Published:Updated:

ஆண்கள்

அலுவலகமும் ஆரோக்கியமும்!

ஆண்கள்

அலுவலகமும் ஆரோக்கியமும்!

Published:Updated:
ஆண்கள்
ஆண்கள்

'உடம்பெல்லாம் அடித்துப் போட்டமாதிரி வலிக்கிறது. அலுவலகத்திலும் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை பார்க்க முடியவில்லை. கண் எரிச்சல், கழுத்து வலி, முதுகுவலி பாடாய்ப் படுத்துகிறது’ போன்ற வேதனைக் குரல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருன்றன! விஞ்ஞான உலகில், உடல் உழைப்பையும் மிஞ்சி விட்டது மூளை உழைப்பு! பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி, நிதி நிர்வாகம்.... என்று அலுவலக வேலைகள் அனைத்தும் ரிமோட் சிஸ்டமாகிப் போனது. இப்படி ஒரே இடத்தில் ஆணியடித்தாற்போல் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு நேரும் உடல் ரீதியானப் பிரச்னைகளையும், அதனைத் தவிர்க்கும் எளிய முறைகள் குறித்தும் பேசுகிறார் பொது மருத்துவர் டாக்டர் ராமநாதன்.

 ''பணி நிமித்தமாக தினமும் எட்டு மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். கம்ப்யூட்டர் திரையின் ஒளி அளவானது கண்களை உறுத்தாமலும், அதே சமயம் அறையின் வெளிச்சத்துக்கு ஏற்பவும் மாற்றியமைத்துக் கொள்வது முக்கியமானது. கணினித் திரையின் ஒளியளவு அதிகப் பிரகாசமாகவோ அல்லது மிகக் குறைந்த ஒளியிலோ இருக்கும்போது நம் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடக் கூடும். கழுத்தை மேல் நோக்கி உயர்த்திப் பார்ப்பதோ அல்லது குனிந்து பார்க்கும் விதமாகவோ கணினித் திரையை வைத்துக் கொண்டால், விரைவில் கழுத்து எலும்புத் தேய்மானப் பிரச்னை வந்துசேரும்.

##~##

 கண்கள் வறட்சியடைந்துவிடாமல் பாதுகாக்கும் விதமாகத்தான் இமையானது அடிக்கடி மூடித் திறக்கிறது. இப்படி சிமிட்டும் ஒவ்வொரு முறையும் கண்களில் கண்ணீர் போன்ற ஈரத் தன்மை படியும். இந்த ஈரம் வழியாகத் தான் கண்ணின் கருவிழிக்குத் தேவையான ஆக்ஸிஜன் செல்கிறது. எனவே கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால், தொடர்ச்சியாக கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு வேலையின் தீவிரத்தால், இமையின் சிமிட்டல் எண்ணிக்கையானது மிகவும் குறைந்துவிடும். எனவே, கண்கள் வறட்சியடைந்து கண் எரிச்சல் உண்டாகும். இதனைத் தவிர்க்க ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை மூடிய நிலையில் நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும்.

கணினித் திரையில் மட்டுமே நமது பார்வை நிலைக்குத்தி இருப்பதால், கண் எரிச்சல், தலைவலி என்று பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்த்து கண்களுக்கு புத்துணர்வு கூட்ட '20-20-20’ என்ற ஒரு சுலபமான பயிற்சியை அவ்வப்போது செய்துகொள்ளலாம். அதாவது, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை கணினித் திரையில் இருந்து பார்வையை விலக்கி இருபது அடி தூரத்தில் உள்ள பொருட்களை இருபது நொடிகள் வரை பார்த்து கண்சிமிட்டிக்கொள்வதுதான் இந்தப் பயிற்சி.

'முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு அமர்ந்தால்தான் முதுகுவலி வராது’ என்று சிலர் அட்டென்ஷன் போஸில் அமர்ந்திருப்பார்கள். கூன் போட்டு இருப்பதைக் காட்டிலும் இப்படி 90 டிகிரி கோணத்தில் இருப்பது நல்லதுதான். ஆனாலும்கூட தொடர்ந்து இதே நிலையில் அமர்ந்திருக்கும்போது 'micro trauma’ என்ற பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, அவ்வப்போது உங்களுக்கு வசதியான நிலையில் அமர்ந்துகொள்வதில் தவறேதும் இல்லை. கட்டாயம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து காலாற நடந்துவிட்டு வந்து அமர்ந்து கொள்வது நல்ல சுறுசுறுப்பைத் தரும். அவ்வப்போது ஏ.சி. அறையில் இருந்து வெளியே சென்று இயற்கைக் காற்றை சுவாசியுங்கள்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொழுது இடுப்பும், கால் மூட்டுக்களும் சரி சம நிலையில் இருக்குமாறு அமர்வதுதான் சரியான முறை. மேலும், கால் பாதங்கள் முழுவதும் நன்கு தரையில் பதிந்து இருக்க வேண்டும். கீபோர்டும், கைகளும் சமமான நேர்க்கோட்டு நிலையில் இருந்தால் மணிக்கட்டு மற்றும் விரல் மூட்டு வலிகள் வராது.

பெரும்பாலான அலுவலகங்களில், சாப்பாட்டு அறை தனியாக இருக்கிறது. ஆனாலும்கூட சிலர் தாங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி, மேஜையிலேயே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடர்கிறார்கள். இது நல்லதல்ல. ஏனெனில், அலுவலகப் பயன்பாட்டில் இருக்கும் நாற்காலி, மேஜை, கணினி, தொலைபேசி.... போன்ற பொருட்களில் மற்ற இடங்களைக் காட்டிலும் கிருமிகளின் எண்ணிக்கையானது அதிகளவில் இருக்கும். கழிப்பறை சுவரில் ஆரம்பித்து கதவு, ஜன்னல், கைப்பிடி மற்றும் உபயோகப் பொருட்கள் வரை குடிகொண்டிருக்கும் நச்சுக் கிருமிகளுக்கு இணையாக அலுவலகப் பொருட்களிலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உண்டு. எனவே, அலுவலகப் பொருட்களை அவ்வப்போது 'கிருமி நாசினி’களைக் கொண்டு சுத்தம் செய்துகொள்வது முக்கியமானது.

எந்த வேலை செய்தாலும் முழு விருப்பத்துடன் செய்பவர்களுக்கு பிரச்னை எதுவும் வருவதில்லை. ஆனால், அலுவலக வேலையைக் கடமையாக நினைத்து செய்யும்பொழுதுதான் புதிது புதிதாக பிரச்னைகளும் உருவாகின்றன'' என்று தத்துவார்த்தமாக முடித்தார் டாக்டர் ராமநாதன்.

- த.கதிரவன்