Published:Updated:

மாரடைப்பே தள்ளிப் போ...

கை கொடுக்கும் வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்

மாரடைப்பே தள்ளிப் போ...

கை கொடுக்கும் வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்

Published:Updated:
##~##

'இந்தியாவில் மாரடைப்பு காரணமாக 29 சதவிகித மக்கள் இறந்து போகிறார்கள்’ என்று அதிர்ச்சி அலையைக் கிளப்புகிறது, மருத்துவப் புள்ளிவிவரம். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா... இல்லையா என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துகொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன என்பதைக் கேள்விப்பட்டு, சென்னை அண்ணாநகர் தம்பிரான் ஹார்ட் அண்டு வாஸ்குலார் இன்ஸ்டிடியூட் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம். 

''பிற நாடுகளைவிட நம் நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை அதிக அளவில் பாதிக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் உணவு முறை மற்றும் வாழ்க்கைச் சூழல் ஆகும். 60 வயதான பிறகு உடலில் தென்படும் பாதிப்புகள், இப்போது 30 வயதிலேயே குறிப்பாக ஆண்களிடம் தெரியத் தொடங்குகிறது. இதயம் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் ஓரளவு ஏற்பட்டு இருந்தாலும், நெஞ்சு வலி அல்லது மாரடைப்பு ஏற்பட்ட பின்னரே  மருத்துவரை நாடி வருகிறார்கள்.

மாரடைப்பு ஒருவருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள ஈ.சி.ஜி, எக்கோ, டிரெட் மில் போன்ற பரிசோதனைகள் உள்ளன. ஆனால் இத்தகையப் பரிசோதனை மூலம் ரத்தக் குழாயில் 60 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருந்தால்தான் கண்டறிய முடியும். அதிலும் 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு, அடைப்பு இருந்தால்கூட பாதிப்பைக் கண்டறிய முடிவது இல்லை. இந்தக் குறைபாட்டைத் தீர்க்கும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது, வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்.

மாரடைப்பே தள்ளிப் போ...

இதயம் பாதிக்கப்படுவதற்கு முன்பே, இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள்தான் முதலில் பாதிக்கப்படுகிறது. மனித உடலில் ஏறத்தாழ 72,000 ரத்த நாளங்கள் உள்ளன. இந்த ரத்த நாளங்களில் என்டோதீலியம் என்கிற மெல்லிய படலம் காணப்படும். இதில் கொழுப்பு படியத் தொடங்கினால், அந்தப் பகுதி சோர்வடைந்து, இயங்குவதில் தாமதம் உண்டாகும். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்திலும் கொழுப்பு படிந்தால், ரத்தம் சீராகச் செல்லமுடியாமல் தடை ஏற்படும். இதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கான முதல் நிலை.

இப்படி என்டோதீலியத்தில் கொழுப்பு படிவதை எஃப்.எம்.டி. டெஸ்ட் மூலம் தற்போது கண்டறியமுடியும். ரத்த நாளங்களை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதன் மூலம் பாதிப்பு கண்டறியப்படுகிறது. கொழுப்பு படிந்திருப்பது கண்டறியப்பட்டால், சோர்வு அடைந்திருக்கும் என்டோதீலியத்தை இயங்கச் செய்ய நைட்ரிக் ஆக்சைடு தேவைப்படும். அதனால் பாதிக்கப்பட்டவரை, நைட்ரிக் ஆக்சைடு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைப்போம்.

என்டோதீலியத்தில் கொழுப்பு படியப் படிய, ரத்த நாளங்கள் விரிந்து சுருங்கும் தன்மையை இழக்கும். இதனால் இதயம் அதிக அழுத்தம் கொடுத்து, ரத்தத்தை பிற பாகங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகும்.  இதன் காரணமாக இதயம் அதிக அழுத்தத்திற்கு ஆட்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கான அடுத்தகட்ட நிலை இது. இதனை 'ஆர்டீரியல் ஸ்டிஃப்னெஸ் டெஸ்ட்’  மூலம் கண்டறியலாம். இந்த குறைபாட்டினையும் நீக்குவதற்கு மருந்து, மாத்திரைகள், உணவு முறைகள் மற்றும் சரியான உடற்பயிற்சியே போதுமானது.  

இதற்கு அடுத்த நிலை, ரத்த நாளங்களின் தடிமனைக் கண்டறிவது. 30 வயதுள்ள ஒருவரின் ரத்த நாளத்தின் தடிமன் சாதாரணமாக 0.6 மில்லி மீட்டர் என்கிற அளவில் இருக்கும். 70 வயதைத் தொடும்போது, அதன் தடிமன் 1 மில்லி மீட்டர் ஆகிவிடும். இதனை வாஸ்குலர் ஏஜ் என்று சொல்வோம். ஆனால் இப்போது புகைப் பழக்கம், அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், அதிக மன அழுத்தம் போன்ற காரணங்களால் 30 வயதிலேயே ரத்த நாளங்கள் தடிக்கத் தொடங்குகிறது. அதாவது 30 வயதிலேயே ஒருவரின் ரத்த நாளம், கிட்டத்தட்ட 50 வயதான ஒருவரின் ரத்த நாளத்தைப் போல் தடிமனாகி விடுகிறது. இதனை இன்டிமோ  மெடிக்கல் திக்னெஸ் டெஸ்ட் மூலம் கண்டறியலாம். ரத்த நாளங்களின் தடிமன் அதிகரிப்பதால் ரத்த நாளங்கள் சுருங்கி அடைப்புகள் உருவாகும். இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். இதனை சி.டி ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியலாம்.

என்டோதீலியத்தில் கொழுப்பு படியத் தொடங்குவது முதல் ரத்த நாளங்களில் அடைப்புகள் உண்டாகி மாரடைப்பு ஏற்பட, கிட்டத்தட்ட ஐந்தில் இருந்து 10 ஆண்டுகள் வரை ஆகலாம். இதனை பல்வேறு பரிசோதனை கள் மூலம் அறிந்துகொண்டு, சிகிச்சை மேற்கொள்ளும் ஒட்டுமொத்த நடவடிக்கையைத் தான், வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட் என்று சொல்வோம். 30 வயதைத் தாண்டிய அனை வருமே இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. முன்னெச்சரிக்கையாக இந்தப் பரிசோதனைகள் செய்துகொண்டு, சிகிச்சை பெறுவதன் மூலம் மாரடைப்பு வராமலோ அல்லது முடிந்த வரைக்கும் தள்ளிப் போடவோ கண்டிப்பாக முடியும்'' என்றார்.

வருமுன் காக்கலாமே!

அ.லெனின்ஷா