லிகிராம் ரூ.900-க்கு விற்கலாம். 

குவான்ட்டம் துகள் என்பது மிக மிகச் சிறிய பருப்பொருள். இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. இந்தத் துகள்கள் குறை கடத்திகள் (Semi Conductor). குவான்ட்டம் துகள்களின் விட்டத்தை வேதியியல் முறையில் மிக எளிதாக மாற்றியமைக்கலாம். ஒரு பொருளிலிருந்து இதைத் தயாரிக்க, அந்தப் பொருளை அதிக வெப்பநிலையில் சூடேற்ற வேண்டும். இது வெவ்வேறு அளவுகளில் இருக்கும். இவற்றை நேனோ மீட்டர் அளவையில்தான் அளக்க முடியும். ஒரு நேனோ மீட்டர் என்பது ஒரு சென்டிமீட்டரில் 1,00,00,000-ல் ஒரு பகுதி. பொதுவாக நேனோ குவான்ட்டம் துகள்கள் 10 முதல் 100 நேனோ மீட்டர்கள் இருக்கும். நம் தலைமுடியின் விட்டம் 40,000 நேனோ மீட்டர் என்றால், குவான்ட்டம் துகள்கள் எவ்வளவு சிறியவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவை ஒளி உமிழும் (Fluorescence) தன்மை கொண்டவை. குவான்ட்டம் துகள்கள் அவற்றின் விட்டத்துக்கு ஏற்றாற்போல, வெவ்வேறு நிறங்களில் ஒளியை உமிழும் தன்மைகொண்டவை.

இப்போது, நீர்ம நிலை குவான்ட்டம் துகள்களை அதிக வெப்பநிலையில் மட்டுமே தயாரித்து வருகிறார்கள். உதாரணமாக, தங்கத்தின் குவான்ட்டம் துகளைத் தயாரிப்பதற்கு, அதை 300 முதல் 450 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடேற்ற வேண்டும். இதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்களின் விலையும் மிக அதிகம். அதனால், தங்கம் உள்ளிட்ட பொருள்களின் குவான்ட்டம் துகள்களைத் தயாரிக்க பிரத்யேக சோதனைக் கூடங்களும், உபகரணங்களும் தேவைப்படும். ஆனால், தேயிலைச் சாற்றிலிருந்து குவான்ட்டம் துகள்களை அறை வெப்பநிலையிலேயே எளிதான முறையில் தயாரிக்க முடியும். அதோடு, வேறு எந்த வேதிப்பொருள்களையும் பயன்படுத்தவும் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம்.

பொதுவாக அறை வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் மற்ற குவான்ட்டம் துகள்களைச் சிறிதாக்குவது கடினம். ஆனால், நாங்களோ திட்டமிட்டதைவிட தேயிலை குவான்ட்டம் துகள்களை மிகவும் சிறியதாக்கியிருக்கிறோம். அதாவது, 3 முதல் 5 நேனோ மீட்டர்கள் அளவுக்குச் சிறிதாகத் தயாரித்திருக்கிறோம். இது புற்றுநோய் செல்களின் டி.என்.ஏ-வின் அளவு மட்டுமே இருப்பதால், புற்றுநோய் செல்களின் செல் சுவரில் இருக்கும் துளைகளின் (Nanopores) வழியாக எளிதில் நுழைந்துவிடும். இந்தச் சிறிய குவான்ட்டம் துகள்களை, ஆய்வக முறையில் நுரையீரல் புற்றுநோய் செல்களுக்குள் செலுத்தினோம். அது உள்ளே சென்று அந்த செல்களின் டி.என்.ஏ-வை அழித்து, புற்று செல்களைப் பெருக்குவதற்காக அனுப்பப்படும் தகவல்களைத் தடுத்து நிறுத்தியது. அதோடு, புற்று செல்களையும் 80 சதவிகிதம் அழிக்கிறது என்பதைக் கண்டறிந்தோம். இதன் மூலம் புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

இந்த விளைவு நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. இது எப்படிச் சாத்தியமானது என்பதும் எங்களுக்குப் புதிராகவே இருக்கிறது. நல்ல ஆரோக்கியமான செல்களை அழித்துவிடாமல், புற்றுநோய் செல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழிக்கும் ஆராய்ச்சியை இப்போது செய்துவருகிறோம். இப்போது, இது சோதனை முறையில்தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஆய்வுகளில்தான் இதை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்து முழுமையாக முடித்து, மனிதர்களுக்குச் சோதனை செய்ய ஐந்து முதல் ஏழு ஆண்டுகள்வரை ஆகலாம். புற்றுநோய் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள், இந்தக் குவான்ட்டம் துகள்களாலும் ஏற்படுமா என்றும் ஆராய்ச்சி செய்து கண்டறிய வேண்டும். இதன் மூலம் புற்றுநோயை முழுவதுமாக குணமடையச் செய்ய முடியுமென்றால், மருத்துவ உலகில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். பல கோடி பேரைக் காப்பாற்றிவிடலாம்.

இயற்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு ஆய்வுகள் செய்து புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு தீர்வு கண்டுபிடிக்கலாம். உதாரணமாக, பனிப் பிரதேச நாடுகளில், சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கற்றைகளிலிருக்கும் அகச்சிவப்புக் கதிர்களை மட்டும் வீட்டுக்குள் அனுமதிக்கும்படி கூரைகளை வடிவமைத்திருக்கிறார்கள். இது பனிக்காலங்களில் வீட்டுக்குள் கதகதப்பான வெப்பநிலை இருக்குமாறு வைத்துக்கொள்கிறது. இந்தக் கூரைகள் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புற ஊதாக் கதிர்களை வீட்டுக்குள் அனுமதிக்காது. இந்தத் தொழில்நுட்பம், இடத்துக்குத் தகுந்தபடி தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி போன்றவற்றிடமிருந்து ஆய்வாளர்கள் கற்றுகொண்டது. இதுபோன்ற பல ஆச்சர்யமான விஷயங்களை இயற்கையிடமிருந்து `பயோமிமிக்’ (Biomimic) என்ற முறை மூலம் கண்டுபிடித்து, மனிதன் பயன்படுத்த வேண்டும்.

இந்த ஆராய்ச்சியில் தமிழகப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களின் பங்கும் இருக்கிறது. ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழக மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். எங்கள் கண்டுபிடிப்பு அவர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும். இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு மனிதவளம் இப்போது தேவைப்படுகிறது. தமிழகத்திலிருக்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நேனோ மற்றும் பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். பிரிட்டன் அரசுக்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்காக மனிதவளம் தேவைப்படுகிறது. இதற்காக, இந்திய மதிப்பில் சுமார் 6,300 கோடி ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சி மாணவர்களை ஈர்ப்பதுதான் இவர்களின் நோக்கம். இந்த வாய்ப்பை நம் மாணவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் சுதாகர் பிச்சைமுத்து.

அடுத்த கட்டுரைக்கு