ஹெல்த்
Published:Updated:

சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!

சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!

எஸ்.முத்துச்செல்வக்குமார், நீரிழிவு சிறப்பு மருத்துவர்

ம் பூங்காக்களிலெல்லாம் பெரும்பாலும் வயதானவர்கள்தாம்  வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், ‘உடற்பயிற்சியை எல்லாம் வயதானபிறகுப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், ‘பல் போனபிறகு தொடங்குவதைவிட, பல் முளைக்கும்போதே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும்’ என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ‘குழந்தைகள் குண்டாக இருப்பதுதான் நல்லது’ என்று பலரும் கருதுகிறார்கள். அதனால்தான் நமது நாட்டில், ‘கொழுகொழு குழந்தைகள் போட்டி’யை நடத்துகிறார்கள். ‘குழந்தைகள், சிறுவர்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் நம் மக்கள் மனதில் இருக்கிறது.

‘வளரும் பருவத்தினருக்கு உணவுக் கட்டுப்பாடுகளும் உடற்பயிற்சியும் தேவையில்லை, வயதானவர்களுக்கே அது அவசியம்’ என்ற தவறான கருத்தை விதைத்து விட்டார்கள்.  இதன் காரணமாக, இன்றைய சிறுவர்களில் பலர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!

குழந்தைகளின் உடல்பருமன் என்பது உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகில், ஐந்து வயதுக்குட்பட்ட 4.3 கோடி குழந்தைகள் உடல் பருமனோடு வாழ்கிறார்கள். இந்தியாவில், இரண்டு வயது முதல் 17 வயது வரையுள்ளவர்களில் சுமார் 18.2 சதவிகிதம் பேர் உடல் பருமனாக இருக்கிறார்கள். ‘வளர்ந்தால், பருமன் குறைந்து சரியான எடைக்கு வந்துவிடுவார்கள்’ என்று தங்களுக்குத் தாங்களே பெற்றோர் பொய் சமாதானம் செய்துகொள்கிறார்கள். ஆனால், சிறுவர்களின் உடல்பருமன் என்பது உடனே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னையாகும்.

குழந்தைகள் உடல் பருமனாவதை ஆரம்பத்திலேயே உணர்ந்து வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்கள் பெரியவர்களாகும்போதும் குண்டாக இருப்பதுடன், பல்வேறு உடல் பாதிப்புகளுக்கும் ஆளாவார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளில் சில...

* சர்க்கரை நோய் ஏற்படலாம்.

* ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

* ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே ஆஸ்துமா இருந்தால், அது இன்னும் வீரியமாகும். உறக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படும்.

* சக குழந்தைகளோடு ஒப்பிடும்போது, இவர்கள் மன அழுத்தம், மனச்சோர்வு உடையவர்களாக இருப்பார்கள்.

* பல்வேறு உடல், தசை, மூட்டுவாத பாதிப்புகள் ஏற்படும்.

சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

* வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையோடு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

* தசை, எலும்புகள், மூட்டுகள் வலிமைபெறும். விளையாட்டுகளில் ஈடுபட உடல் ஏதுவாக அமையும்.

* ஆழ்ந்த உறக்கம்  வரும். திறமையாளர்களாக, அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

* தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.

* நோய்கள் இவர்களை எளிதில் பாதிப்பதில்லை.

உடற்பயிற்சியை எப்போது தொடங்க வேண்டும்?

குழந்தை, பிறந்ததில் இருந்தே இயல்பாக உடற்பயிற்சியைத் தொடங்கிவிடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். கை கால்களை அசைப்பது, தலையை இருபுறமும் திருப்பிப்பார்த்து, உடலை அசைப்பது என்று குழந்தைகள் தங்களுக்கான உடற்பயிற்சியைச் செய்கிறார்கள்.

5-17 வயது வரை

* ஐந்து வயதிலிருந்து 17 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளியிலும் வீட்டிலும் பல்வேறு உடற்பயிற்சிகள் அவசியம்.

* இவர்களுக்குக் குறைந்தது தினமும் ஒரு மணிநேரப் பயிற்சி தேவை.

* டி.வி, கம்யூட்டர், வீடியோ கேம் போன்றவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வேகமாக நடத்தல், ஓடுதல், குதித்தல், நடனமாடுதல், பூப்பந்து, உதைபந்து, டென்னிஸ், நீச்சல், வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை நண்பர்களோடு சேர்ந்து விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்தாலே போதும்.

சரியான தொடக்கம் அவசியம்

பிறந்ததில் இருந்து ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளின் எடை, உடல் வளர்ச்சி ஆகியவற்றைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அனைத்து தடுப்பூசிகளையும் முறையாகப் போடவேண்டும்.

உணவிலும் மாற்றம் வேண்டும்.

சிறுவயதில் இருந்தே, அதிகச் சர்க்கரை மிகுந்த உணவுகள், கொழுப்புச்சத்து மிக்க உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், குளிரூட்டப்பட்ட பானங்கள், நொறுக்குத் தீனிகள் கொடுத்துப் பழக்கக்கூடாது. எல்லா சத்துகளும் உள்ள சரிவிகித உணவுகளைக் கொடுப்பதுடன், தினமும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் சிறுவர்களையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல்நிலையைப் பொறுத்து, உடற்பயிற்சி முறைகளை மாற்றி அமைக்கவேண்டும்.

எனவே, உடற்பயிற்சியாளரைப் பார்க்கும்முன், சரியான மருத்துவ நிபுணரை ஆலோசனை செய்வது நல்லது. குழந்தைகள், சிறுவர்களின் உடல்நிலை, உடல் தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பல்வேறு பிறவிக்கோளாறுகள்,  இதய நோய்கள் உள்ளவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டுவாதப் பிரச்னை உள்ளவர்கள், பல்வேறு தசை - நரம்பு நோய் மற்றும் நலிவுக் கோளாறு உள்ளவர்கள், ரத்தக் கசிவுப் பிரச்னை உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என உடலாலும் மனதாலும் பாதிப்புள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மருத்துவரின் அறிவுரை பெறாமல் உடற்பயிற்சி செய்யவும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது என்பதைப் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படம்: பா.காளிமுத்து, மாடல்: த.தாரிஷா

தவழும் பருவத்தில்

தவழும்போதும் குழந்தைகள் சிறிதும் ஓய்வெடுப்பதில்லை. உற்சாகமாக, சுறுசுறுப்பாகக் கையில் கிடைப்பதை எடுத்துப் பார்ப்பது, ஏதாவது ஒரு வண்ணத்தில் இருக்கும் பொருள்மீது ஈர்க்கப்பட்டு, அதை நோக்கிச்செல்வது என்று இயங்கிக்கொண்டே இருப்பார்கள்.

சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!

நடக்கும் பருவத்தில்

நடக்கத் தொடங்கும் பருவத்தில், தினமும் குறைந்தது மூன்று மணி நேரமாவது குழந்தைகள் நடக்கின்றனர். நிற்பது, அமர்வது, எழுந்து மெதுவாக நடப்பது, எதையாவது தேடுவது எனக் குழந்தைகள் ஏதேனும் ஒரு செயலைச் செய்துகொண்டே இருப்பார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி உடல் பருமனோடு இருந்தால், நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது, நீச்சல் கற்றுக்கொடுப்பது, சைக்கிள் ஓட்டச் செய்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தலாம்.