Published:Updated:

தம்பதியர் பிரிவு, கூழ், வேப்பிலை... ஆடி மாத நம்பிக்கைகள், மருத்துவ உண்மைகள்!

தம்பதியர் பிரிவு, கூழ், வேப்பிலை... ஆடி மாத நம்பிக்கைகள், மருத்துவ உண்மைகள்!
தம்பதியர் பிரிவு, கூழ், வேப்பிலை... ஆடி மாத நம்பிக்கைகள், மருத்துவ உண்மைகள்!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர் பிரிந்துதான் இருக்க வேண்டுமா?

மிழ் மாதங்களில் ஆடி மாதத்துக்குச் சிறப்புகள் ஏராளம். `ஆடிவெள்ளி', `ஆடிப்பெருக்கு', `ஆடி அமாவாசை', `ஆடி கிருத்திகை'... எனப் பெரும்பாலான நாள்கள் விழாக்களாலும் விசேஷங்களாலும் நிறைந்தவை. இந்த மாதத்தில் விரதங்களுக்குப் பஞ்சமிருக்காது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் அதிகமாகக் கடைப்பிடிக்கப்படும். கூழ் ஊற்றுதல், உணவுமுறையில் மாற்றம், அசைவம் தவிர்த்தல், வீட்டின் முன்னால் வேப்பிலையைக் கட்டுதல், புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்தல்... என இந்த மாதத்துக்கேயான பிரத்யேக நடைமுறைகள் ஏராளம். `இதன் பின்னணியில், ஏராளமான மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன' என்கிறார்கள் மருத்துவர்கள். அவை என்னென்ன என்பது குறித்து சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம்... 

``ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?’’  

``தமிழர்களின் பாரம்பர்யத்தில், உணவில் சிறுதானியங்களுக்கு முக்கியமான, சிறப்பான இடம் உண்டு. உடல் ஆற்றலையும், நோய்

எதிர்ப்பு சக்தியையும் இந்த உணவுகள் அதிகரிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும். கம்பு, கேழ்வரகு, சோளம்... என விதவிதமான சிறுதானியங்களைக் கொண்டு கூழ், அடை, கஞ்சி... என விருப்பமான உணவுகளைச் செய்து உட்கொள்ளலாம். கூழ் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. கடும் உடலுழைப்பு செய்வோரின் ஆற்றல் குறையாமல் இருக்க இது உதவியாக இருக்கும். இந்த மாதத்தில் கேழ்வரகுக் கூழ், கம்பங்கூழ் தாராளமாகக் கிடைக்கும். எனவே, கூழை குழந்தைகள், இளம் வயதினர் சாப்பிடலாம். அது உடலுக்கு ஆரோக்கியம் தரும். தொற்று நோய்கள் இருப்பவர்கள், மருத்துவரின் அறிவுரைப்படிதான் கூழ் சாப்பிட வேண்டும்.’’ 

``வேப்பிலையை அதிகம் பயன்படுத்துவது ஏன்?’’ 

``ஆடி மாதத்தில் வீட்டு வாசல்களில் வேப்பிலை தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். `வேப்பிலை மிகச் சிறந்த கிருமி நாசினி’ என்பதுதான் இப்படி வாசலில் தொங்கவிடப்படுவதற்கான அடிப்படைக் காரணம். ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசும். அதனால், காற்றிலிருக்கும் கிருமிகள் வீட்டுக்குள் வர வாய்ப்பிருக்கிறது. இதனால் நோய்த்தொற்று, உடல்சார்ந்த பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்காகத்தான் வேப்பிலையைப் பயன்படுத்துகிறார்கள். `வீட்டு வாசலில், பின்புறத்தில், அருகில் வேப்ப மரம் வளர்க்க வேண்டும்’ என்று சொல்லப்படுவதற்கு இதுதான் காரணம். வேப்பிலைச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; ஆனாலும் அதை மருத்துவரின் பரிந்துரைப்படிதான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.’’ 

``புதுமணத் தம்பதியரை, இந்த மாதத்தில் பிரித்து வைப்பது ஏன்?’’ 

``ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால், சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை, கோடைக்காலம். அந்த மாதம் முழுக்க வெயில் வறுத்து எடுத்துவிடும். வெப்பம் நிறைந்திருக்கும்; வியர்வை  அதிகமிருக்கும். இந்தக் காலகட்டத்தில் தொற்று வியாதிகள் அதிகம் ஏற்படலாம். அந்தச் சூழலில் குழந்தை பிறந்தால் தாய்-சேய் இருவருக்குமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். ஆடி மாதம் கர்ப்பம் தரிப்பதைத் தடுப்பதற்காகத்தான் புதுமணத் தம்பதியரைப் பிரித்துவைக்கிறார்கள். இந்த மாதத்திலும் பாதுகாப்பாக உறவுகொண்டால், கர்ப்பமாவதை தடுத்துவிடலாம். அதைக் கறாராக கடைப்பிடிப்பதாக இருந்தால், தம்பதியர் ஆடி மாதத்தில் பிரிந்திருக்க வேண்டியதில்லை." 

``ஆடி மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாதா... ஏன்?" 

``ஆடி மாதத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு, சுபகாரியங்கள் கூடாது போன்ற நம்பிக்கைகள் அனைத்தும் ஜோதிடக் கருத்துகளே. மருத்துவர்கள் இதை ஆதரிப்பதில்லை. இந்த மாதத்தில் குழந்தை பிறப்பதால் தாய்-சேய் இருவருக்கும் எந்த உடல் உபாதையும் ஏற்படாது.’’ 

``இந்த மாதத்தில் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடலாம்... எவற்றையெல்லாம் தவிர்க்கலாம்?" 

``ஆங்கில மாதக் கணக்குப்படி, முதல் ஆறு மாதங்கள் கோடைக்காலம். அடுத்த ஆறு மாதங்கள் குளிர்காலம். ஆடி மாதத்துக்குப் பின்னர் குளிர்காலம் தொடங்கிவிடும். எனவே, குளிருக்கேற்ற உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வறுத்த உணவுகள், செரிமானப் பிரச்னை ஏற்படுத்தும் உணவுகள், அசைவ உணவுகளை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது. சில கோயில்களில் அசைவ உணவுகளைப் படையல் செய்வார்கள். அந்த நேரத்தில், உணவில் அதிகமாக மிளகு சேர்த்துக்கொள்ள வேண்டும். இது சளி, இருமல் போன்ற மழைக்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைக் காக்கும். இந்த மாதத்தில் உணவில் பழங்கள், கீரை வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது நல்லது."

அடுத்த கட்டுரைக்கு