ஹெல்த்
Published:Updated:

குரல் காக்கும் பனங்கற்கண்டு!

குரல் காக்கும் பனங்கற்கண்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
குரல் காக்கும் பனங்கற்கண்டு!

எட்வர்டு பெரியநாயகம், இயற்கை மருத்துவர்

னைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.

 * பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைய வேண்டும். இதை இரவில் தூங்கப்போவதற்கு முன் குடித்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகலும். வாய்வுத்தொல்லையும் நீங்கும்.

 *  பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். தாகமும் தணியும்.

குரல் காக்கும் பனங்கற்கண்டு!

* முருங்கைப்பூவைப் பாலில் வேகவைத்துப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார். இதை இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் உடலில் புதுத்தெம்பு கிடைக்கும். உடல் மெலிந்த குழந்தைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம்.

  * 100 கிராம் பனங்கற்கண்டில் 0.20 கிராம் புரதம், 0.04 கிராம் கொழுப்பு, 98.76 கிராம் சர்க்கரை, 0.30 கிராம் உலோக உப்புகள், 58.70 மி.லி கிராம் கால்சியம், 5.40 மி.லி கிராம் பாஸ்பரஸ் உள்ளன.

 *  அதிமதுரத்துடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி இதமான சூட்டில் குடித்தால் தொண்டைப்புண் சரியாகும்.

குரல் காக்கும் பனங்கற்கண்டு!

* சுக்கு, மிளகு, திப்பிலியைப் பொடியாக்கி அதோடு பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும். பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் எனக் குரலைப் பயன்படுத்திப் பணியாற்றுபவர்களுக்குத் தொண்டை தொடர்பான பிரச்னைகள் குணமாகும்.

 *  கர்ப்பிணிகள் சில நேரங்களில் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும்.

- எம். மரியபெல்சின்