Published:Updated:

''பற்களின் அஸ்திவாரம்... வருமானத்துக்கு ஆதாரம்!''

''பற்களின் அஸ்திவாரம்... வருமானத்துக்கு ஆதாரம்!''

''பற்களின் அஸ்திவாரம்... வருமானத்துக்கு ஆதாரம்!''

''பற்களின் அஸ்திவாரம்... வருமானத்துக்கு ஆதாரம்!''

Published:Updated:
''பற்களின் அஸ்திவாரம்... வருமானத்துக்கு ஆதாரம்!''
##~##

முகத்தை அழகாகக் காட்டுவதில் எடுப்பான பல் வரிசைக்கு முதலிடம்! தொழில் ரீதியிலான கலந்துரையாடல்களில் பங்கேற்போர் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 'அழகான முகமே பாதி வெற்றியைக் கொடுத்துவிடும்’ என்பது பொருத்தமான பொன்மொழி!

 ''பல் போனால் சொல் போச்சு!’ என்பார்கள். ஆனால், பல் இல்லாமல் போனதால், தொழிலில் பல கோடி ரூபாயை இழந்தவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?'' என்று கேள்வி கேட்டு, அதற்கான பதிலையும் சொல்ல ஆரம்பித்தார் சென்னை பரசு பல் மருத்துவமனையின் மெடிக்கல் டைரக்டர் டாக்டர் யஷ்வந்த் குமார் வெங்கடராமன்!

''கோடிகளில் வர்த்தகம் செய்யும் தொழில் அதிபர் அவர். பற்கள் போய்விட்டதால் பல் செட் மாட்டியிருந்தார். தொழில் நிமித்தமானக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும்பொழுது திடீரென பல்செட் கழண்டு விழுந்து அசிங்கப்படுத்தி விடுவதாகச் சொல்லி அழுதேவிட்டார். மேலும், 'பல்செட் எப்போது கழண்டு விழுமோ?’ என்ற பயத்தினாலேயே பல கலந்துரையாடல்களையும், தொழில் ரீதியாக வரும் விருந்தினர்கள், நண்பர்களுடன் உணவருந்தச் செல்வதையும் தவிர்த்து வந்தார். இதனால், தொழிலிலும் பெரும் சரிவு! ஆபீஸ், வீடு... என்று எல்லோர் மீதும் எரிச்சல், கோபம்.... என்று மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

ஆபரேஷன் மூலம் அவரது தாடை எலும்பில் நிரந்தரமான பற்களைப் (இம்பிளான்ட்) பொருத்தினோம். இப்போது பழைய உற்சாகத்தோடு மறுபடியும் தொழிலில் வெற்றிநடை போட ஆரம்பித்துவிட்டார்!

ஈறுகள்தான் பற்களுக்கு பக்க பலமாக இருப்பவை. இந்தியாவில் நிறைய பேருக்கு பயோரியா எனப்படும் 'ஈறுநோய்’தான் அதிகமாக வருகிறது. மசாலா, ரசாயனம் கலந்த உணவுகளைச் சாப்பிடுவது, பற்களை சுத்தமாகப் பராமரிக்காததே இதற்குக் காரணம். உணவுத் துகள்கள் அனைத்தும் ஈறு-பற்களுக்கு இடையே தங்கி ஈறுநோயை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம், பல் சொத்தை என்று         அடுத்தடுத்து வரும் ஆபத்துக்களால் பற்களின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்.

காலையில் ஒரு முறை பல் துலக்கிவிட்டு அலுவலகம் செல்வோர் அதன்பிறகு இரவில்தான் வீடு திரும்புகிறார்கள். பெரும்பாலோர் இரவில் பல் துலக்குவது இல்லை. சாப்பிட்டு முடித்ததும் கட்டாயம் பல் துலக்கியாக வேண்டும். டீ, காபி... போன்ற பானங்கள் குடித்து முடித்ததும் மவுத் வாஷ் செய்துகொண்டால், கெடுதல் செய்யும் பாக்டீரியாக்கள் பற்கள் மற்றும் வாய்ப் பகுதியில் தங்காது. உப்பு கலந்த வெந்நீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால்கூட போதும். இவ்வளவும் செய்தால்கூட பற்களுக்கு இடையே உணவுத் துகள்கள் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதனை அகற்றுவதற்கு பற்களுக்கு இடையே மெழுகு தடவப்பட்ட நூலைச் செலுத்தி பக்கவாட்டில் இழுத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு 'dental floss’ என்று பெயர்.

''பற்களின் அஸ்திவாரம்... வருமானத்துக்கு ஆதாரம்!''

தூக்கத்திலேயே 'நறநற’வென சத்தம் கேட்கும் அளவுக்கு சிலர் பற்களைக் கடிப்பார்கள். அலுவலகப் பணிச் சுமைகளால் ஏற்படும் மன அழுத்தம் தூக்கத்தில் பல் கடித்தல் மூலம் வெளிப்படுகிறது. இப்படி அடிக்கடி கடித்துக் கொள்வதால், பற்கள் விரைவில் தேய்ந்து விடும்.

தாடை எலும்பு மூட்டுகளிலும் பிரச்னை ஏற்பட்டு நாளடைவில் மைகிரேன் தலைவலியை உண்டு பண்ணி விடும். தூக்கத் தில் பற்களைக் கடிப்பவர்கள் பற்களின் தேய்வைத் தடுக்க 'மவுத் கார்டு’ பொருத்திக் கொள்ளலாம். இது தற்காலிகத் தீர்வுதான். மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள உரிய மருத்துவரைச் சந்தித்து         கவுன்சலிங் பெற்றுக் கொண்டாலே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு சிகரெட் புகையில் உள்ள நிகோட்டின் போன்ற பொருட்கள் பற்களின் மீது படியும். இதனால், பற்களின் மேற்புறம் சொரசொரப்பான தன்மை ஏற்படும். கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களுக்கு வசதியாக அமைந்துவிடும். புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பதே பற்களுக்கு 50 சதவிகித பாதுகாப்பைத் தரும்.

பற்களில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துமே சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலேயே ஏற்படுகின்றன. எனவே, பற்களில் பிரச்னை வந்தால்தான் பல் மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்ற கருத்தை தூக்கி எறிந்துவிட்டு, ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொண்டு அதன்படி செயல்படுங்கள். அதுதான் பல்லுக்கும் நல்லது; உங்கள் பாக்கெட்டுக்கும் நல்லது!'' என்றார் டாக்டர் யஷ்வந்த்!

- த.கதிரவன்
படம்: கே.ராஜசேகரன்