Published:Updated:

``குழந்தைகளைக் குறி வைக்கும் மருந்து நிறுவனங்கள்!” - ஒரு மருந்து நிறுவன அதிபரின் ஒப்புதல் வாக்குமூலம்

``குழந்தைகளைக் குறி வைக்கும் மருந்து நிறுவனங்கள்!” - ஒரு மருந்து நிறுவன அதிபரின் ஒப்புதல் வாக்குமூலம்
``குழந்தைகளைக் குறி வைக்கும் மருந்து நிறுவனங்கள்!” - ஒரு மருந்து நிறுவன அதிபரின் ஒப்புதல் வாக்குமூலம்

``குழந்தைகளைக் குறி வைக்கும் மருந்து நிறுவனங்கள்” - ஒரு மருந்து நிறுவன அதிபரின் ஒப்புதல் வாக்குமூலம்!

ணம், பணம், பணம்... இதற்காக மட்டுமே மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், எப்படி மக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடைப்பிணங்களாக மாற்றுகிறார்கள் அல்லது கொன்று குவிக்கிறார்கள் என்பதை ஒரு பொது மேடையில் தோலுரித்துக் காட்டியுள்ளார், டாக்டர். ஜான் ரென்ஜென் விரபென். 

ஸ்வீடன் நாட்டில் உலக அளவில் புகழ்பெற்ற பன்னாட்டு மருந்து நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு அங்கிருந்து வெளியேறி சொந்தமாக ஒரு மருந்து நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர், ஜான் ரென்ஜென் விரபென். இவர், பல மருந்து நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். 

``35 ஆண்டுகள் மருந்து நிறுவனத்தில் பணி புரிந்து நான் எதுவும் செய்யவில்லை. இந்த மருந்து நிறுவனங்களும் மக்களைக் கொன்று குவித்ததைத் தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. இப்படிப்பட்ட மருந்து நிறுவனங்களின் மருந்து, மாத்திரைகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை... உலகின் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகம்" என அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார், ஜான். 

அம்மேடையில் ஜான் ஆற்றிய உரையின் சாராம்சம் இங்கே... 

``மருந்து நிறுவன அதிபர்கள் மக்களை அழிக்கிறார்கள். அப்படி அழிப்பதற்கு ஒரே காரணம், பணம். வருமானம் ஈட்டுவது மட்டுமேதான் அவர்களது குறிக்கோள். அவர்களுக்கு மக்களைப் பற்றிக் கவலையே இல்லை. அவர்களது குறிக்கோள் மக்களின் `மணி பர்ஸ்'தான். 

இன்று, என் கையில் அழிக்க முடியாத கறை படிந்துள்ளது. என் வாழ்க்கையின் தொடக்கத்தில் மருந்து விற்பனைத் தொழில் எனக்கு நல்ல வருமானத்தை வழங்கியது. என்னுடைய சிறப்பான செயல்பாடுகள், என்னை ஸ்வீடனில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருந்து நிறுவனத்தின் இயக்குநர் அளவுக்கு உயர்த்தின. ஆனால், அந்த நிறுவனம் தீய சக்தியாக இருந்தது. நானும் அதன் ஓர் அங்கமானேன். நான் நிறைய கெட்ட காரியங்களைச் செய்தேன். சில மருந்துகளைப் பதிவு செய்ய, நான் ஸ்வீடன் அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்தேன். 

ஸ்வீடன் நாட்டின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. ஸ்வீடன் உலகின் அதிக ஆற்றல் மிக்க நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, அது ஒரு மிகத் தூய்மையான, ஊழலற்ற, வெளிப்படைத்தன்மை நிறைந்த நாடு. மருத்துவத் துறையில் அவர்கள் மிகவும் பிரபலமடைந்தவர்கள். அவர்கள் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வழங்குபவர்கள். அந்நாட்டில் பதிவு செய்யாமல் எந்த ஒரு மருந்தையும் விற்பனை செய்ய முடியாது. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனம், தான் உற்பத்தி செய்த மனத்தளர்ச்சி தொடர்புடைய நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளை ஸ்வீடன் நாட்டில் விற்பனை செய்ய அதன் மருந்துகளைப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. மருந்து உற்பத்தி தொழில், உலகின் மிக சக்தி வாய்ந்த தொழில். மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தொடர்பு உடையவை. தங்களுக்கு தேவையானதைப் பெற மருந்து உற்பத்தியாளர்கள், எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கிப் போவார்கள். அவர்களிடம் ஏராளமான பணம் உண்டு. அவர்கள், பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி பணம் பண்ணுகிறார்கள். அப்படிப் பல வேலைகளைச் செய்ய முயன்ற அந்தப் பன்னாட்டு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அது வெளிவரவேயில்லை. அதை, பத்திரிகைகளும் ஊடகங்களும் மூடி மறைத்துவிட்டன. சில நேரங்களில், பத்திரிகைகளும், அரசாங்கத்தைப் போலவே மருந்து நிறுவனங்களுடனும் இணைந்துதான் இயங்குகின்றன. மருந்து நிறுவனங்கள், தங்களின் இழிவான செய்கைகளை மறைக்க ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. 

மருந்துத் தொழில் மிகவும் தேவையான ஒன்றுதான். உலகில், இன்றும் அதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை உபயோகமற்ற குப்பைகள்தாம். மக்களின் நோய்களைக் குணப்படுத்துவதில் மருந்து நிறுவன அதிபர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், நோய்களை உண்டாக்குவதில் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அறிகுறிகளையே நோயாகச் சித்திரித்து அதற்குச்  சிகிச்சை அளிக்க முற்படுகிறார்கள். அவர்கள் தொற்றும் நோய்களைப் பற்றி கவலையே படுவதில்லை. அவர்களின் முக்கிய இலக்கு... நீரிழிவு, இதய நோய், பார்கின்சன், வாத நோய் போன்றவற்றால் பீடிக்கப்பட்ட நோயாளிகள்தாம். மக்கள் நீண்ட நாள்கள் நோயாளிகளாகவே உயிர் வாழ வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசை. அதாவது, மக்கள் சாகும்வரை தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். மக்களைக் குணப்படுத்துவது அவர்களின் நோக்கமல்ல. 

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நரம்பியல் சிகிச்சைக்குப் பயன்படும் ஒரு மருந்து பற்றி என் புத்தகத்தில் எழுதியிருந்தேன். `அந்த மருந்தை உட்கொண்டால், நல்ல தூக்கம் வரும். வயதானவர்களுக்கு மிகவும் பயன்படும்' என்று அது மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது. இரவில் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் உறங்கலாம் என்று சொன்ன மருந்து தயாரிப்பு நிறுவனம், அதன் பக்க விளைவுகள் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை. ஆராய்ந்து பார்த்தால், அந்த மருந்தின் பக்க விளைவுகள், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தன. அவை இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் பிரச்னைகளை உருவாக்கக் கூடியவையாக இருந்தன. அதன் காரணமாக இறப்புகூட நேரிடலாம். இந்த விஷயங்களை அந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் மறைத்து அதன் பலன்களை மட்டும் விளம்பரப்படுத்தியது. இப்படிப்பட்ட மருந்துகள் சட்டபூர்வமாக்கப்படும்போது... அதன் மூலம் அதிக அளவிலான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஒரு மருந்து நிறுவனம் சட்டப்படி மருந்துகளின் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தச் சட்ட விதியைப் பயன்படுத்தித்தான் மருந்து நிறுவனங்கள் கோலோச்சுகின்றன. 

டாக்டர்கள் சொல்வதை அப்படியே நம்பாதீர்கள். பல மருத்துவர்களுக்கு மருந்துக் கூறுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே பெரும்பாலான டாக்டர்களின் நோக்கமாக உள்ளது. டாக்டர்களின் இந்த ஆசையைப் பயன்படுத்தி, மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், டாக்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்றன. மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைக்கூட மருந்து நிறுவனங்கள் விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தி விடுகின்றன 

டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள்தான், விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் மருந்து குறித்த தொழில் நுட்பத் தகவல்களைத் தருகின்றன. ஆனால், விற்பனைப் பிரதிநிதிகளுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. `பக்க விளைவுகள் பற்றி எப்போதும் மூச்சு விடக் கூடாது' என்பது முக்கியமான கட்டுப்பாடு. மருந்து நிறுவன விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றிய எனக்கு அது குறித்து நன்றாகவே தெரியும். 

ஒரு விற்பனை பிரதிநிதி, மூன்று விஷயங்கள் குறித்து மட்டுமே மருத்துவரிடம் விளக்க முடியும். அவை FAB - Features. Advantages and benefits - எனப்படும். மருந்தின் அம்சங்கள், சாதகங்கள், மற்றும் நன்மைகள். வேறு எந்த விஷயத்தையும் பேச முடியாது" என்ற ஜான் நிறைவாக, 

``உளவியல் தொடர்பான நோய்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளால்தான் அதிக அளவு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான மனநல மருத்துவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். புதிய புதிய நோய்களை அறிமுகப்படுத்தி அவர்கள் குழந்தைகளைத்தான் குறி வைக்கிறார்கள். ADHD, ADHS என்பவை ஒரு சிண்ட்ரோம். அவற்றைச் சிறிய கோளாறு என்றும் சொல்லலாம். ஆனால், மருந்து நிறுவனங்களும் மன நல மருத்துவர்களும் இவற்றைக் கோளாறு என்ற கோணத்தில் பார்க்காமல், ஒரு நோயாக உருவாக்கி விடுகிறார்கள். இவர்களிடமிருந்து எதிர் காலச் சந்ததியரை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்பதுதான் நமது முக்கியப் பிரச்னை" என்று தன் உரையை முடிக்கிறார்.

மொழியாக்கம்: கே.ராஜு

அடுத்த கட்டுரைக்கு