
ஹெல்த் - 9வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்
தொற்றுநோய் மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் தங்களையே அர்ப்பணித்த சில ஆளுமைகளைப் பற்றிக் கடந்த சில இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். இனி, அந்தக் காலத்தில் தொற்றுநோய்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், அவற்றை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றையெல்லாம் கடந்து மனித குலம் எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது என்றெல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.

அந்தக் காலத்தில் மிகப்பெரும் பிரச்னைகளாக இருந்தவை தொற்றுநோய்கள்தாம். மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை போன்ற தொற்றாநோய்கள் எல்லாம் அப்போது பெரிய அளவில் இல்லை. நாற்பது, ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் இதுமாதிரி நோய்களெல்லாம் வரும். மற்றபடி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும், ‘உண்டு, இல்லை’யென்று வதைத்தவை தொற்றுநோய்கள்தாம்.
அப்போதெல்லாம் நிறைய யுத்தங்கள் நடக்கும். ஒரு நாட்டு அரசன், இன்னொரு நாட்டு அரசனோடு யுத்தம் செய்வான். ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மோதிக்கொள்வார்கள். அந்த மோதலில் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்படும். அந்தக் காயங்களில் ஏற்படுகிற தொற்று நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இதை மருத்துவ மொழியில் ‘ஊண்ட் இன்ஃபெக்ஷன்’ (Wound Infection) என்பார்கள். அடுத்ததாக, பால்வினை நோய்கள். ‘கொனோரியா’ (Gonorrhea), ‘சிபிலிஸ்’ (Syphilis), ‘கிரானுலோமா இங்க்யூனைல்’ (Granuloma Inguinale), ‘லிம்போகிரானூலோமோ வெனீரியம்’ (Lymphogranuloma Venereum), ‘சாங்க்ராய்டு’(Chancroid) என ஐந்துவிதமான பால்வினை நோய்கள் உலகத்தைச் சுழற்றியடித்தன.

மூன்றாவது, காசநோய். இதுபற்றி எல்லோருக்கும் தெரியும். இன்றளவும் மனித குலத்துக்குச் சவாலாக இருக்கும் நோய். இந்தியாவில் ஒவ்வோர் ஐந்து நிமிடங்களுக்கும் இரண்டு பேர்; ஆண்டுக்கு 4.2 லட்சம் பேரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்களில் சுமார் 10 லட்சம் பேர் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
இதுவும் அந்தக் காலத்தில் மக்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இன்றாவது காசநோய்க்கு ஒரு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துவிட்டோம். அந்தக்காலத்தில் அதுவும் இல்லை. ஒருவருக்கு வந்தால், அவரை அறியாமலே தன்னால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்குப் பரப்பிவிட்டு, நோய்முற்றி இறந்து விடுவார். இவற்றைத் தவிர, சில வைரஸ் நோய்கள். சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை, ரூபெல்லா, ஃப்ளூ போன்ற வைரஸ் நோய்களால் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். குறிப்பாக, குழந்தைகள். இவற்றோடு நிமோனியாவும் (Pneumonia) மிகப்பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. வயதானவர்களைக் குறிவைத்துத் தாக்கியது இந்த நோய். அடுத்தது வயிற்றுப்போக்கு. தண்ணீர், சுற்றுச்சூழல் குறித்தெல்லாம் அந்தக்காலத்தில் போதிய அளவுக்கு விழிப்பு உணர்வு இல்லாததால் காலரா போன்ற நோய்கள் வந்து மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தன.
பிரசவமே அந்தக் காலத்தில் சிக்கல்தான். பிரசவத்திலேயே பாதிக் குழந்தைகள் இறந்து விடுவார்கள். அதைக்கடந்து தப்பி வரும் குழந்தைகளில் பெரும்பகுதி, இதுமாதிரி நோய்களால் உயிரிழந்துவிடுவார்கள். பத்தில் இருவரோ, மூவரோதான் எல்லாவற்றையும் கடந்து வருவார்கள். இந்த நோய்களுக்கெல்லாம் நாம் மருந்து கண்டுபிடிக்கத் தொடங்கியது 1930-ம் ஆண்டுக்குப் பிறகுதான். அதற்கு முன்பாக, எந்த நோய்க்கும் இதுதான் சிகிச்சை என்று குறிப்பிட்ட ஒரு சிகிச்சை முறை கிடையாது. ‘எப்படி வருகிறது’ என்று தெரிந்தால்தானே அதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ மருந்துகள் கண்டுபிடிக்க முடியும்? அந்தக் காலத்தில் அதுவே தெரியவில்லை. அதனால் மனம் போன போக்கில் சிகிச்சை அளிப்பார்கள். அந்தச் சிகிச்சை முறைகளையெல்லாம் கேட்டால் உண்மையிலேயே அதிர்ந்து போவீர்கள்.
அடுத்த இதழில் அவற்றைப் பற்றிப் பேசுவோம்!
- களைவோம்