Published:Updated:

கண்தானம், ரத்ததானம் மட்டுமல்ல... தோல் தானமும் செய்யலாம்!

கண்தானம், ரத்ததானம் மட்டுமல்ல... தோல் தானமும் செய்யலாம்!
கண்தானம், ரத்ததானம் மட்டுமல்ல... தோல் தானமும் செய்யலாம்!

ண் தானம், ரத்ததானம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சமீப காலமாக உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வும் அதிகரித்து வருகிறது, ஆனால், தோல் தானம் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாது. மானுட உடம்பில் ரத்த நாளங்கள், இதயம், இதயத்தின் வால்வு பகுதிகள், நுரையீரல், சிறுகுடல், சிறுநீரகம், கண், தோல், எலும்பு, முதுகெலும்பு, கல்லீரல், கை என உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தானமாக அளிக்கலாம். இவற்றில், அதிக விழிப்புஉணர்வின்றி இருப்பது, தோல் தானம்தான்.

அரசு சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக ஸ்டான்லி மருத்துவமனையில், 2016-ம் ஆண்டு அழகியல் துறைத்தலைவராக இருந்த ரத்னவேலின் முயற்சியில், 'ஸ்கின் பேங்க்' அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது எப்படிச்  செயல்படுகிறது... எத்தனைப் பேர் இதனால் பயன்பட்டுள்ளனர்...  தோல்தானம் செய்வது எப்படி... 

தற்போது ஸ்கின் பேங்க் தலைவராக உள்ள மணிமேகலையைச் சந்தித்தோம்.

"தோல் தானம் என்பது, இறந்தவர்களின் உடலிலிருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்துக்குள், அவரின் உடலிலிருக்கும் தோல் எடுக்கப்படவேண்டும். ’ஸ்கின் ஹார்வெஸ்டிங்’ (Skin Harvesting) என்று இதைச் சொல்வோம். தானமாகக்  கிடைக்கும் தோலை, கெடாவரிக் ஸ்கின் (cadaveric skin) என்று சொல்வோம். 

ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்துக்குள், கிளைசரால் (Glycerol) மூலம் அந்த தோல் பாதுகாக்கப்படும். தானமாகத் தரப்படும் மற்ற உறுப்புகளில் தோலைத்தவிர மற்றவை யாவும், உடலுக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்படுபவை. தோல் மட்டும், தற்காலிகமாகப் பொருத்தப்படும். 

நோயாளிக்குத் தரப்படும் முதல்கட்ட சிகிச்சையில், ட்ரெஸ்ஸிங் செய்யும்போது மட்டுமே இந்த 'தானமாகப் பெறப்பட்ட தோல்கள்' பயன்படுத்தப்படும். அடுத்தடுத்த கட்டத்தில், ட்ரெஸ்ஸிங்கை நீக்கும்போது செயற்கையாகப் பொருத்தப்பட்ட அந்த தோல் பகுதியும் சேர்த்து நீக்கப்பட்டுவிடும். 

எப்படிச் செய்யப்படுகிறது?

இறந்தவரிடம் இருந்து தோல் எடுக்கப்பட்டு, ஆறு மணி நேரத்துக்குள் கிளைசரால் மூலம் பதப்படுத்தப்படும். பிறகு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறையில், 24 மணி நேரம் வைப்போம். தோலைச் சுத்தப்படுத்தி தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்துப் பாதுகாப்போம்.

நோயாளியின் உடலுக்கு எது பொருந்துகிறதோ அந்த தோலை மட்டும் தேவையான அளவு வெட்டி எடுத்து, காயமடைந்த சதையின் மேல் பொருத்துவோம். காயத்தின் வீரியத்தைப் பொறுத்து, சில நாள்கள் அல்லது சில வாரங்கள் வரை அந்த செயற்கைத்  தோல் காயத்தில் இருக்கும். காயத்தின் உட்பகுதி குணமடைந்தபிறகு, செயற்கைத் தோல் நீக்கப்பட்டுவிட்டு, சர்ஜரி மூலம் அவர்களின் உடலின் தொடைப்பகுதி அல்லது இடுப்புப் பகுதியிலிருக்கும் கூடுதல் சதைகளையே எடுத்து பொருத்தி, முற்றிலுமாக சரிசெய்யப்படும். 

நன்மைகள்:

* தானமாகப் பெறப்படும் தோல், தற்காலிகமாகச் செயல்படுத்தப்படும் ட்ரெஸ்ஸிங் வகைதான். இவ்வகை தோலைப் பொருத்தாவிட்டாலும் பாதிப்பு சரியாகும். அப்படிச் சரியாகும்பட்சத்தில், இழந்த சதையை சரிசெய்ய மீண்டும் அப்பகுதியில் தோல் பொறுத்தப்பட வேண்டியிருக்கும். அதற்கு நோயாளியின் உடலைச் சேர்ந்த தோல் பகுதியே பயன்படுத்தப்படும். சில நேரங்களில், நோயாளியின் தோல் அவருக்கே பொருந்தாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஆனால், தற்காலிகத்  தோல் பொருத்திய பின்னர் சர்ஜரி மூலம் சொந்தத் தோலைப் பயன்படுத்தினால், அவை பொருந்தாமல்போக வாய்ப்பில்லை.

* தோலின் உள்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு விரைந்து சரியாகும். உதாரணமாக, முன்று வாரத்தில் சரியாகும் பிரச்னை பத்து நாள்களில் சரியாகிவிடும். 

* காயத்தின் உள்ளே தொற்றுப்பாதிப்புகள் ஏற்படாது.

இவர்கள் மட்டுமே தானமளிக்கலாம்! 

தோல் தானம் தருபவர் ஹெச்.ஐ.வி, மஞ்சள்காமாலை, ஒவ்வாமைப் பிரச்னைகள் போன்றவை இல்லாதவராக இருக்கவேண்டும். இந்த பரிசோதனைகள் யாவும், தானமளிப்பவர் அதற்கான அடையாள அட்டையை வாங்கும்போதே செய்யப்பட்டிருக்கும். 18 - 60  வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே தோல் தானம் அளிக்க முடியும். மற்ற உறுப்புகளைப் பொறுத்தவரை, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து மட்டுமே எடுக்கப்படும். இதில் அப்படி எந்த வரைமுறையுமில்லை. இறந்து ஆறு மணி நேரத்துக்குள் பெறப்படும் தோல் அனைத்தும் பதப்படுத்தப்பட்டு அதிகபட்சம் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை உபயோகப்படுத்தலாம். 

யாருக்கெல்லாம் தோல்தானம் பயன்படும்?

* தீக்காயம் அல்லது விபத்து காரணமாக தோலின் மேற்பரப்பை இழந்தவர்களுக்கு (Degloving injury)

* புண் ஏற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு  (Diabetic Ulcer)

* லெப்ரோசி அல்சரால் (leprosy ulcer) பாதிக்கப்பட்டவர்களுக்கு

* வேஸ்குலேட்டிக் அல்சர் உள்ளவர்களுக்கு 

* உடலில் கொப்பளங்கள், மரு போன்றவை இருந்து அது உடைந்திருந்தால் அந்த இடத்தில் உபயோகப்படுத்தலாம். 

கடந்த இரண்டு ஆண்டுகளில், 41 பேர் தானமளித்துள்ளனர். 35 பேர் தானம் பெற்றுள்ளனர். 

ஸ்டான்லி மருத்துவமனை அழகியல் துறையில் செய்யப்படும் சிகிச்சைகள்...

மரு அல்லது மச்சம் இருந்தால் அதை நீக்குவது, 

இளநரை பிரச்னை, 

டாட்டூவை நீக்க விரும்புபவர்களுக்கான லேசர் ட்ரீட்மென்ட், 

உடலின் தேவையில்லாத பகுதியில் முடி வளர்ந்தால் அவற்றை நீக்குவது, 

ஹேர் ட்ரான்ஸ்ப்ளேண்ட் சிகிச்சை"