Published:Updated:

குழந்தைகளின் பார்வையைப் பறிக்கும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு... ஓர் எச்சரிக்கை! #ChildrenEye

குழந்தைகளின் பார்வையைப் பறிக்கும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு... ஓர் எச்சரிக்கை! #ChildrenEye
குழந்தைகளின் பார்வையைப் பறிக்கும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு... ஓர் எச்சரிக்கை! #ChildrenEye

பார்வை பத்திரம்... பிளீச்சிங் பவுடர், பாத்ரூம் கிளீனர்களை குழந்தைகளின் கைக்கெட்டாத இடத்தில் வையுங்கள்!

`குழந்தைகளின் கண் பார்வையைப் பாதிப்பதில், ரசாயனப் பொருள்களுக்கு அதிக பங்கு இருக்கிறது' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். `இந்தியாவில், 2 லட்சம் குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு உள்ளது' என்கிறது ஓர் ஆய்வு. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறு கவனமின்மை கூட குழந்தைகளின் பார்வைத்திறனை பறித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள் அவர்கள். 

இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் கண் மருத்துவர் நவீன்.  

``ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம் ரசாயனங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள்மீது பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருக்கும் நேரங்களில்தாம் அதிக பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, விளையாடும்போது கண்களில் குத்திக்கொள்வது, அதிகமாகக் கசக்குவது, தூசு இருக்கும் பொருளைத் தொட்டுவிட்டு அப்படியே கண்களைத் தொடுவது, ஏதேனும் திரவத்தை கண்களில் ஊற்றிக்கொள்வது, குச்சிகளைக் கண்களுக்குள் விட்டு விழித்திரையில் குத்திக்கொள்வது போன்ற செயல்களில் தனிமையான நேரங்களில்தாம் குழந்தைகள் செய்வார்கள். 

சுண்ணாம்பு, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்திருக்கும் அமிலங்கள் அல்லது கிளீனர்கள், ப்ளீச்சிங் பவுடர், குளிர்பானங்கள் போன்றவற்றை எப்போதும் குழந்தைகளின் கைக்கெட்டாதவாறு வைக்கவேண்டும். மிகவும் ஆபத்தான பொருள் சுண்ணாம்புதான். காரணம், அதிலுள்ள ஆசிட் மற்றும் அல்கலி (Alkali) என்ற ரசாயனப்பொருள். 

கண்களின் விழித்திரையில் ஆசிட்டோ, அல்கலியோ படும்பட்சத்தில், கருவிழிகளுக்குள் அவை ஊடுருவத் தொடங்கிவிடும். உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரசாயனங்கள் கண்களுக்குள் தங்கி அழற்சிப் பிரச்னைகளை ஏற்படுத்தும். கண்களில் வறட்சி ஏற்படுவது, சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது போன்றவை அழற்சிக்கான அறிகுறிகளாகும். இதனால் கருவிழிகள் கடுமையாகப் பாதிக்கப்படும். 

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, கண்களில் ரசாயனம் பட்டவுடன் தொடர்ச்சியாக அரைமணி நேரம் கண்களை நன்றாகக் கழுவவேண்டும். முதல் 30 நிமிடங்களில் என்ன செய்கிறோம் என்பதுதான் பாதிப்பின் தன்மையைத் தீர்மானிக்கும். எனவே, கப் நிறையத் தண்ணீர் எடுத்து அதில் கண்களைத் திறந்தபடி வைத்து சுத்தம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீராக இருந்தால், நல்லது. இமையை முடிந்தவரை திறந்து கண்களுக்குள் நீர் செல்லும்படிச் செய்யவேண்டும்.  கண்களுக்குள் செல்லும் நீர், சுண்ணாம்புப் பவுடரை கரைத்து வெளியே தள்ளிவிடும். சுண்ணாம்பிலுள்ள பெரிய பகுதிகள் இமைகளுக்கு அடியில் தங்கிவிடும் என்பதால், அரைமணி நேரம் கண்களை சுத்தப்படுத்திய பிறகு மருத்துவரிடம் செல்லவேண்டும். 

மருத்துவர்கள் பி.ஹெச் எவ்வளவு உள்ளது என்பதைக் கணக்கிடுவதுண்டு. கண்களில் சுண்ணாம்பு இருந்தால், பி.ஹெச் அளவு எட்டுக்கு மேல் இருக்கும். ஏழு என்ற அளவுக்கு வரும்வரை சிகிச்சை அளிக்கப்படும். அதற்கு பிறகும், விழித்திரை அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரிந்தால் பேண்டேஜ் கான்டாக்ட் லென்ஸ் (Bandage Contact Lens) பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படும். மேலும், ஸ்டீராய்ட்ஸ் (Steroids) மற்றும் வலி நிவாரணி மருந்துகள் கொடுக்கப்படும். 

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கண்களில் பிரச்னைகள் அதிகளவில் இருக்கின்றன. இப்பிரச்னையை, `ரெட்டினோபதி ஆஃப் ப்ரீ-மெச்சூரிட்டி' (Retinopathy of Prematurity) என்பார்கள்.  விழித்திரையில் பாதிப்பு ஏற்படுவது, ஏதாவது ஒரு கண்ணில் மட்டும் பார்வைக் குறைபாடு ஏற்படுவது, கண்கள் சோம்பல்தன்மை அடைவது (Lazy Eyes), மாறுகண் நோய் போன்றவை ஏற்படக்கூடும். இத்தகைய பிரச்னைகள் அனைத்தையும், முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் எளிமையாகச் சரிசெய்துவிடலாம். குழந்தை பிறந்தவுடன், குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின்பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

கவனம்... 

கண் பார்வையில் குறைபாடுகள் எதுவும் இருந்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், வருடத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். 

கண்களில் படும் ரசாயனத்தை (Chemical Burns) கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. முதல் நிலையிலேயே சரிசெய்யாவிட்டால், வாழ்நாள் பாதிப்புகள்கூட ஏற்படலாம். 

அல்கலி வகைகளில், பி.ஹெச் அளவு அதிகமாக இருக்குமென்பதால், அது ஏற்படுத்தும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கும். அல்கலியில் அமோனியா, பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, மக்னீசியம், சுண்ணாம்பு போன்றவை இருக்கக்கூடும். செடிகளுக்குப் பயன்படுத்தப்படும் உரம், சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் பொருள்கள் போன்றவை அல்கலிக்கான சிறந்த உதாரணங்களாகும். 

கண்களில் வலி, கண் சிவந்து போயிருப்பது, எரிச்சல் ஏற்படுவது, திறக்க முடியாமல் போவது, பார்வை மங்கலாவது, அதிகமாக நீர் வெளிவருவது போன்ற எந்தப் பிரச்னையையும் உதாசீனப்படுத்த வேண்டாம். 

குழந்தைகளை, பெற்றோர் மின்திரைகளுக்கு அடிமையாக்கிவிட வேண்டாம். இது அவர்களுக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்"  என்கிறார் நவீன்.

அடுத்த கட்டுரைக்கு