Published:Updated:

நுரையீரல் நோய் நீக்கும் பவழம், இரைப்பு நோய் நீக்கும் முத்து... தீராநோய்களைத் தீர்க்கும் கடல்தரு மருந்துகள்!

நுரையீரல் நோய் நீக்கும் பவழம், இரைப்பு நோய் நீக்கும் முத்து... தீராநோய்களைத் தீர்க்கும் கடல்தரு மருந்துகள்!

நுரையீரல் நோய் நீக்கும் பவழம், இரைப்பு நோய் நீக்கும் முத்து... தீராநோய்களைத் தீர்க்கும் கடல்தரு மருந்துகள்!
நுரையீரல் நோய் நீக்கும் பவழம், இரைப்பு நோய் நீக்கும் முத்து... தீராநோய்களைத் தீர்க்கும் கடல்தரு மருந்துகள்!

``கருமேக மாலை நேரம்...
இதமான உப்புக் காற்று...
வருணன் மண்ணைத்
தீண்டலாமா என
யோசிக்கும் தருணம்! 
வெண்மதியின் 
இருள் கலந்த வெளிச்சம்!
மழலைக் குரலில் அலைகள் நம்மை அழைக்கும்....”

இச்சூழல் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். ஒருவரின் மனம் நிறைந்த மகிழ்வையும் மனத்துன்பங்களையும் பகிரும் இடமாகவே நெய்தல் நிலத்துக் கரைகள் இருக்கின்றன.

இந்த நிலம் பல உயிர்களுக்கும் நீருழவர்களுக்கும், வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கொடுத்து வளர்த்து வருகிறது. அந்த வகையில் நெய்தல் நிலம் சித்த மருத்துவத்துக்கும் தனது உயிர்வளங்களைத் தந்து வளர்க்கிறது. இந்நிலம் சார்ந்த உயிர்கள் நம் விழிகளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகைகளில் சித்த மருந்துகள் செய்ய பயன்படுகின்றன.

கடல் படு திரவியங்கள் ஐந்தும் சித்த மருத்துவத்துக்கு மருந்துகளைத் தந்து பல்வேறு தீவிர நோய்களைக் கட்டுப்படுத்தவும் தீர்க்கவும் பயன்படுகிறது. அதை,

`ஓர்கோலை சங்கமொளிர் பவழம்வெண் முத்த நீர்படு முப்பினோடைந்து'
என்ற வரிகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பவழம், முத்து, சங்கு, உப்பு, ஓர்க்கோலை உள்ளிட்ட அனைத்துக் கடல்படு திரவியங்கள் தகுந்தமுறையில் சுத்தம் செய்யப்பட்டு (purification process) அவற்றைக் கொண்டு மருந்துகள் தயாரித்து நோய்க்கு ஏற்றபடி குறிப்பிடத் தகுந்த அளவு அனுபானம் மற்றும் துணைமருந்துகளுடன் சித்த மருத்துவர்களால் வழங்கப்படுகிறது.

பவழம் (Coral) 

கடல் படு திரவியங்கள் ஐந்தில் ஒன்று பவழம். கடலில் வாழும் ஒருவகை நுண்ணுயிரியின் புறக்கூடே பவழம் எனப்படுகிறது. இந்தப் பவழங்கள் பொதுவாக மத்திய தரைக்கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

`உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக் காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு...'

என்ற வைரமுத்துவின் வரிகளை மாற்றும்விதமாக அனைத்து சுவாசம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குப் பவழத்தால் செய்த சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவை நுரையீரலை வலுப்படுத்தி இருமல், வறட்டு இருமல், அதீதக் கபம், மேகச்சூடு, உடல்காங்கை, நீர்க்கடுப்பு போன்றவற்றைத் தீர்க்கும். 5 முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு வரக்கூடிய சுவாசகாச (இரைப்பு) நோய்களுக்கு பவழத்தால் செய்த பற்பம் பயன்படுகிறது. அது மட்டுமன்றி நாள்பட்ட மூட்டு வலிகளுக்கும் கால்சியம் பற்றாக்குறை காரணமாக முதியோருக்கு ஏற்படும் எலும்புத் தேய்மான நோய்களுக்கும் பற்பங்களாகவும், மாத்திரைகளாகவும் அனுபானங்களுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

பலகறை - சோழி (Cowry)

பலரது வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது பலகறை. ஜோதிடர்கள், சிறு கட்டத்தை வரைந்து அதில் பலகறையை உருட்டி குறி சொல்வார்கள். இது பொதுவாக வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதில் வெண்ணிற பலகறையே சிறந்தது. அதுதான் மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. கைப்புச் சுவை உடையது. சித்தர்கள் கூற்றின்படி சித்த மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. இதன்மூலம் செய்யப்பட்ட பற்பமும், பற்ப மாத்திரைகளும் நாள்பட்ட தோல் நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. பல்வகை நஞ்சு முறிவுகளுக்கும் காயங்களைக் குணப்படுத்தவும் பலகறை பற்பம் பயன்படுகிறது. நாள்பட்ட காயங்களுக்கு மத்தன் தைலத்துடன், பலகறை பற்பம் சேர்த்துக் கட்டினால் காயங்கள் விரைவில் ஆறும்.


முத்து (Pearl) 

முத்து என்றவுடன் நம் நினைவில் வருவது முத்து நகரான தூத்துக்குடி (Pearl city). நவமணிகள் மற்றும் கடல்படுதிரவியங்களில் ஒன்றான முத்து பல்வேறு வகையான சித்த மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. சிப்பிகளிலிருந்து பெறப்படும் வெண்ணிற முத்துகள் நகைகள் செய்வதற்கு மட்டுமல்லாமல் மருந்துகள் செய்யவும் பயன்படும். அதன் பயனை அறிந்த நம் சித்தர்கள் அதற்கான சுத்தி முறைகளுடன் அதைத் தகுந்த அளவுடன் அதற்கான துணைமருந்துகளுடன் சேர்த்துக் கொடுத்தனர். இதனால் பல்வேறு நோய்களைப்  போக்கியுள்ளனர். இது சுவாசகாச (இரைப்பு), இருமல், ஈளை நோய்களைப் போக்குவதுடன் கடவுளின் குழந்தைகளாகக் கருதப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு நரம்புகளை வலுப்படுத்தி அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. வயதானோருக்குக் கண் விழிகளில் ஏற்படும் பிரச்னைகளை வெகுவாகக் குறைத்து பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது. முத்து ராசிக் கல்லாகவும் ஆபரணப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டாலும், அதிக மருத்துவக் குணம் நிறைந்தது என்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.


கிளிஞ்சல் (Common Oyster Shell)

கிளிஞ்சலில் சிறு கிளிஞ்சல், பெருங்கிளிஞ்சல் என இரண்டு வகைகள் உள்ளன. இதன் சுத்தி முறைகளையும் பயனையும் திருமூலர் திருமந்திரச் செய்யுளில் கூறியுள்ளார். கிளிஞ்சலைக் கொண்டு செய்யப்படும் கிளிஞ்சல் மெழுகை கால் வெடிப்புகளில் பூசினால் பிரச்னை தீரும்.


சங்கு (Conch shell)

தேவதத்தம் என்னும் வேறு பெயரைக்கொண்ட சங்கு பொதுவாக நெய்தல்கரை ஓரங்களில் அதிகமாகக் கிடைக்கிறது. சங்கில் பல வகை இருந்தாலும் அதில் ஊது சங்கே மருத்துவத்துக்குப் பயன்படும். இதன் மூலம் செய்யப்படும் பற்பம் தும்மல், மூர்ச்சை, இருமல், மூலம், தொண்டையின் உள்பகுதியில் உள்நாக்கு (enlarged tonsils), மார்பு வலி, குன்மம், நீர்ச்சுருக்கு ஆகியவற்றுக்குத் தகுந்த அளவில் துணைமருந்துகளுடன் கொடுக்கத் தீரும்.

நண்டு (Crab)

கடல் நண்டு, வயல் நண்டு என இருவகை உண்டு. சித்த மருத்துவக்கூற்றின்படி கடல் நண்டுகளைவிட வயல் நண்டே உயர்வானது எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கடற்பரப்புகளிலும் தனித்தனி நண்டு இன வகைகள் வாழும்.
வயல் நண்டு வாதக்கடுப்பு மற்றும் கப நோய்களைப் போக்கும்.
கடல் நண்டு வாதநோய், கரப்பான் ஆகியவற்றைப் போக்கும்.

மீன்கள் (Fishes)

சுறா: உடலில் தங்கியுள்ள கிருமிகள் விலகும். சகல நோய்களுக்கும் இதைக் கொடுத்தால் சரியாகும்.
திருக்கை: இதன் இறைச்சி சாப்பிடுவதால் தாம்பத்தியம் சிறக்கும். சோகை நோய்கள் மற்றும் பித்த நோய்கள் தீரும்.
ஆச்சி செய்யும் தேங்காய்ப் பால் மீன் வறுவல், சின்ன வெங்காய மீன் குழம்பைச் சாப்பிட தட்கல் டிக்கெட் புக் செய்து ஊர் வரை சென்று சாப்பிட்டு வரலாம்.

புரட்டாசி மாதத்தில் இது என்ன பேச்சு என்று பலரது மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

கோவிந்தா...கோவிந்தா...

நம் நாட்டு நெய்தல் நிலங்கள் பற்றியும் அவற்றின் சூழலியல் பற்றியும் நீருழவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறிந்து கொள்ள... மருந்தீசனை (திருவான்மியூர்)வணங்கி ஆரம்பித்து தமிழ் ஈசனை (குமரி-வள்ளுவ பெருமகனார்) காணும் வரை செல்ல வேண்டும். அதாவது கிழக்குக் கடற்கரைச் சாலையைத் தவிர்த்து தமிழகத்தில் நெய்தல் திணை பற்றிய புரிதல் நமக்குக் கிடைக்காது. அதில் பயணித்தவர்களுக்கு மட்டுமே அந்தக் கிராமங்களின் வாழ்க்கையும் அவர்களின் வாழ்விடங்கள் பற்றியும் தெரியும்.

இயற்கையின் அழகுடன் இருக்கும் பேரலை நிறைந்த கடலுடன் யுத்தம் செய்யும் நீருழவனுக்குத்தான் அதன் அழகும் ஆபத்தும் தெரியும்.
இதை உங்களின் உயிர்களுக்கு எடுத்துக்கூறி அவற்றின் மீது புரிதலை ஏற்படுத்துங்கள். இதற்கு அடுத்த தலைமுறையை தயார் செய்யும் கடமை இன்றைய தலைமுறை பெரியோருக்கு உள்ளது.

நீர் இன்றி அமையாது உலகு - அதுபோல (கடல்)நீர் இன்றி அமையாது இம்மருத்துவ உயிர்கள்.