
பாலகிருஷ்ணன், ஆடியாலஜி நிபுணர்
“ங்ஙோஙாஜூ...” “கா..க்..ட்ட்...டாடா...” என்பன போன்ற சத்தங்களோடு அந்தச் சிறுமி சைகையில் ஏதோ

சொன்னாள்.
“அவளுக்குப் படிச்சு பெரிய டாக்டரா வரணுமாம். அதான் அவளுடைய ஆசைன்னு சொல்றா...” என்று அந்த மொழியை நமக்கு விளக்கினார் அங்கிருந்த ஆசிரியை. அது, கோவை மாவட்டத்தில் இருக்கும் வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளி .
“வாய் பேச முடியாததைக் கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், காது கேட்க முடியாது என்றால் அது ரொம்பவே கஷ்டமான விஷயமல்லவா? காற்றின் சத்தத்தை, நல்ல இசையைக்கூடக் கேட்க முடியாது. எந்நேரமும் ஒருவித நிசப்தத்திலேயே அவர்கள் இருக்க வேண்டுமல்லவா?” என்று பரிதாபப்பட்டுச் சொன்னேன்.
“இந்த உலகின் இரைச்சல்களையும் அவர்கள் கேட்பதில்லை...” என்று சொல்லி சில நொடி மெளனத்துக்குப் பின் மீண்டும் தொடர்ந்தார்.

“இந்தக் குழந்தைகளின் கவனத்திறன் நம்மைவிடப் பலமடங்கு அதிகம். இன்றைக்கு இருக்கும் சராசரிக் குழந்தைகளின் படிப்பு பாதிப்படைவதற்கு, அவர்களின் கவனத்திறன் குறைவதற்கு, அவர்கள் அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கு, இன்னும் பல உடல் பிரச்னைகளைச் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் சத்தம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் அதிகம் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியது ஒலிமாசில் சிக்கித் தவிக்கும் அந்தக் குழந்தைகளைப் பற்றித்தான்” என்று சின்ன சிரிப்போடு சொல்லிவிட்டு நகர்ந்தார். ஆம். நல்ல செவித்திறன் படைத்து ஒலிமாசில் சிக்கித் தவித்து, ஆனால் அது குறித்த எந்த விழிப்பு உணர்வும் இல்லாமல் இருக்கும் நாம் தான் பரிதாபத்திற்குரியவர்கள்.
ஒலிமாசு... நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத பெரும் கேடு.
சுவாசிப்பதைப் போலவே ஒலியை வாழ்வின் எந்த நேரமும் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். இயற்கையாக நம்முடைய காதுகளால் குறிப்பிட்ட அளவிலான ஒலியைக் கேட்க முடியும். அந்த அளவைத் தாண்டிய ஒலி நமக்கு ‘மாசாக’ மாறுகிறது. ஒலிமாசின் வரலாற்று விதை இரண்டு இடங்களிலிருந்து தொடங்குகிறது. தொழிற்புரட்சி (Industrial Revolution) ஏற்பட்டு உலகம் முழுக்கப் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதில் வேலை செய்த பலருக்கும் காது கேட்கும் திறனில் பிரச்னை ஏற்பட்டது. அதேபோல், நகர்மயமாக்கல் (Urbanisation). ஏற்படுத்திய ஒலிமாசு உலகம் முழுக்கப் பல பெரும் கேடுகளை ஏற்படுத்தியது.

1962ல் ஆராய்ச்சியாளர்கள் ரொசென் (Rosen) மற்றும் ஒலின் (Olin) ஒலி மாசு குறித்த ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அதில் தென்கிழக்கு சூடானில் வாழும் ‘மபான்’ (Mabaan) எனும் பழங்குடிகளின் செவித்திறனை ஆராய்ந்தார்கள். இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே, மிகத் துல்லியமான செவித்திறன் கொண்டவர்கள் மபான் இனம்தான். அவர்களின் செவித்திறனோடு அமெரிக்காவின் தொழிற்சாலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் செவித்திறனை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதில் மிகப் பெரியளவில் வேற்றுமை இருந்ததைக் கண்டறிந்தனர். மபான் இனத்தில் 70 வயதானவர்கூட மிகத் துல்லியமான செவித்திறன் கொண்டிருந்தார். அமெரிக்காவில் 10 வயதான குழந்தையின் செவித்திறன்கூட ஒலிமாசினால் பாதிக்கப்பட்டிருந்தது. இப்படியாகத் தொடங்கிய ஒலிமாசு இன்றைய 21ம் நூற்றாண்டில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ஒலிமாசின் காரணங்கள் என்ன?
ஒலிமாசு என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் அதீதச் சத்தம் ‘தொழிற்சாலை ஒலிமாசு’ (Industrial Noise) என்று சொல்லப்படுகிறது. வாகனச் சத்தங்களில் தொடங்கி, டிவியில் வைக்கப்படும் அளவுக்கு அதிகமான ஒலிவரை எல்லாமே ‘சமூக ஒலிமாசு’ (Community Noise) என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பல இயந்திரங்கள் ஓடுகின்றன. அந்த இயந்திரங்கள் எழுப்பும் ஒலி என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறி மாசு ஏற்படுத்தும் காற்று, நீர் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அது ஏற்படுத்தும் சத்தத்திற்கு கொடுப்பதில்லை. அது தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களை மட்டுமல்லாது, தொழிற்சாலைகளை ஒட்டி இருக்கும் குடியிருப்புப் பகுதிகளையும் பெரியளவில் பாதிக்கிறது. வாகனச் சத்தங்கள் என்பது இன்று தவிர்க்கவே முடியாத ஒலிமாசாக உருவாகியிருக்கிறது. இதுவல்லாமல், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் உங்கள் இயர்போனில் அதிகச் சத்தம் வைத்து நீங்கள் கேட்பது என்பது உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒலிமாசு.
பாதிப்புகள் என்ன?
ஒலிமாசினால் செவித்திறன் பாதிக்கும் அல்லது செவித்திறன் பறிபோகும் என்பதுதான் பொதுவான கருத்து. அது உண்மையும் கூட. ஆனால், ஒலி மாசின் பாதிப்பு அது மட்டுமே கிடையாது. மன அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக ஒலிமாசு இருக்கிறது. உங்களுக்குப் பின்னால், ஒரு வண்டி நிறுத்தாமல் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டேயிருந்தால் என்ன நடக்கும்? அதன் சத்தம் காதைக் கிழிக்கும். அதற்கும் மேல் மிகப் பெரிய கோபம், எரிச்சல், வெறுப்புதான் ஏற்படும். தொடர்ச்சியாக ஹைபர் டென்ஷனுக்கான காரணியாகவும் ஒலிமாசு இருக்கிறது. அதீத மன அழுத்தம், ரத்த அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தலைவலி, தூக்கமின்மை டிமென்ஷியா (Dementia) போன்றவற்றுக்கும் ஒலிமாசு காரணமாகலாம்.

எந்திரன் “சிட்டி” ரோபோ எடுத்த “ஒலிமாசு” பாடம்!
மிக அதிக ஒலியைத் திடீரெனக் கேட்கும்போது அது நேரடியாக செவிப் பறையை (Ear Drum) பாதிக்கும். மிதமான சத்தத்தை நீண்ட நேரம் கேட்டுக் கொண்டேயிருந்தால் அது காதின் நடுப்பகுதியை (Middle Ear) பாதிக்கும். அதிகச் சத்தத்தில் இருக்கும் தாயின் கருவறையில் இருக்கும் சிசுவின் இதயத்துடிப்பு பெருமளவு பாதிக்கும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி உறங்கும் நேரத்தில் ஒலிமாசு 30 டெசிபலைத் தாண்டக்கூடாது என்கிறது. அதே போல், ஒரு வகுப்பறையில் ஒலிமாசு 35 டெசிபலைத் தாண்டாமல் இருந்தால்தான் குழந்தைகளால் பாடங்களைச் சரிவரக் கவனிக்க முடியும். ஆனால், சாதாரணமாகவே நகரங்களில் ஒலிமாசு 50 டெசிபல்களைத் தாண்டித்தான் இருக்கிறது. இது குழந்தைகளின் கவனிப்புத் திறனைப் பெருமளவு பாதிக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஒலி மாசினால் டின்னிடஸ் (Tinnitus) ஏற்படும். அதாவது, அமைதியான நேரங்களில்கூட காதுகளில் ஏதோ ஒரு சத்தம், கேட்டுக் கொண்டேயிருக்கும். தீபாவளி நேரத்தில் பட்டாசு சத்தத்தால் குழந்தைகளுக்கு இது தற்காலிகமாக ஏற்படுவதுண்டு.
ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் ஒரு காட்சி ‘ஒலி மாசு’ குறித்துப் புரிந்து கொள்ள உதவலாம். நாயகி பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பக்கம் கோயில் திருவிழாவிற்கு ஸ்பீக்கர்களைக் கட்டி அதிக ஒலி எழுப்பிக் கொண்டிருப்பார்கள், மற்றொரு பக்கம் அதிகச் சத்தத்தை வைத்துச் சிலர் நடனப் பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள். அந்தச் சத்தம் பரீட்சைக்குப் படிக்கும் நாயகியின் கவனத்தை மொத்தமாகச் சிதறடிக்க, இறுதியில் சிட்டி ரோபா வந்து அவர்களைத் துவைத்தெடுக்கும். குறிப்பாக, அந்த நடன கும்பலுக்கு அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்தி, அதனால் அவர்களின் செவிப்பறை கிழிந்து ரத்தம் வருமளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிட்டி ரோபோவின் அந்தக் காட்சி அதிகப்படியான ஒலிமாசு ஒருவரை எப்படி பாதிக்கும் என்பதை விளக்கியிருக்கும்.

தப்பிக்க என்ன வழி?
“ஊட்டி மலைப் பகுதிகளில் ‘தோடர்’ எனும் பழங்குடிகள் இருக்கிறார்கள். 80 வயதில் கூட அவர்களுக்குச் செவித்திறன் அத்தனை துல்லியமாக இருக்கும். காரணம் அவர்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கைமுறை. அதே நேரம், நகரங்களில் 45 வயதைக் கடந்தாலே ஒருவருக்கு 50 சதவிகித செவித்திறன் குறைந்துவிடுகிறது.
ஒரு விமானம் பறக்கும்போது அது 120 டெசிபல் அளவு ஒலிமாசை ஏற்படுத்தும். பேருந்து மற்றும் லாரிகளில் ஏர் ஹாரன் 110 டெசிபல் அளவு இரைச்சலை ஏற்படுத்துகிறது. இந்தளவு சத்தத்தில் தொடர்ந்து 20 நிமிடங்கள் இருந்தால், தற்காலிகமாக காது கேட்காது. குறிப்பாக, பல தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் ஒலிமாசைத் தடுக்க மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. ஆனால், நாம் இதில் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது. தனி மனிதராக உங்கள் வீட்டில் அதிக ஒலி எழுப்பாத வண்ணம் வாழ்ந்து உங்களைத் தற்காத்துக்கொள்ளலாம். அதிகச் சத்தம் எழும் பகுதிகளுக்குச் செல்லும்போது காதில் ‘இயர் ப்ளக்’ (Ear Plugs) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் ஓரளவுக்கு உங்களைத் தற்காத்துக் கொள்ளலாம். மற்றபடி இதற்கான நிரந்தரத் தீர்வு என்பது மொத்தச் சமூக மாற்றம், இயற்கைசார்ந்த வாழ்வு போன்றவைதான். ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம்வரை அதற்கான சாத்தியங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை’’ என்கிறார் ஆடியாலஜி நிபுணர். பாலகிருஷ்ணன்.
இதைப் படித்து முடிக்கும் நொடி... உங்களைச் சுற்றிக் கேட்கும் சத்தங்களை கவனியுங்கள். ஒரு நிமிடம் காதுகளை இறுக மூடிக்கொள்ளுங்கள். அந்த அமைதியை உணருங்கள். மீண்டும் கைகளை விடுவிக்கும்போது என்ன தோன்றுகிறது? சத்தமில்லாத அந்த உலகிலேயே இருந்திட வேண்டும் என்றுதானே?
- இரா.கலைச்செல்வன்
படம்: மதன்சுந்தர், மாடல்: மதுமிதா
இரண்டாமிடத்தில் இந்தியத் தலைநகர்
* சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து சில தொண்டு நிறுவனங்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டன. உலகம் முழுக்க அலசி, ஆராய்ந்து உலகின் அதிக ஒலிமாசு இருக்கும் 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதன் முதலிடத்தில் வந்தது சீனாவின் கான்ஜோ (Guangzhou) நகரம். இரண்டாமிடம் பிடித்தது இந்தியத் தலைநகர் டெல்லி. நான்காவது இடத்தில் இருப்பது மும்பை.
* மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுக்க, மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய 7 நகரங்களில் 70 ஒலிமாசு கண்காணிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. இவற்றின் கண்காணிப்பு அறிக்கையின்படி, குறிப்பிட்ட இந்த நகரங்கள் அனைத்திலுமே ஒலிமாசின் அளவு அனுமதிக்கப் பட்டதைவிடக் கூடுதலாகவே இருக்கிறது.
* ஒலிமாசு மனிதர்களை மட்டுமல்லாமல் வனச் சூழலையும், மிருகங்களையும் கூடப் பெருமளவு பாதிக்கிறது. கடல்வாழ் உயிரினங்களும்கூட ஒலி மாசின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவங்களின் ‘சோனார்’ கருவி ஏற்படுத்தும் ஒலி மாசின் காரணமாகப் பல திமிங்கலங்கள் இறந்ததாகப் பதிவு உள்ளது.
* மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ‘ஆவாஸ் ஃபவுண்டேஷன்’ (Awaaz Foundation). இந்தியாவில் ஒலிமாசு குறித்த பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், ஒலிமாசு தொடர்பான சட்டங்கள் இந்தியாவில் அமல்படுத்தப் படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.