Published:Updated:

கந்தக அமிலக் கசிவு உடல்நலம் பாதிக்குமா? - மருத்துவர்கள் விளக்கம்!

கந்தக அமிலக் கசிவு உடல்நலம் பாதிக்குமா? - மருத்துவர்கள் விளக்கம்!
கந்தக அமிலக் கசிவு உடல்நலம் பாதிக்குமா? - மருத்துவர்கள் விளக்கம்!

கந்தக அமிலக் கசிவு உடல்நலம் பாதிக்குமா? - மருத்துவர்கள் விளக்கம்!

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டுவந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி அதைச் சுற்றியிருந்த கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் விளைவாக, 28-ம் தேதி ஸ்டெர்லைட்டை மூட அரசு ஆணை பிறப்பித்தது.

இந்த நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையிலிருக்கும் ஒரு குடோனிலிருந்து ரசாயனக் கசிவு வெளியாவதாகப் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்குத் தகவல் கிடைத்தது. அதை ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் மாசுக்கட்டுபாட்டு அலுவலர், தீயணைப்பு அதிகாரி, தாசில்தார், காவல்துறை அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது குடோனில் வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவது உறுதிசெய்யப்பட்டது. இன்று காலையிலிருந்து கந்தக அமிலம் கசிவதைச் சரிசெய்யும் பணி தொடங்கியிருக்கிறது. லாரிகள் மூலம் கந்தக அமிலத்தைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் கசியும் தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களில் பரவியது. இதனால், கிராம மக்கள் அதிர்ச்சியில் வீடுகளைவிட்டு வெளியேறி சாலையில் திரண்டார்கள். தூத்துக்குடி நகரின் அந்தப் பகுதியே பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்படுகிறது.

``கந்தக அமில கசிவால் என்னென்ன உடல்நலப் பாதிப்புகள் உண்டாகும்?’’ - நுரையீரல் நோய் மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம்.

``கந்தக அமிலத்தைச் சுவாசிப்பதால், ரசாயன நிமோனிடிஸ் (chemical pneumonitis) என்னும் ஒருவகை நிமோனியா பாதிப்பு ஏற்படலாம். இது நுரையீரல், மூச்சுக்குழாயைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால், சளி, இருமல், மயக்கம்  நுரையீரல் வீக்கம், தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு சுவாசிக்கும் கந்தக அமிலத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும். ஏற்கெனவே நுரையீரல் பிரச்னையுள்ளவர்களை கடுமையாகப் பாதிக்கும். அதே நேரத்தில் ரசாயனங்களிலிருந்து வெளிப்படும் வாயுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அணியும் பிரத்யேக முகமூடியை  (Respirator Mask) அணிந்துகொண்டால், அதனால் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளை தவிர்க்கலாம். எனவே, இதை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களும், அருகிலிருப்பவர்களும் கண்டிப்பாக, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எனவே, கந்தக அமிலம் வெளியேறும் இடத்துக்கு அருகில் பாதுகாப்பில்லாமல் செல்லக் கூடாது" என்றவரிடம்,

``அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துமா?’’ என்று கேட்டோம்.

``ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி சிப்காட் பகுதியில்தான் இருக்கிறது. இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் மட்டுமே இருக்கும்; குடியிருப்புகள் இருக்காது. மாசுக்கட்டுபாட்டு அலுவலகத்தின் அனுமதிப்படி, குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் மட்டுமே குடியிருப்புகள் இருக்கும். எனவே, தொழிற்சாலையிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஒருவேளை வெடித்துச் சிதறுதல், தீப்பற்றி எரிதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால்தான் அருகிலிருக்கும் மக்களுக்கு பாதிப்பு உண்டாகும். கந்தக அமிலம் வெளியாகும் அளவைப் பொறுத்துதான் அதையும் தீர்மானிக்க முடியும்’’ என்கிறார் ஜெயராமன். 

``சுவாசப் பிரச்னைகளைத் தவிர வேறு என்னென்ன உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்?’’ - பொதுநல மருத்துவர் எழிலனிடன் கேட்டோம்.

``கந்தக அமிலம் நேரடியாக உடலில்பட்டால் சரும எரிச்சல், அரிப்பு, அலர்ஜி, கடுமையான சரும பாதிப்புகள் ஏற்படலாம். கந்தக அமிலம் நேரடியாக நீரில் கலக்கும்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, அது நீரில் கலப்பதைத் தடுக்க வேண்டும். கந்தக அமிலம் கலந்த நிலத்தடி நீரைக் குடிப்பது, அதில் குளிப்பது போன்றவற்றால் அசிடிட்டியில் தொடங்கி, பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். ஏற்கெனவே, புற்றுநோய் உள்ளவர்களுக்கு அந்தப் பாதிப்பு இன்னும் அதிகமாகும். கந்தக அமிலத்தின் கான்சன்ட்ரேஷன் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து பிரச்னைகளின் தன்மை மாறுபடும். குறிப்பாக, `ஹீமோலைசிஸ்' (Hemolysis) என்னும் ரத்த அணுக்கள் பிளவு பெறுதல் பிரச்னை ஏற்படலாம். இது வெள்ளையணுக்கள், சிவப்பு அணுக்கள் போன்ற ரத்த அணுக்களின் உற்பத்தியைப் பாதிக்கும். இதனால், அனீமியா போன்ற ரத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். கந்தக அமிலம் உடலில் சேர சேர, அதை வெளியேற்றும் தன்மையை உடல் இழந்துவிடும். இதனால் அவை உள்ளுறுப்புகளில் படிந்து, அவற்றைப் பாதிக்கும்’’ என்கிறார் எழிலன். 


 

அடுத்த கட்டுரைக்கு