Published:Updated:

நீங்கள் கூகுள் டாக்டரை நம்புபவரா? - `சைபர்கோண்ட்ரியா' பாதிப்பு உஷார்! #Cyberchondria

நீங்கள் கூகுள் டாக்டரை நம்புபவரா? - `சைபர்கோண்ட்ரியா' பாதிப்பு உஷார்! #Cyberchondria
நீங்கள் கூகுள் டாக்டரை நம்புபவரா? - `சைபர்கோண்ட்ரியா' பாதிப்பு உஷார்! #Cyberchondria

கூகுள் டாக்டரை நம்பலாமா? ஓர் எச்சரிக்கை ஸ்டோரி! #Cyberchondria

ள்ளிக்கூட ஆசிரியையான தேவிக்கு இரண்டு குழந்தைகள். வீடு, கணவன், குழந்தைகள், பள்ளி எனக் காலில் சக்கரத்தைக் கட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாமானிய மனுஷி. நல்ல உடல்நலத்துடன் மனநலத்துடன் இருந்த தேவிக்குச் சில வாரங்களுக்கு முன் தாங்கமுடியாத தலைவலி. பணிச் சூழலால் தலைவலி பற்றிப் பெரிதாகக் கவலைப்படாமல் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். 

மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை. ஓய்வுநாளான அன்று கொஞ்சம் நேரம் ஒதுக்கி கூகுள் மருத்துவரிடம் ஆலோசிக்கிறார். ஆம், கடந்த காலங்களில் தனக்கு வந்த சளி, காய்ச்சல், சேற்றுப்புண், வயிற்றுவலிக்கெல்லாம் கூகுள் மருத்துவரிடம் ஆலோசித்து அதில் பலன் பெற்ற அனுபவம் இருப்பதால், இந்தத் தீராத தலைவலிக்கும் கூகுள் மருத்துவரிடம் கன்சல்ட்டிங் நடக்கிறது. தனக்கு வந்த தலைவலி மற்றும் அதையொட்டி காணப்படும் அறிகுறிகளையெல்லாம் ஒன்று சேர்த்துப் பொருத்திப் பார்க்கிறார். கடைசியில், `தாங்கமுடியாத இந்தத் தலைவலிக்குக் காரணம் மூளையில் கட்டி உருவானதே' என்று கூகுள் மருத்துவரும் ஆசிரியை தேவியும் ஒரு முடிவுக்கு வருகின்றனர். 

மூளையில் கட்டி என்றதும் தேவி மட்டுமல்ல, வீடே இருண்டுபோகிறது. கணவனும் குழந்தைகளும் அழுதுபுலம்புகின்றனர். தேவிக்கு அந்த நிமிடம் முதல் உணவு இறங்கவில்லை. ஆனாலும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து மூளையில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதென்றும் எப்போது அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் கூகுள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கிறார்கள். 

தேவியின் வீட்டில் நடக்கும் இந்த நிகழ்வை அவரது வீட்டுப் பணிப்பெண் தொடக்கம் முதல் கவனித்துக்கொண்டிருக்கிறார். அதுவரை அதுபற்றி வாய் திறக்காத அந்தப் பணிப்பெண், அங்கு நிலவும் அசாதாரண சூழலில் பேசத் தொடங்குகிறார். யாரும் நினைக்காதவேளையில், ``யம்மா... இங்க பாரு... நீயா எதுனா நெனச்சுக்காதம்மா. ஒனக்கு ஒண்ணும் இல்ல. நம்ம கைலாசம் டாக்டரைப் போய் பாரு. அவர் என்ன சொல்றார்னு பாத்துட்டு வா. சும்மா அழுதுக்கிட்டு இருக்காத..." என்று சொல்கிறார். வேலைக்காரப் பெண் சொன்னபடி, மருத்துவர் கைலாசத்தைச் சந்திக்கிறார்கள்.

தேவியைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் கைலாசம், அவருக்கு வந்த தலைவலி பற்றியும் அதற்கான அறிகுறிகளையும் கேட்டறிகிறார். கடைசியில்,`உங்களுக்கு வந்திருக்கிறது சாதாரண ஒற்றைத் தலைவலிதான், ரெண்டு நாளில் சரியாகிவிடும்' என்று சொல்ல தேவிக்கு அழுகையுடன் பயங்கர இன்ப அதிர்ச்சி. தலைவலி பற்றி மருத்துவரிடம் கூறிய தேவி, கூகுளில் தான் கற்ற மருத்துவம் பற்றிச் சொல்கிறார். தேவியின் இந்தச் செயல், மருத்துவருக்கு ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

ஆசிரியை தேவியைப் போலவே பலரும் சரியான தெளிவின்றி, யாரோ சொல்லக்கேட்டும் கூகுளின் உதவியுடனும், `தனக்கு இந்த நோய்தான் வந்திருக்கிறது' என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். உடல் நலம் குறித்த விழிப்புஉணர்வு ஒவ்வொருவருக்கும் தேவைதான். ஆனால், அதற்கென ஓர் எல்லை உண்டு. அதைத் தாண்டினால் ஆபத்தில் போய் முடியும். இந்த நிலையை `சைபர்கோண்ட்ரியா' (Cyberchondria) என்கின்றனர். தன் உடல் காட்டும் அறிகுறிகளை, இணையம் மூலம் தேடி ஒரு முடிவுக்கு வந்து முறையான மருத்துவ ஆலோசனை பெறாமல் மன அழுத்தம், பதற்றத்தால் பாதிக்கப்படும் நிலையையே `சைபர்கோண்ட்ரியா'.  இன்றைக்கு இந்தச் சொல் மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இயல்பாகவே அனைத்து அம்மாக்களும் மருத்துவர்கள்தாம். தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், உடல்நிலை குறித்து பயமும் பதற்றமடைவார்கள்; அது இயல்பான ஒன்றே. பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் இதுபோன்ற நிலை சாதாரணமாக ஏற்படுவதில்லை. காரணம் அவர்களது அனுபவம் காரணமாக சில யோசனைகளும் ஆறுதலும் அவர்களிடமிருந்து கிடைக்கும். ஆனால், பயமும் பதற்றமும் ஓர் எல்லையைத் தாண்டி 24 மணி நேரமும் அதைப் பற்றியே சிந்திப்பது, மன அழுத்தத்துடன் இருப்பது, கூகுளில் தேடி மருத்துவம் பார்ப்பது போன்றவை ஆக்கபூர்வமான செயல் இல்லை என்கிறது மருத்துவ உலகம். இதைத்தான் `இடியட் சிண்ட்ரோம்' (Idiot Syndrome) என்கிறார்கள். இந்த வட்டத்துக்குள் பெரும்பாலும் இளம் தாய்மார்களும் 40 வயதைக் கடந்த பெண்களும் 50 வயதை நெருங்கும் ஆண்களும் சிக்கிக் கொள்வார்கள். அவர்களது தேவையைத் தாண்டிய தேடலில் பல நேரங்களில் ஆபத்து புதைந்திருக்கிறது என்பதை அறிவதும், அறிவிப்பதும் இன்றைய காலச் சூழலில் அவசியமாகிறது.

`சைபர்கோண்ட்ரியா'  தொடர்பாக விரிவாகப் பேசுகிறார் டாக்டர் வேல்முருகன். 

* அதிகப்படியான தகவல், பயனாளர்களைக் குழப்பி விடும் வாய்ப்பு உள்ளதால் முறையான ஆலோசனை பெறுவதே நல்லது.

* முக்கியமான சில நோய்களைக் குணப்படுத்துவது குறித்த காலகட்டத்தை இணைய வழி மருத்துவம் உணர்த்துவதில்லை. எனவே தாமதமாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்வதால் நோயின் தீவிரம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.

*  சில நேரங்களில் நோயாளி மருத்துவருக்கு ஆலோசனை சொல்லும் நிலையைப் பார்க்கிறோம். இது நோயாளி - மருத்துவர் உறவைப் பாதிக்கும்.

*  இணையவழி விமானம் ஓட்ட கற்றுக்கொள்ள முயல்வது போல்தான் இணையவழி மருத்துவ சிகிச்சைக்கான தேடலும். அது நிச்சயமாகப் பலனளிக்காது.

* நோயாளிகளுக்கு மனநிறைவு ஏற்படாவிட்டால் மருத்துவரை மாற்ற அவருக்கு உரிமை உண்டு. ஆனால், ஏதாவது ஒரு மருத்துவரை முழுமையாக நம்புவது நன்மை பயக்கும்.

* 'செகண்டு ஒப்பீனியன்' எனப்படும் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது என்பது வேறு; இணைய வழி மருத்துவ அறிவு என்பது வேறு. ஆனால், `செகண்டு ஒப்பீனியன்' கேட்பதில் அனைவருக்கும் உரிமை உண்டு.

* சிறப்பு மருத்துவர் 10 ஆண்டுக்கால மருத்துவப் படிப்பின் போதும் மருத்துவமனையில் பணிபுரியும் போதும் பலவிதமான நோயாளிகளைப் பார்ப்பார். மருத்துவரின் கண்டறியும் திறனை எதனுடனும் ஒப்பிடுவது என்பது இயலாத காரியம்..."

ஆக, இணையம் வழியாகப் பெறும் தகவல்கள் அனைத்தும் பொதுவானதே தவிர தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தி வருவன அல்ல. எனவே, இணையத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு முடிவுக்கும் வந்து சுய சிகிச்சை மேற்கொள்வதோ, தனக்கு இந்த நோய்தான் வந்துள்ளது என்று தானே உறுதிப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொள்வதோ உயிருக்கு ஆபத்தானது என்ற மருத்துவரின் கூற்றில் உள்ள நியாயத்தை உணரத்தான் வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு