Published:Updated:

நீங்கள் வாங்கும் இனிப்புகள் ஆரோக்கியமானவை தானா? - ஓர் எச்சரிக்கை!

நீங்கள் வாங்கும் இனிப்புகள் ஆரோக்கியமானவை தானா? - ஓர் எச்சரிக்கை!
நீங்கள் வாங்கும் இனிப்புகள் ஆரோக்கியமானவை தானா? - ஓர் எச்சரிக்கை!

நீங்கள் வாங்கும் இனிப்புகள் ஆரோக்கியமானவை தானா? - ஓர் எச்சரிக்கை!

ந்தத் தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் இனிப்புகள் வாங்கலாம், எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் வாங்கிக் கொடுக்கும் டப்பாக்களின் உள்ளே விலையுயர்ந்த மோதி லட்டு, மைசூர் பா, ஜாங்கிரி, குலோப் ஜாமூன் தொடங்கி வாயில் நுழையாத பெயர்களைக் கொண்ட வண்ண வண்ண இனிப்புகள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் தொடங்கி பல கொடிய நோய்கள் பல வண்ணங்களைப் பூசிக்கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

தீபாவளிக்கு முன்பாகவே அரிசியை ஊற வைத்து, காயப்போட்டு, இடித்து, திரித்து முறுக்கு, அதிரசம், மிக்சர் என அனைத்தையும் வீட்டிலேயே தயாரித்து, உண்டு மகிழ்ந்த தலைமுறை முடிவுக்கு வந்துவிட்டது. தீபாவளியன்று எவ்வளவு இனிப்புகளைச் சாப்பிட்டாலும், அதற்குப் பின்னால் இருந்த உடல் உழைப்பின் காரணமாக, எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. உடல் உழைப்பைச் செலவழிக்கும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் நம் வாழ்க்கையில் ஏராளம் இருந்தன. ஆனால், இன்று ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரும் உணவையும் இனிப்புகளையும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, மாலையில் டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் முடிந்துவிடுகிறது தீபாவளி. சாப்பிட்ட உணவைக் கூட ஜீரணிக்க மருந்து, மாத்திரைகளைத் தேடும் நிலை உருவாகிவிட்டது.

போதிய உடலுழைப்பு இல்லாததாலும், உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை  மாற்றங்களாலும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய ரத்தநாள நோய்கள், புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று வந்தால் கூடவே மற்றொன்றும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 

தொற்றா நோய்களுக்கான பொதுவான காரணிகள், புகைப்பழக்கம், மது அருந்துதல், மாறிய உணவுப்பழக்கம், உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவைதாம். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் குறிப்பிட்ட சதவிகிதத்தினரிடம் மட்டுமே காணப்படுகிறது. அதனால் பாதிப்புகளும் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு மட்டுமே. ஆனால், உணவை யாரும் தவிர்க்க முடியாது. உணவு ஆரோக்கியமானதாக இல்லாமல் நச்சுகளைக் கொண்டிருந்தால் அதன் பாதிப்பிலிருந்து ஒருவர்கூடத் தப்பிக்கமுடியாது. 

இது தொடர்பாக புற்றுநோய்க்கெதிரான செயற்பாட்டாளரும் புற்றுநோய் நிபுணருமான இ.விதுபாலா விரிவாகப் பேசினார்:
``உடல்நலத்துக்குப் பாதிப்பை விளைவிக்கும் துரித உணவகங்கள், நொறுக்குத்தீனிக் கடைகள், இனிப்புக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், கிராமங்களில் உள்ள பெட்டிக் கடைகளில்கூட பதப்படுத்தப்பட்ட, நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகள், இனிப்புகள், நொறுக்குத்தீனிகள் எளிதாகக் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஆர்டெர் செய்து வீட்டுக்கே கொண்டு வந்து உணவுகளைக் கொடுக்கும் கலாசாரம் இதற்கு மேலும் வலுசேர்க்கிறது.

இன்று 365 நாளும் தீபாவளியாகத்தான் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ஒரு ஸ்வீட் பாக்ஸ் வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறது. `பைனாப்பிள் ஃபிளேவர் கேக்' என்று நாம் வாங்கும் கேக்கில் இருப்பது அன்னாசிப் பழச்சாறு அல்ல, அதே நிறத்தையும் மணத்தையும் கொடுக்கக்கூடிய ரசாயனம். லட்டின் ஆரஞ்சு நிறம் கூட ரசாயனம்தான். நாம் சாப்பிடும் இனிப்புகள் அனைத்திலுமே உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் நிறைந்திருக்கின்றன.

அந்த இனிப்புகளில் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் மட்டுமன்றி அவை நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், பூச்சிகள், நுண்ணுயிரிகள் வந்துவிடாமல் இருப்பதற்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் கலக்கப்படுகின்றன. இனிப்புகள் பெரும்பாலும் மைதா மாவிலும், கடலை மாவிலும்தான் செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் கலந்து சாப்பிடும்போது, தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் ஏற்படுகிறது. சர்க்கரை நோய், இதயநோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை என அனைத்துத் தொற்றா நோய்களுக்கும் உடல்பருமன் வழிவகுக்கும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேர் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரில் 35 சதவிகிதம் பேர் தொற்றா நோய்களுக்காகவே சிகிச்சை பெற்றுள்ளனர்.

தொற்றா நோய்களின் இதே நிலை நீடித்தால் 2030- ம் ஆண்டுக்குள் இந்தியா 4,59,000 கோடி அமெரிக்க டாலர்களை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

நமது நாட்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உணவில் இவ்வளவு அளவு ரசாயனங்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கான அனுமதியை அளிக்கும் சட்டம்தான் அது. எவ்வளவு ரசாயனங்களை நமது உடல் கிரகிக்கும் என்பதன் அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது. சில நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட, அடைத்து வைக்கப்பட்ட உணவுகளில் லேபிள் இருக்கும். அதன் மூலம் அந்த உணவில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனங்களின் விவரங்களை அறிந்துகொள்ளமுடியும். ஆனால் நமக்குப் பிடித்தமான கடைகளில் வாங்கும் லட்டு, ஜிலேபியை அடைத்து வைத்துத் தரும் டப்பாக்களில் ஏதாவது லேபிள் இருப்பதைப் பார்த்திருக்கிறோமா? அப்படியே வாங்கிச் சாப்பிட்டு விடுகிறோம். கேள்வியே எழுவதில்லை.

பதப்படுத்தி, அடைத்து வைக்கப்பட்டுள்ள இனிப்புகள், உணவுகளின் லேபிளில் `இ நம்பர்' என்று குறிப்பிட்டு சில எண்கள் இடம்பெற்றிருக்கும். அந்த எண்களின் அடிப்படையில் அதில் என்னென்ன ரசாயனங்கள், சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கணக்கிடப்படும். ஆனால், அந்த எழுத்து பெரும்பாலும் கண்ணுக்கே தெரியாது. அதைப் பார்த்தாலும், அது எதற்கான எண் என்றும் பொதுமக்களுக்குத் தெரியாது. சில லேபிள்களில் `இயற்கையான ரசாயனங்கள்' என்று குறிப்பிடப்படுகிறது. அதற்கு `இயற்கையான சுவைக்கு ஈடான செயற்கை ரசாயனங்கள்' என்று அர்த்தம். ரசாயனங்களைத் தாண்டி, அந்த இனிப்புகளில் சேர்க்கப்படும் எண்ணெய், வெள்ளைச் சர்க்கரை போன்றவையும் ஆபத்தானவைதாம்.

இவ்வளவு தீமைகளையும் ஏற்படுத்தும் இனிப்புகளை உறவினர்களுக்கு வழங்க வேண்டுமா? ஆரோக்கியத்தை வழங்க வேண்டுமா? என்று நீங்களே முடிவு செய்யுங்கள்" என்கிறார் அவர்.

உறவினர்களுக்குக் கொடுப்பது என்றால், முடிந்தவரை வீட்டிலேயே தயாரிக்க முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் உங்களுக்கு நம்பிக்கையான, சுகாதார முறையில், செயற்கையான பொருள்கள் எதையும் சேர்க்காமல் தயாரிக்கும் இடங்களில் இனிப்புகளை தயாரிக்கச் சொல்லி வாங்குங்கள். இயற்கையான நிறங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில் கேசரியைச் சாப்பிடக் கற்றுக்கொள்ளுங்கள்.  

இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கூடுமான வரை இனிப்புகளைத் தவிர்த்துவிட்டு, பழங்களைக் கையிலெடுங்கள். 

அடுத்த கட்டுரைக்கு