Published:Updated:

மனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்!

மனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்!

மனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்!

மனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்!

Published:Updated:
மனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்!
மனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்!

சைக்கு அணை போட முடியுமா? எம்.சி.ஏ. முடித்து, ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பாதிக்கும் சுரேந்திரனுக்கு 'அதிகம் சம்பாதிக்க வேண்டும்’ என்று அளவிட முடியாத ஆசை. சீக்கிரத்தில் பணக்காரராக, பங்குச் சந்தைதான் சிறந்த வழி என்று தெரிந்து கொண்டார். அந்த துறை அனுபவஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்து, தெளிவான மனதுடன் பங்குச் சந்தையில் கால் பதித்தார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன பங்குகளை வாங்கி விற்று, அதில் லாபம் பார்த்ததும், நிறைய பங்குகளை வாங்கினார். ஆனால், ஒருகட்டத்தில் வாங்கிய பங்குகள் சரிந்து நஷ்டம் வந்துவிட்டது. வேலை, நண்பர்கள், பார்ட்டி என படுகுஷியாக சுழன்று கொண்டிருந்த சுரேந்திரன், இந்த இழப்பில் இருந்து மீளமுடியாமல், வேலைக்கும் செல்லாமல், யாரிடமும் பேசாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். மகனின் நிலைகண்டு மனம் வருந்திய பெற்றோர் மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்ல, தொடர் சிகிச்சையில் இப்போது தேறி வருகிறார்!

##~##

 சுரேந்திரனுக்கு மட்டுமல்ல, நிதி நிர்வாகத்தில் பணிபுரியும் பெரும்பாலான தொழில்துறையினருக்கும், இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் சகஜம்! ஆனால், எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் பக்குவம் ஒருசிலருக்கே இருக்கிறது. தோல்விகளைத் தாங்க முடியாத பலரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். சாப்பிடாமல் இருப்பது, எப்போதும் எரிச்சல், காரணமே இல்லாமல் கடிந்து கொள்ளுதல்... என தங்களைச் சார்ந்தவர்களையும் டென்ஷனில் தள்ளுகின்றனர். சோதனைகளைச் சமாளிக்கும் பக்குவத்தைக் கற்றுத் தருகிறார் பிரபல மனநல மருத்துவர் அசோகன்.

 'உளி கொண்டு செதுக்கச் செதுக்கத்தான் கருங்கல்லும் அழகான சிற்பமாகிறது. அதுபோல், நம் அனுபவப் பாடங்கள்தான் சின்னச் சின்ன பிரச்னைகளில் இருந்து நம்மை பக்குவப்பட வைக்கின்றன.  தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், திரும்பவும் அந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வதில்தான் நம் திறமை இருக்கிறது.  

பங்குச் சந்தையில் 'ரிஸ்க்’ இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.  ஒருவித நம்பிக்கையோடு அதில் நுழைபவர்கள், இழப்பு ஏற்படும் போது அதைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலைக்கு உள்ளாகிறார்கள். விளைவு, பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்ட நாள் முதல், மிகுந்த துயரத்தை மனதுக்குள் பூட்டி,  தலையில் இடி விழுந்ததுபோல் இருப்பார்கள். அதிக ஆசையும், போதிய பக்குவம் இன்மையுமே இதற்குக் காரணம்.  பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, லாபமும் கிடைக்கும், நஷ்டமும் கிடைக்கும் என்பதே உண்மை.

மைதானத்தில் விளையாடச் சென்றுவிட்டு தன்மேல் அழுக்கு, தூசு படக்கூடாது, வியர்வை வரக்கூடாது என்று நினைத்தால் அது சாத்தியமா? அழுக்குக்கும், வியர்வைக்கும் நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது விளையாடவே செல்லக்கூடாது. இதுபோலத்தான் பங்குச் சந்தையும். தோல்வியைக் கண்டு துவளாமல், அதனை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், தாராளமாக பங்குச் சந்தையில் ஈடுபடலாம்.

மனம் பக்குவப்பட்டால் பெருகும் பணம்!

பொதுவாக, வருத்தப்படக்கூடிய விஷயங்களுக்கும் ஒரு வரையறை உண்டு. உதாரணத்திற்கு, நூறு ரூபாயைத் தொலைத்து விடுகிறீர்கள். நூறு ரூபாய்க்கான பொருட்களை வாங்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாகத்தான் இருக்கும். அந்த வருத்தம் சிறிது நேரம் மட்டுமே இருக்க வேண்டும். 'போனது போய்விட்டது’ என்று அடுத்த நொடியிலேயே அந்த நூறு ரூபாயை சம்பாதிப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அதை விடுத்து, போனதை நினைத்து வருந்தினால் அது உடல்ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

மேலதிகாரி உங்களைத் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்ச நேரம் மனசு பாரமாக இருக்கும். ஒருவித பதட்டம் ஆட்கொள்ளும். மூளை வேலை செய்யாது. மற்றவர்களைப் பார்க்கும்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது’ என்ற தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். கோபம் கொப்பளிக்கும். அந்த நேரத்தில் யாரிடமும் பேசாமல், எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருங்கள். ஓரளவு இயல்பான நிலைக்கு வந்ததும், 'யார் மீது தவறு?’ என்று யோசியுங்கள். தவறு உங்கள்மீது இருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மற்றவர்கள் மீது இருந்தால், அதை நாகரிகமாக வெளிப்படுத்துங்கள். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லையெனில், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களை நன்கு அறிந்தவர்கள்,  ஏற்கெனவே இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்கலாம்.

சின்னச் சின்ன சங்கடங்களை எதிர்கொள்ளப் பழகுங்கள். அவைதான் நம்மைப் பக்குவப்படுத்தும். கடுகளவு துயரத்தையும் மனதில் புதைத்துக் கொள்ளாமல், காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பிக்கையோடு நடை போடுங்கள்!'  

- சி.காவேரி மாணிக்கம்