Published:Updated:

ஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி? உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்! #FormalinLacedFish

ஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி? உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்! #FormalinLacedFish
ஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி? உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்! #FormalinLacedFish

கார்பைடு கல், பிராய்லர் கோழி... வரிசையில் ஃபார்மலின் பூசிய மீன்! - மருத்துவம் விவரிக்கும் பக்கவிளைவுகள்!

ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் ... பழங்களை பழுக்கவைக்க கார்பைடு கல்... இப்படி ஏற்கெனவே காய்கறிகள், இறைச்சி என உணவுப்பொருள்களில் ரசாயனக் கலப்படங்கள் நம்மை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழகத்தையே மிரளவைக்கும் புதுவரவு `ஃபார்மலின் தடவிய மீன்கள்.’  ``இறந்தவர்களின் உடலை கெட்டுப்போகாமல்வைத்திருக்கப் பயன்படுத்தும் ஃபார்மலின் (Formalin) என்ற ரசாயனம் தடவிய மீன்களைச் சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுப்புண், ரத்தப் புற்றுநோய்... எனப் பல உடல்நலப் பாதிப்புகள் உண்டாகலாம்’’...  எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 

முதன்முதலாக கேரள எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில்தான் தமிழகத்திலிருந்து ஃபார்மலின் பூசிய மீன்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தச் சோதனை நடவடிக்கைகள், மீன்களில் ஃபார்மலின் இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டறிவது என்பதையெல்லாம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதாவிடம் கேட்டோம்...

``மீன்கள் நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருக்க ஃபார்மலின் தடவி விற்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், இதுவரை அது குறித்து எந்தப் புகாரும் பெறப்படவில்லை. இருந்தாலும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்குவதற்காகப் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். பரிசோதனையில் மீன்களில் ஃபார்மலின் கலக்கப்பட்டது தெரியவந்தால், அந்த மீன்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், விற்பனையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மீன்கள் ஃபார்மலின் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்டவையா என்பதை பொதுமக்களால் கண்டறிய முடியாது. `பேப்பர் ஸ்ட்ரிப்களை மீன் மீது வைத்தால் அதன் நிறம் மாறிவிடும். அதில் ஃபார்மலின் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்’ என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு பரிசோதனை இல்லை. இதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக `டெஸ்ட் கிட்’ மூலம்தான் பரிசோதனை செய்ய முடியும். இந்த டெஸ்ட் கிட்டில் மீன் இறைச்சியிலிருந்து இரண்டு கிராமை எடுத்து, அந்தப் பிரத்யேக கெமிக்கலில் சேர்ப்போம். அப்போது மஞ்சள் நிறம் வந்தால், அதில் ஃபார்மலின் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இதை வைத்துத்தான் மீன்களில் ஃபார்மலின் தடவப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிகிறோம்.

மீன்கள் மட்டுமல்லாமல் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்தாலோ, சுகாதார விதிமுறைகளைச் சரிவர கடைப்பிடிக்காவிட்டாலோ அந்தக் கடை உரிமையாளர் அல்லது வியாபாரிக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். அதோடு  உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். இது குறித்து ஏற்கெனவே மீன் வியாபாரிகள், விற்பனைக் கூடம் போன்ற இடங்களில் அறிவுறுத்தியிருக்கிறோம். அதேபோல, காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வது, உணவுப் பொருள்களில் தரம் குறைவாக இருப்பது, பராமரிப்புக் குறைபாடு ஆகியவை குறித்து 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்...”  என்கிறார் அமுதா.

``ஃபார்மலின் மீன்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன... இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?’’ -

 பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்... 

``மீன்கள் நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அதில் ஃபார்மலினைத் தடவி விற்பனை செய்கிறார்கள். இதனால் நீண்ட நாள்கள் ஆனாலும், புதிதாகப் பிடித்த மீன்களைப்போலவே அவை இருக்கும். அதற்காக இந்த மீன்களில் ஃபார்மலின் மட்டுமல்லாமல் அமோனியா, ஐஸ் கட்டிகள் உருகாமலிருக்க சோடியம் பென்சோயேட் (Sodium benzoate) போன்ற ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. 

இந்த ஃபார்மலினைத்தான் மீன்களைப் பதப்படுத்த பயன்படுத்துவதாக பரிசோதனைகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ரசாயனங்களில் பதப்படுத்தப்பட்ட மீன்களைச் சாப்பிட்டால், குறுகியகால பாதிப்புகளாக கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், வயிற்றுப்புண், வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்படலாம். ஃபார்மாடிஹைடில் (Formaldehyde) புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்  (Carcinogen) என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இதை நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தப் புற்றுநோய் ஏற்படலாம்.

உணவுப் பாதுகாப்புத் துறை என்ற ஒரு துறை தமிழகத்தில் இயங்கிவருகிறது. ஆனால், `புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுப்பேன்’ என்று மெத்தனமாகச் செயல்பட்டுவருகிறது. கேரளாவில்  ஃபார்மலின் தடவப்பட்ட மீன்கள் பிடிபட்டவுடன் உடனடியாக தமிழகம் முழுக்கச் சோதனையை நடத்தியிருக்க வேண்டும். அதேபோல பரிசோதனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் வருகின்றன. மீன்  இறைச்சி மாதிரிகளை எடுத்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சோதனை நடத்திக் காட்ட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே தெரியவரும்...’’ என்கிறார்  புகழேந்தி.

 

பின் செல்ல